”ஓ.பி.சி இடஒதுக்கீட்டை கொண்டு வந்தபோது ஏற்படுத்திய தாக்கம்தான் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பின்மூலம் கோடிக்கணக்கான ஓ.பி.சி மாணவர்கள் பயன்பெறப் போகிறார்கள். ஓ.பி.சி பிரிவில் வரும் மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் மூலம் சிதைந்திருந்த நேரத்தில் இட ஒதுக்கீடும் இல்லை என்றபோது இன்னும் ஒடிந்துவிட்டார்கள். ஆனால், இந்தத் தீர்ப்பு மாணவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் மிகப்பெரிய வெற்றி தீர்ப்பு” என்று உற்சாகமுடன் பேசுகிறார், பிரபல வழக்கறிஞரும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் எம்.பி.
மருத்துவ பட்டமேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு தி.மு.க, இடதுசாரிகள், அ,தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில், ”இட ஒதுக்கீடு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற மருத்துவக் கவுன்சிலின் விளக்கத்தை ஏற்க முடியாது. அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். பலக்கட்சிகள் ஓ.பி.சி பிரிவினருக்கான வழக்குகளை தொடர்ந்திருந்தாலும் தி.மு.க தொடர்ந்த வழக்கும் வாதமும்தான் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. முதன் முதலில் தி.மு.க சார்பில் இவ்வழக்கை தொடுத்து வெற்றியும் கண்ட வில்சன் எம்.பியிடம் வாழ்த்துகளோடு பேசினோம்…
இந்த வழக்கை தொடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் பலர், தங்களுக்கு 2018 ஆம் ஆண்டு மாநில அரசு மத்திய தொகுப்பிற்கு கொடுத்த முதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றுக்கூறி என்னிடம் வந்தார்கள். மருத்துவர்கள் சங்கமும், இதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. இப்படியே, தொடர்ந்தால் ஒவ்வொரு வருடமும் ஓ.பி.சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். ஆனால், மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞரோ, ‘சலோனி குமாரி வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. நீங்கள் விசாரிக்கவேண்டாம். அதன்பிறகு விசாரியுங்கள்’ என்றார். உயர்நீதிமன்றமும் ’விசாரிக்கப் போவதில்லை’ என்று தள்ளி வைத்தது.
நான் மாநிலங்கவை உறுப்பினராக கடந்த வருடம் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றவுடன், எங்கள் கட்சித் தலைவர் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு குறித்து பேசச்சொன்னார் . அதன்படி, ராஜ்யசபாவில் பதவியேற்ற அடுத்தநாளே முதல் உரையாக மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு குறித்துதான் பேசினேன் . பின்னர் தலைவர் கூறியதால், மத்திய சுகாதராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த வருடம் நவம்பர் 1 ஆம் தேதி கடிதம் ஏழுதினேன். ஆனால், அவர் அதற்கடுத்த மாதமே, சில காரணங்களைக்கூறி எனது கோரிக்கையை தட்டிக் கழித்தார். இதனால், எங்கள் தலைவர் ஹர்ஷ்வர்தனை நேரிலேயே சந்தித்து பேசச்சொல்லியதன் பெயரில், அவரை கடந்த ஜனவரி மாதம் சந்தித்து மீண்டும் கடிதம் கொடுத்தேன். ஆனால், இட ஒதுக்கீடு கொடுக்காமல் முதுநிலை பட்டமேற்படிப்பிற்கான தேர்வு முடிவுகளை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார்கள். இதனால், ‘பொறுத்தது போதும் நீதிமன்றத்திற்கு செல்வோம்’ என்றார், தலைவர்.
எனவே, கடந்த மே 28 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பாக வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கின் மனுதார் டி.கே.எஸ் இளங்கோவன். நீதியரசர் நாகேஷ்வரராவ் அடங்கிய அமர்வு முன்பு. கடந்த ஜுன் 11 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ’உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம். அங்கே செல்லுங்கள்’ என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அன்று மாலையிலேயே தி.மு.க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் முதன் முதலில் வழக்குத் தெடர்ந்தது தி.மு.கதான். ஆனால், உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது ’நாங்கள் போட்ட வழக்கைப்போல் உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி வழக்கு நிலுவையில் இருப்பதாலும், அது ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதாலும் எங்கள் வழக்குகளை விசாரணை செய்யக்கூடாது’ என்று மத்திய அரசின் வழக்கறிஞர் வாதம் செய்தார் . இதனால், உயர்நீதி மன்றம் வழக்கை விசாரணை செய்ய மறுத்து கடந்த ஜுலை 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தித்தை மீண்டும் அணுகியபோது, கடந்த 13 ஆம் தேதி சலோனி குமாரி வழக்கைப் பார்த்துவிட்டு ’அந்த வழக்குக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதனை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம்’ என்று தீர்ப்பு வழங்கியது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சலோனி குமாரியின் வழக்கும் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 % இட ஒதுக்கீடு கோரும் வழக்குதான். ஆனால், 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அவ்வழக்கையே சுட்டிக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருந்தது மத்திய அரசு. இந்த விவரங்களை நீங்கள் பார்க்கும் போது மத்திய அரசின் நோக்கம் என்ன? எங்களை சுத்தலில் விடலாம் என்றுதானே நினைத்தது?
தீர்ப்பு வந்தபிறகு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் என்ன சொன்னார்?
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்துகொண்டே இருக்கும்போது, என்னை உள்ளே அழைத்தவர் நடந்தவற்றை விரிவாகக் கேட்டுவிட்டு பாராட்டினார். அங்கிருந்த மற்றத் தலைவர்களும் பாராட்டினார்கள்.
குறிப்பாக, நீட் வந்த பிறகு ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் வருடத்திற்கு எத்தனை முதுநிலை மருத்துவர்களை இழந்திருக்கிறோம்?
கடந்த 4 ஆண்டுகளில் 2729 இடங்களை தமிழக ஓ.பி.சி மாணவர்கள் இழந்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 1919 இடங்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பில் உள்ளன. மத்திய தொகுப்பிற்கு 860 முதுநிலை இடங்கள் ஒதுக்குகிறது தமிழக அரசு. இதில், வருடத்திற்கு 430 முதுநிலை இடங்கள் ஓ.பி.சி மாணவர்களுக்கு வரவேண்டும். அதேபோல், வருடத்திற்கு 506 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்குகிறது . இதிலும், 253 இடங்கள் ஓ.பி.சி மாணவர்களுக்கானது. ஆனால், ஒரு இடங்கள்கூட ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில்லை. இந்த நான்கு வருடங்களாக நம் மாநிலத்திற்கு கொடுக்கவேண்டிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஒரு தரப்பினரை ஏமாற்றி மற்றொரு தரப்பினருக்கு கொடுப்பது நியாயமற்றது. ஓ.பி.சி பிரிவினருக்கு மட்டுமல்ல. எஸ்.சி பிரிவினருக்கும் இதே, அநீதியைத்தான் இழைத்து வருகிறது மத்திய அரசு. எஸ்.சி பிரிவினருக்கு 18 % எஸ்.டி பிரிவினருக்கு 1 % என்று மொத்தம் 19 % தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால், மத்திய அரசோ மக்கள் தொகை அதிகமாக உள்ள எஸ்.சி பிரிவினருக்கு15 %, குறைவாக உள்ள எஸ்.டி பிரிவினருக்கு7.5 % வழங்குகிறது. தமிழகம் கொடுக்கும் இட ஒதுக்கீட்டோடு, இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் எஸ்.சி பிரிவினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு குறைகிறது. இதனால், வருடத்திற்கு 25 முதுநிலை இடங்களும் 15 எம்.பி.பி.எஸ் இடங்களும் எஸ்.சி மாணவர்களுக்கு வரவேண்டும். தற்போது, கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி சட்டம் அமைத்துவிட்டால் எஸ்.சி பிரிவினருக்கான 3 % இடங்களும் கிடைத்துவிடும். இதனால், பலனடையப்போவது எஸ்.சி பிரிவினரும்தான். நம் மாநிலத்தில் அரசுதான் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுகிறது.மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்து மருத்துவ உபகரணங்களைக் கொடுத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கல்வித் தரமும் உயர்வாக உள்ளது. இவ்வளவு வசதிகள் இருந்தும், நமக்கே இடஒதுக்கீடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் கடிதம் கொடுக்கும்போது
தீர்ப்பின்போது நீதிபதிகள் எவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டார்கள்?
’இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கடிதம் எழுதினேன். அதற்கு, அவர், 18.12.2019 அன்று எனக்கு எழுதிய பதில் கடிதத்தைதான் தீர்ப்பின்போது நீதிபதிகள் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கினார்கள். அந்தக் கடிதமே, இந்த வழக்கின் டர்னிங் பாயிண்ட். ’இந்தக்கடிதத்திலேயே 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்’ என்றிருக்கிறார் அமைச்சர். ஆனால், அவர் எடுத்த நிலைப்பாடிற்கு எதிராக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் பேசலாமா? என்று மத்திய அரசின் வாதங்களை நிராகரித்து விட்டார்கள் நீதிபதிகள்.
தமிழக பாஜக இத்தீர்ப்பை வரவேற்றுள்ளதே?
அவர்கள் வாயளவில் மட்டுமே வரவேற்கிறார்கள். வேறு வழியில்லாமல் கார்னர் ஆகிவிட்டார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை இட ஒதுக்கீடு கொடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? தருவோம்… தருவோம் என்று ஏன் இத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்க வேண்டும்? இந்த நான்கு வருடத்தில் பாதிக்கப்பட்ட 2700 க்கும் மேற்பட்ட ஓ.பி.சி மாணவர்களின் வாழ்க்கையை எப்படி சரிசெய்வார்கள்? வாய் வழியாக வரவேற்று சொல்பவர்களுக்கு மனம் வழியாக வரவில்லை. பொருளாதரத்தில் பின் தங்கிய பிராமணர்களுக்கு மட்டும் 10 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் எப்படி உடனே கொடுத்தார்கள்? இவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?
தி.மு.க இந்து விரோதக்கட்சி என்று பாஜக குற்றம் சாட்டி வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஓ.பி.சி இட ஒதுக்கீட்டால், அதிகம் பயனடையப்போவது இந்து மக்கள்தான். ஆனால், இந்து மக்களுக்குத்தான் பா.ஜ.க அரசியல் ரீதியாக தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. திமுக இந்து விரோதக் கட்சி என்பவர்களின் எண்ணங்களை முறியடித்துள்ளோம்.
எம்.பியாக ஒரு வருட அரசியல் பயணம் எப்படி போனது?
ஓ.பி.சி இட ஒதுக்கீடு தீர்ப்பை ஒரு வடருத்திற்கான பரிசாகப் பார்க்கிறேன். நான் மாநிலங்களவை உறுப்பினரானவுடனேயே முதல் பிரச்சனையாக ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்துதான் பேசினேன். தலைவரிடம் அனுமதி வாங்கி ’எனது முதல் பேச்சாக ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்து பேசப்போகிறேன். என்னை வாழ்த்துகள்’ என்றுக்கேட்டு அனுமதியையும் வாழ்த்துகளையும் வாங்கினேன். அதற்கடுத்தடுத்து நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தனி பில் போட்டது, உச்சநீதிமன்றக் கிளைகள் அமையவேண்டும் என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு விவாதித்துள்ளேன். நான் இருக்கும் நிலைகுழுவில் 100% வந்திருக்கிறேன் என்று ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்னை பாராட்டியுள்ளார். மேலும், கொரோனா சூழலில் ஏழைகளுக்கு உணவு கொடுத்ததை அரசு தடுத்தபோது எதிர்த்து வழக்குத்தொடுத்தேன். அந்த வழக்கில் நீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது. அதேபோல, வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரவும் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் இப்போதுவரை கண்காணித்துக்கொண்டு வருகிறது. இப்படி மாநிலங்கவை உறுப்பினராகவும், ஒரு வழக்கறிஞராகவும் கடைமைகளை செய்து வருகிறேன். நான் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றதும் “கடமையைச் செய்யவேண்டும் என்றார் தலைவர்”. அவரது நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.
வழக்கறிஞர் – மாநிலங்களவை உறுப்பினர் இரண்டில் எது பிடித்திருக்கிறது?
வழக்கறிஞர் பணிதான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கருப்பு கோட்டுத்தான் எம்.பி பதவியை கொடுக்க வைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் வழக்கறிஞர் பணியே முக்கியமானது. எனது வழக்கறிஞர் தொழிலையே நேசிக்கிறேன். எம்.பி பதவியையும் மதிக்கிறேன். இரண்டையும் இரண்டு கண்களாகப் பார்க்கிறேன்.
மத்திய அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறதா?
இந்த நான்கு வருடமாக இட ஒதுக்கீடு தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி வந்தார்கள். இப்போது மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இனிமேலும் தாமதித்தார்கள் என்றால் மக்கள்தான் தேர்தலில் பதில் சொல்லவேண்டும்.
ஆனால், பா.ஜ.க தரப்பில் மாநிலத்தில் கொடுக்கப்படும் 27 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்றே சொல்லப்பட்டு வருகிறதே?
யார் இடம் கொடுத்து யார் வேண்டாம் என்றோம்? நீதிமன்றத்தில் எங்களது ஆரம்பக்கட்ட விவாதமே ’நீங்கள் சொன்ன 27 சதவீத இட ஒதுக்கீட்டைக்கூட கொடுக்கவில்லையே? ஏன் இழுத்தடிக்கிறீர்கள்?’ என்பதுதான். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் நாடகம் ஆடுகிறது.
வழக்கறிஞராக எத்தனையோ மறக்க முடியாத தீர்ப்புகளைப் பெற்றிருப்பீர்கள். நெகிழ்ச்சியான தீர்ப்பு எது?
புத்தகங்கள்தான் சமூகத்தை நல்வழிப்படுத்தவும் அறிப்பூர்வ சமூகமாக வளரவும் உதவுபவை. அதனால்தான், ஆசியாவிலேயே மிகப்பெரியதாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கொண்டு வந்தார், தலைவர் கலைஞர். அது ஒரு அறிவுக்கடல். அந்த சிறப்புமிக்க நூலகத்தை நம்பித்தான் மாணவர்களும் ஆய்வு மேற்கொள்பவர்களும் அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். காலையில் திறக்கும்போது வருபவர்கள் நூலகம் மூடும்வரையும் தரவுகளை எடுப்பார்கள். அப்படிப்பட்ட நூலகத்தை மூடவிடாமல் செய்ததை, இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்ச்சியடைகிறது. எப்போதும் ஒரு வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால் அது முடிந்துபோய்விடும். ஆனால், இந்த வழக்கு அப்படியல்ல. வழக்கு முடிந்தாலும் உத்தரவுகளை நிறைவேற்றும் வரை நீதிமன்றம் கண்காணித்துக்கொண்டே இருக்கும். அப்படியொரு அபூர்வ தீர்ப்பு இது. அதில், தடை உத்தரவு பெற்றதும், “நீ வில்சன் இல்லை. ‘வின் சன்” என்று பாராட்டினார் தலைவர் கலைஞர். இவை எல்லாவற்றையும் விட தலைவருக்கு மெரினாவில் இடம் வாங்கிக்கொடுத்ததும் பெரும் சோகத்திலும் நெகிழ்ச்சியான தீர்ப்பு. நேற்று தீர்ப்பு வந்ததும் “தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கிக்கொடுத்தீர்கள். இப்போது, தமிழ்நாடு முழுக்க மட்டுமில்லை. இந்தியா முழுக்க ஓ.பி.சியினர் படிக்க வழிவகை செய்துள்ளீர்கள்” என்று நெகிழ்ந்து பேசினார், ஒரு மருத்துவ மாணவர். ஒரு வழக்கிற்கு ஆஜராகி உழைத்து, அதற்கான பலன் கிடைக்கப்போகிறது’ என்பதில்தான் ஆனந்தமே.
உங்கள் குடும்பம்?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனது அப்பா திமுக தொண்டர். அதனால், எனக்கும் சிறுவயதிலிருந்தே திமுக மீது ஈர்ப்பு வந்துவிட்டது. மாணவனாக திமுகவின் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள், ஈழப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். எனது மனைவி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. ஒரே மகன் ரிச்சர்ட் வில்சனும் வழக்கறிஞர்தான்.
- வினி சர்பனா