“மத்திய அரசின் சுமையை சாமானிய மக்கள்தான் சுமக்கிறார்கள்” - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்

“மத்திய அரசின் சுமையை சாமானிய மக்கள்தான் சுமக்கிறார்கள்” - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
“மத்திய அரசின் சுமையை சாமானிய மக்கள்தான் சுமக்கிறார்கள்” - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
Published on

மத்திய அரசின் சுமையை சாமானிய மக்கள்தான் சுமக்கிறார்கள் என பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி, அதாவது செஸ் பல பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும், டீசல் மீது 4 ரூபாயும் விதிக்கப்பட்டு பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் மீதான அடிப்படை உற்பத்தி வரியாக இருந்த 2 ரூபாய் 98 காசு ஒரு ரூபாய் 40 காசாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் உற்பத்தி வரி 12 ரூபாயில் இருந்து 11 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல டீசல் மீதான அடிப்படை உற்பத்தி வரி 4 ரூபாய் 83 காசில் இருந்து ஒரு ரூபாய் 80 காசாகவும், கூடுதல் உற்பத்தி வரி 9 ரூபாயில் இருந்து 8 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் புதிய தலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, “எத்தனை மினி பட்ஜெட்டுகள் தாக்கல் செய்தாலும் இந்த பட்ஜெட்டுக்கு உள்ளேதான் வந்தாக வேண்டும். கொரோனா முடக்கத்தில் அரசு செலவு செய்தவற்கு தயங்கியதன் விளைவு வரி வருவாய் குறைந்து போயுள்ளது. யாரிடம் இருந்து வரி வாங்க வேண்டுமோ அவர்களிடம் இருந்து குறைத்துவிட்டு அதற்கு பதிலாக எந்த பொருட்களெல்லாம் நெகிழ்ச்சிதன்மையற்ற பொருளோ, அதாவது பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் மீது வரியை உயர்த்துகின்றனர். மேலும் மேலும் வரியை போட்டு இந்த விலையில் வைத்துள்ளனர். அதன்வழியாக நாட்டில் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த விலைவாசி ஏற்றத்தை குறைக்க அரசு மாற்றுவழி எதையும் கண்டுபிடிக்கவில்லை.

கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம், வருமான இழப்பு உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் குறைக்கவில்லை. மினி பட்ஜெட்டின்போது பெரிய நிறுவனங்கள் எல்லாம் முதலீடு செய்வார்கள் என நம்பி, அவர்கள் கட்டவேண்டிய கிட்டதட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரியை வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் வரிவிகிதத்தை குறைத்துவிட்டார்கள்.

அந்த பெரிய நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய வருமானத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு அதற்கு பதிலாக சாமானிய மக்கள் 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் பெட்ரோல் போடுபவர்களின் மீது திணிக்கப்படுகிறது. அனைத்திற்கும் சாமானிய மக்கள் வரி கட்ட வேண்டியிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட அரசின் வரிச்சுமையை முழுக்க முழுக்க சாமானியர்கள்தான் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை.

பெரிய மத்திய பட்ஜெட் என்று கூறுகிறார்கள். உள்கட்டமைப்புக்கு மட்டுமே 5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு என்று சொல்கிறார்கள். அந்த உள்கட்டமைப்பால் யாருக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

சென்னை மெட்டோ விரிவாக்கத்திற்கு 63,246 கோடி ஒதுக்கீடு செய்வதாக ஒரு நம்பர் கொடுக்கிறார்கள். அவ்வளவும் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்கப்போகிறதா? முதல்கட்டமாக நடைபெற்ற் பணிக்கே 20 சதவீதம்தான் கொடுத்தார்கள். அவர்கள் அறிவித்த அறிவிப்பில் வெறும் 2000 கோடிதான் வரும். ஆனால் அறிவிக்கும்போது மட்டும் மிகப்பெரிய அளவில் அறிவிக்கிறார்கள். இவர்கள் வெறும் எண்களை மட்டும்தான் அறிவிக்கிறார்கள். 5 ஆண்டு, 10 ஆண்டுகளில் செய்வதையெல்லாம் பட்ஜெட்டில் சொல்கிறார்கள்.

இதைவிடுத்து இந்த ஆண்டு இவ்வளவு வருமானம் வருகிறது. நாங்கள் இதையெல்லாம் செய்யப்போகிறோம் என சொல்ல வேண்டும். அப்போதுதான் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். இந்தியாவின் வரி ஜிடிபி விகிதம் 9 சதவீதம் தான் இருக்கிறது. குறைந்துகொண்டே செல்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா கடைசியில் இருந்து 4 வது இடத்தில் உள்ளது. எந்த நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு இவ்வளவு வரி போட்டு வைத்திருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com