மோடி ஆட்சியில் மத்திய பட்ஜெட்களில் தனித்துவம் பெறும் தமிழர்கள்! - சிறப்பு தொகுப்பு

மோடி ஆட்சியில் மத்திய பட்ஜெட்களில் தனித்துவம் பெறும் தமிழர்கள்! - சிறப்பு தொகுப்பு
மோடி ஆட்சியில் மத்திய பட்ஜெட்களில் தனித்துவம் பெறும் தமிழர்கள்! - சிறப்பு தொகுப்பு
Published on

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், தமிழரான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பட்ஜெட் தமிழ் மணம் கமழ உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மணம் என அழுத்தமாகச் சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை அறிய, கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல்களை நாம் சற்று திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. 

  • கடந்த 2021-ம் ஆண்டு"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" என நிதிநிலை அறிக்கையில் திருக்குறளை மேற்கோள்காட்டி வரி விதிப்பு குறித்து பேசியிருந்ததார் நிர்மலா சீதாராமன்.
  • 2020-ம் வருடத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கையில் "பூமி திருத்தி உண்" என ஆத்திச்சூடி மேற்கோளுடன் பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • 2019ஆம் வருடத்தில் "யானை புகுந்த நிலம்" என்கிற பிசிராந்தையாரின் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி, வரிவசூல் நடவடிக்கைகள் எந்தவித சேதமும் இன்றி நடைபெற வேண்டும் நினைவு கூர்ந்தார். பாண்டிய அரசன் அறிவுடை நம்பி பெற்ற இந்த அறிவுரையை கவனமாக இந்த அரசு பின்பற்றும் எனவும் வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகள் நேராது எனவும் அவர் தமிழ் வழியாக வலியுறுத்தினார். பொதுத்தேர்தல் நடைபெற்ற வருடம் என்பதால், 2019-ல் நிதிநிலை அறிக்கை ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒவ்வொரு வருடமும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ் மணக்க பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் தமிழர்களின் பங்கும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட டிவி சோமநாதன், இந்த வருட பட்ஜெட் ஒருங்கிணைப்பு பணிகளை முன்நின்று நடத்திவருகிறார். பட்ஜெட் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு செயலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் குழுவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சோமநாதன் தலைமை வகிக்கிறார் என்பது இந்த வருட நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சமாகும்.

நிதி அமைச்சகத்தில் செயலாளர் அந்தஸ்தில் பல அதிகாரிகள் செயல்பட்டு வந்தாலும், அந்த குழுவுக்கு தலைமை தாங்குவது நிதித்துறை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படும் அதிகாரிதான். இந்த முக்கிய பொறுப்பை இந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சோமநாதன் திறம்பட மேலாண்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசில் முதல்வர் அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள சோமநாதன், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து பிரபலமானவர். உலக வங்கியிலும் பணிபுரிந்த பெருமை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பது இன்னொரு சிறப்பு.

சென்ற வாரம் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அனந்த நாகேஸ்வரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த தமிழர் என்பது நிதிநிலை அறிக்கைக்கும் தமிழகத்திற்கும் தொடரும் உறவில் புதிய சேர்க்கை. பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி என்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்பு பொருளாதார ஆய்வு அறிக்கையை விளக்கி இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து தெளிவு உண்டாகும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற அனந்த நாகஸ்வரன் சென்ற வருடம் வரை பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.

நிர்மலா சீதாராமன் மற்றும் டிவி சோமநாதன் ஆகியோருக்கு நன்கு பரிச்சயமான அனந்த நாகேஸ்வரன், அடுத்த வருட பொருளாதார ஆய்வறிக்கையை உருவாக்கும் பணிகள் மற்றும் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளை கவனிக்க உள்ளார். இதற்கு முந்தைய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு தலைமைப் பொருளாதார ஆலோசகர்களாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் தாக்கம் இப்படி தொடர்ந்து பட்ஜெட் உருவாக்கத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்த வருட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது நிர்மலா சீதாராமன் தமிழில் என்ன மேற்கோள் காட்டுவார் என்பதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி சுப்பிரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com