சித்திரைப் பொருட்காட்சி, புத்தக கண்காட்சி : மதுரை தமுக்கம் மைதானம்... அன்றும் இன்றும்!.

சித்திரைப் பொருட்காட்சி, புத்தக கண்காட்சி : மதுரை தமுக்கம் மைதானம்... அன்றும் இன்றும்!.
சித்திரைப் பொருட்காட்சி, புத்தக கண்காட்சி : மதுரை தமுக்கம் மைதானம்... அன்றும் இன்றும்!.
Published on

மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று தமுக்கம் மைதானம்., தமுகமு என்ற தெலுங்கு சொல்லே தமுக்கம் என்றானதாகச் சொல்கின்றனர். வருடா வருடம் அரசு சித்திரைப் பொருட்காட்சிகள் நடக்கும் இடமாக இது உள்ளது.

1981ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது இந்த தமுக்கம் மைதானத்தில்தான். 1982ல் அரசு சார்பில் பாரதியார் நூற்றாண்டு விழாவும் இங்குதான் நடத்தப்பட்டது. பல விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்திருக்கின்றன. தற்போது தமுக்கம் மைதானத்தில் உள்ள கோவில் போன்ற கட்டடம், தமிழன்னை சிலை, அலங்கார வளைவுகள் ஆகியவை உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டவை.

தமுக்கம் மைதானத்தின் பரப்பளவு சுமார் 9 ஏக்கர் ஆகும். இந்த மைதானத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் மிகப் பழமையானது. இதனைச் சுற்றிலும் கதவுகளோ, சுவர்களோ இல்லாத இந்தக் கலையரங்கத்தின் மேற்கூரை தகரத்தால் ஆனது. இந்த இடத்தில் புதிதாக நவீனமான முறையில் ஒரு கலையரங்கத்தைக் கட்டுவதுதான் மதுரை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட போது இருந்த திட்டங்களில் ஒன்று.

மதுரை காந்தி மியூசியத்தின் மேலே நின்று பார்த்தால் தமுக்கம் மைதானம் வெகுபார்வையாக இருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும் உண்டு. இந்த காந்தி மியூசியம் முன்பு ராணி மங்கம்மாள் ஓய்வு எடுக்கும் மாளிகையாக இருந்தது. இந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து அரச குடும்பத்தினர் மல்யுத்தம் மற்றும் மிருகங்களுடனான மோதல்களை கண்டுகளித்ததாகவும் சொல்லப்படுகிறது. மதுரையில் நாயக்கர் வம்சம் வீழ்ந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் கூட இந்த மாளிகையில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்து வந்துள்ளனர். 1871ல் நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்தபோது, இந்த மாளிகையை புதுப்பிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

1882-1886 ஆண்டு காலத்தில் மதுரையின் ஆட்சியராக இருந்த சி.எஸ். க்ரோல் இந்த தமுக்கம் மாளிகையில் குடியேறினார். அவர் அந்த மாளிகையில் வசித்தபோது, 1883ல் தமுக்கத்திற்கு முன்னால் உள்ள 70 ஏக்கர் நிலத்தை வேலியிட்டு பூங்கா ஒன்றை உருவாக்கினார். அதற்கு 'பீப்புள்ஸ் பார்க்' என பெயரிடப்பட்டது. பூங்காவை உருவாக்க மதுரையில் வசித்த நகரத்தார் சமூகத்தினரும் சில ஜமீன்தார்களும், செல்வந்தர்களும் நிதியுதவி செய்தனர். அந்தப் பணத்தில் நிலம் வாங்கப்பட்டு, பிறகு அந்த நிலம் மதுரை நகராட்சியின் பெயருக்கு மாற்றப்பட்டது.

வருடா வருடம் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு நடப்பதற்கு முன்னும் பின்னுமாக ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மைதானத்திற்கு வருவது வழக்கம். அந்த சமயத்தில் தான் ஆண்டுதோறும் அரசு சித்திரைப் பொருட்காட்சி தமுக்கத்தில் நடைபெறும். வைகை வடகரையில் அமைந்திருக்கும் தமுக்கம் மைதானமும் காந்தி மியூசியமும் என்றென்றும் மதுரையின் புகழை உலகுக்கு எடுத்துக் கூறுவதாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com