இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத நிலையில் இன்று லீட்ஸில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்குவாரா கோலி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்கம்மில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவிலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்தத் தொடரில்ல இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் பேட்டிங்கையும் வலுசேர்க்கும் விதமாக இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.
ஆனால், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா இதுவரை ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. பேட்டிங்கை பொறுத்தவரை முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னங்ஸில் 40 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 ரன்களும் சேர்த்தார். மூன்றாவது டெஸ்ட் தொடங்க இருக்கும் லீட்ஸ் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக எப்போதும் இருப்பது உண்டு. ஒருவேளை இன்றைய ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வினுக்கு இடமில்லை என்றே தெரிகிறது.
ஆனால் கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்துப்படி அஸ்வினால் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பதே ஆகும். அதே நேரத்தில் அஸ்வின் ஒன்றும் மோசமான பேட்ஸ்மேனும் இல்லை. அதனால் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. மேலும் உலகத்தரமான ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணியில் வைத்துக்கொண்டு ஏன் கோலிக்கும், ரவிசாஸ்திரிக்கும் தயக்கம் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அதேபோல பேட்டிங்கில் ஒரு பேட்ஸ்மேனுக்குறிய அத்தனை ஷாட்டுகளையும் விளையாடக் கூடியவர் அஸ்வின்.
கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார் அஷ்வின். இதுவரை மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகள். அதில் 32 போட்டிகள் அயலக மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 10 போட்டி, இங்கிலாந்தில் 7 போட்டி, இலங்கையில் 6 போட்டி, வெஸ்ட் இண்டீசில் 4 போட்டி, தென் ஆப்பிரிக்காவில் 3 போட்டி, நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்தில் தலா ஒரு போட்டி அடங்கும். அதன் மூலம் 127 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் தலா இரண்டு அரை சதங்கள் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். எட்ஜ்பாஸ்டன், கென்னிங்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ரோஸ் பவுல் மற்றும் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானங்களில் விளையாடி உள்ளார். 200 ஓவர்கள் வீசி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 14 இன்னிங்ஸ் விளையாடி 261 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்சமாக 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அயல் நாட்டு மண்ணில் அஷ்வின் அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றிய நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கியுள்ளார் அஷ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மூன்று அரை சதங்களை பதிவு செய்துள்ளார். அதே போல பவுலராக 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஃபீல்டிங்கிலும் அசகாயசூரர். இதுவே இந்திய ஆடுகளமாக இருந்திருந்தால் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா என இருவரும் இடம்பிடிப்பது வழக்கம். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த வெளிநாட்டு ஆடுகங்களில் களமிறங்கும்போதுதான் இந்தியாவுக்கு அணி தேர்வில் குழப்பங்களும் சிரமங்களும் வந்து சேர்கிறது.
எனினும் லீட்ஸ் போட்டியில் லார்ட்ஸில் இடம்பெற்ற இந்திய வீரர்களே தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் வெற்றி கூட்டணிகளை கேப்டன்கள் மாற்றமாட்டார்கள். ஒருவேளை மாற்றினால் இந்திய அணியில் இரு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குரும், ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வினும் சேர்க்கப்படலாம். ஆனால் கடைசி நேர ட்விஸ்ட்களை இன்றையப் போட்டியில் இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கலாம், அது கோலியின் கைகளில் இருக்கிறது.