“தம்பியுடையாள் படைக்கஞ்சாள்!” – கயல்விழி அழகிரி ’ பாச’ பேட்டி!

“தம்பியுடையாள் படைக்கஞ்சாள்!” – கயல்விழி அழகிரி ’ பாச’ பேட்டி!
“தம்பியுடையாள் படைக்கஞ்சாள்!” –   கயல்விழி அழகிரி ’ பாச’ பேட்டி!
Published on

தங்கச்சிகள் அண்ணன்களுக்கும்… அக்காக்கள் தம்பிகளுக்கும் என சகோதர சகோதரிகளுக்குள் அன்பையும் பாசத்தையும் பிணைத்து ‘ராக்கி’ கயிறு கட்டி…  ‘பாதுகாப்பு பந்தம்’ என்கிற பெயரில் இன்று நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகைதான் ரக்‌ஷா பந்தன்.

நீங்களும் உங்கள் தம்பி தயாநிதி அழகிரியும் ‘ரக்‌ஷாபந்தன்’ பண்டிகை நாளில் எப்படி அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வீர்கள்? என்று மு.க. அழகிரியின் மகளும் கவிஞருமான கயல்விழி அழகிரியிடம் நாம் கேட்டபோது,  

“அண்ணன் தங்கச்சிகளும் அக்கா தம்பிகளும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் இந்த ஒருநாளில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. எல்லா, நாட்களுமே சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாட்கள்தான்” என்றவர், தனது தம்பி தயாநிதி அழகிரி மீது வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினார்.  

தம்பி எனது உயிர்!

தம்பி, தயாநிதியை குழந்தையிலிருந்தே எங்கள் வீட்டில் ’துரைம்மா’ என்றுதான் அழைப்போம். எனக்கும் துரைக்கும் 11 வயது வித்தியாசம். அதனாலேயே, எனக்கு அவர் ஒரு குழந்தை மாதிரிதான். நான், இப்போதும்  ‘துரைம்மா’ன்னு பாசமா கூப்பிடுறதைப் பார்த்துட்டு என்னுடைய பையனே,  ‘உனக்கு நான் முக்கியமா? மாமா முக்கியமா?’ ன்னு பல தடைவை செல்ல பொறாமையோடு கேட்டிருக்கான். ஏன்னா, தம்பி என் உயிர். அவரை, எனக்கு அவ்ளோ புடிக்கும்.

பொறுமைக்கு ஒரு உருவம் இருந்தால், அது தம்பி துரையாகத்தான் இருக்கும். எங்கப்பா சின்னதா கோபப்பட்டாக்கூட பதிலுக்கு நாங்க ஏதாவது சொல்லுவோம். ஆனா, துரையை அப்பா என்ன திட்டினாலும் பதிலுக்கு ஒருவார்த்தைக்கூட திருப்பி பேசாம அப்படியே நின்னுக்கிட்டிருப்பார்.  இதுவரைக்கும் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட கோபமா பேசினதே இல்ல. தனியா போயி ஃபீல் பண்ணுவார். அப்புறம், அம்மாதான் போயி அப்பாக்கிட்ட சொல்லுவாங்க.

செயலில்தான் பாசம்!

கடைகுட்டி பையன்… ஒரே பையன்ங்கிறதால அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லம். அதேசமயம் துரையும் அப்பாவோட உணர்வை புரிஞ்சுக்கிட்டு க்ளாஸ்ல எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க்தான். ப்ளஸ்டூவுல 91 % மார்க் எடுத்திருந்தார். அப்படிப்பட்ட, படிப்பாளி. படிக்கிறதுல மட்டுமில்ல, கிரிக்கெட் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் அப்புறம் கல்சுரல்ஸ்லேயுமே ரொம்ப ஆர்வமா கலந்துப்பாரு. அதுவும், தாத்தாவும் (கலைஞர்) தம்பியும் கிரிக்கெட் பற்றி பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பாங்க. இயல்பிலேயே ரொம்ப சாஃப்ட் கேரக்டர். இதுவரைக்கும், எனக்கும் தம்பிக்கும் சண்டை வந்ததே கிடையாது. அதுக்கு முக்கியக்காரணம், அவர் எதையும் கேட்குறதுக்குள்ள நானே கொடுத்துடுவேன். என் பேரு கயல்விழியா இருந்தாலும் வீட்டுல எல்லோரும் என்னை வெண்ணிலான்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, தம்பி மட்டும் வெண்ணிலா அக்காங்குறதை சுறுக்கி இன்னைக்குவரைக்கும் ’வெண்ணிக்கா… வெண்ணிக்கா’ன்னுதான் கூப்பிடுவாரு.

ஆம்பள பசங்கன்னா வெளியில போயி ஏதாவது வம்பு இழுத்துக்கிட்டு வந்து வீட்டுல இருக்கிறங்களை டென்ஷன் பண்ணுவாங்க. அந்தமாதிரி, எந்த டென்ஷனையும் எங்களுக்கு அவர் கொடுத்ததில்ல. நானும் எனது தங்கை அஞ்சுகச் செல்வியும் பாசத்தை வெளிப்படையாக காட்டிக்குவோம். ஆனா, தம்பி அப்படியில்ல. செயலில்தான் பாசத்தைக் காண்பிப்பார். நான், அரசியலில் இருக்கும்போது என்னை ரொம்ப ஊக்கப்படுத்தியது தம்பிதான்.  ‘தம்பி உடையாள் படைக்கு அஞ்சாள்’ங்குற மாதிரி அவரோட, ஊக்கப்படுத்துதல்தான் எனக்கு மிகப்பெரிய பலமா இருந்தது. என்கூட பல மீட்டிங்குகளுக்கு வந்திருக்காரு. அப்போது, இளம்வயதுதான். ஆனா, அக்கா உற்சாகமா அரசியலில் ஈடுபடணும்ங்குறதுக்காக என் கூடவே வந்து சப்போர்ட்டா இருப்பார்.

மீண்டும் தம்பியுடன் அதேமாதிரி லைஃப்!

நானும் அவரும் சின்ன வயசுல விடிய பேசிக்கிட்டு கார்ட்ஸ் விளையாடிக் கிட்டிருப்போம். அவ்ளோ, ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டிருப்போம். தம்பிக்கு, 9 வயசு ஆகும்போது எனக்கு திருமணம் ஆனது. இதுக்கப்புறம், தம்பிகூட பழையமாதிரி டைம் ஸ்பெண்ட் பண்ணமுடியாதுன்னு அழுகையும் ஏக்கமும் வந்தது. திருமணமானபிறகு அடிக்கடி தம்பியைப் போயி பார்த்துக்கிட்டிருந்தாலும் மனசுல ஏக்கம் போகல. ப்ளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் படிக்க சென்னை வந்தார். திருவான்மியூரில் எங்க வீட்டுல தங்கிதான்  அண்ணா யுனிவர்சிட்டியில் படிச்சுக்கிட்டிருந்தார். தயிர் சாதமும் சிக்கன் - 65 தான் அவருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச டிஷ். அதனால, அடிக்கடி  சமைச்சுக் கொடுத்துடுவேன். அதுமட்டுமில்ல, ஃப்ரைடு ரைஸ், விரால் மீன் குழம்பு அவருக்கு ரொம்ப புடிக்கும். அதேமாதிரி, அம்சவல்லி பிரியாணின்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவாரு. சின்ன வயசுலேயே பிரிஞ்சு வந்துட்ட தம்பியுடன் மீண்டும்  அதேமாதிரி ஒரு லைஃபை வாழ்றதுக்கு அவரோட கல்லூரிப் படிப்புதான் வாய்ப்பா அமைஞ்சது.

என்னோட தங்கச்சி அஞ்சுகச்செல்வி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துட்டாங்க. அதனால, அவங்களும் தம்பிக்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டதால ரெண்டு அக்கா வீட்டிலேயே மாறி மாறி தங்கி படிச்சிக்கிட்டிருந்தாரு துரை. மேலும், வேர்க்கடலைன்னா அவருக்கு ரொம்ப புடிக்கும். எப்போப் பார்த்தாலும் வேர்க்கடலை சாப்பிட்டுக்கிட்டுத்தான் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்போம்.

தீபாவளி வந்துட்டா போதும் தம்பியும் தம்பியோட ஃப்ரெண்ட்ஸும் வெடி வெடிப்பாங்க. அப்புறம், வெடியை எங்க மேல தூக்கி போடுற மாதிரி பயமுறுத்துவார். அதெல்லாம், மறக்கமுடியாத சந்தோஷங்கள். ரொம்பவே குதூகலமா இருக்கும்.

எனக்கும் தம்பிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அதுல, முக்கியமான ஒற்றுமைன்னா நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். தம்பியும் அப்படித்தான். நிறைய வரலாற்று ரீதியான புத்தகங்கள், தத்துவ ரீதியான புத்தகங்கள், அறிவியல் ரீதியான புத்தகங்கள் படிப்பதில் ரொம்பவே ஆர்வமா இருப்பாரு.

தம்பிக்கு நான் இன்னொரு அம்மா!

கடந்த, 2006 ஆம் ஆண்டு காரில் போகும்போது விபத்துக்குள்ளாகி தம்பிக்கு அடிபட்டுடுச்சு. விபத்துக்குள்ளான தகவல் கேட்டு எனக்கு மயக்கமே வந்துடுச்சு. மதுரை வடமலையான ஹாஸ்பிட்டலில் ஐ.சி.யூவில் 21  நாட்கள் இருந்தார். அந்த 21 நாட்களும் வீட்டுக்குக்கூட போகாம அவர்க்கூடவே இருந்தேன். அம்மா இருக்கிறேன்னு சொன்னதுக்கு, வேணாம் வெண்ணிக்காவே இருக்கட்டும்னு சொல்லி அம்மாவை போகச்சொல்லிட்டார். என்னைக்கூடவே இருக்கச்சொன்னது என்னையும் அம்மா ஸ்தானத்துலதான் வெச்சிருக்காருன்னு நினைச்சு ரொம்பவே நெகிழ்ந்துபோன தருணம் அது. என்னிடம் அவ்வளவு இணக்கமா இருப்பாரு. யாராவது என்னைப்பற்றி சொல்லிட்டா அவருக்கு கோபம் வந்துடும். என்னை எந்த இடத்திலேயும் யார்கிட்டேயும் விட்டுக்கொடுக்கமாட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் தயாநிதி அழகிரி குறித்து பகிர்ந்து கொள்ளும் கயல்விழி அழகிரிக்கு சமீபத்தில்தான் பிறந்தநாள் வந்துள்ளது. அதனையும் சர்ப்ரைஸ் படுத்தியுள்ளார் தயாநிதி அழகிரி.  

     “எனக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது. பெரும்பாலும் பிறந்தநாள் கொண்டாடமாட்டேன். அதுவும், கொரோனா சூழலில் பிறந்தநாள் கொண்டாடுற மனநிலை கொஞ்சம்கூட இல்ல. ஊரடங்கு சூழலால் நேரில் வரமுடியாத தம்பி, எனக்கு கேக் ஆர்டர் பண்ணினதோடு அந்த கேக்கை கட் பண்றமாதிரி  ஃபோட்டோ  உடனே வந்தாகணும்னு என் மகன்கிட்ட சொல்ல… அது, எனக்கு செம்ம சர்ப்ரைஸ். நானும் கேக் வெட்டி அந்த ஃபோட்டோவை வாட்ஸ் அப்புல அனுப்பி வெச்சோம். அதைப்பார்த்து, அவ்ளோ சந்தோஷப்பட்டார். யார்மீதும் கோபப்படமாட்டார் தம்பி. ஒருவேளை உட்சபட்சக் கோபம்னா அப்புறம் பேசுறேன் என்று சொல்லிவிடுவார். அதுக்குமேல, கோபத்தை வெளிப்படுத்தமாட்டார்.

எப்போதும் நினைச்சாலும் வேதனையான அந்த நிகழ்வு!

ஜெயலலிதா அரசு பழிவாங்கும் நோக்கத்தோட தம்பியை கைது பண்றதுக்காக தேடியது. அப்போ, எங்க இருக்காருன்னு தெரியாம நான்,  அனுஷான்னு குடும்பத்துல இருக்கிற மொத்தபேருமே பரிதவிச்சுப் போய்ட்டோம். அவர், கஷ்டப்படுறதை என்னால யோசிச்சுக்கூட பார்க்கமுடியாது. எப்போ, நினைச்சாலும் அந்த நிகழ்வு ரொம்ப வருத்தமா வேதனையா இருக்கும்.

     கொரோனாவுக்கு முன்னாடி மனைவி அனுஷா, குழந்தை ருத்ரதேவ்ன்னு  குடும்பத்தோடு வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டுல அமேசான், நெட் ஃபிலிக்ஸ்லாம் டவுன்லோடு பண்ணி வைக்கல. என்ன வெண்ணிக்கா இதெல்லாம் இல்லாம இருக்க? எப்படி டைம் போகும்னு சொல்லிட்டு அவரே எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணிக்கொடுத்துட்டார். அவரு, எவ்ளோ அக்கறைக் காட்டுறாரோ அதைவிட அதிகமா அவரோட மனைவி அனுஷா எங்க எல்லார் மேலேயும் ரொம்பவே அன்பா பாசமா இருப்பாங்க. அவங்களும் என்னோட குழந்தை மாதிரிதான். மகன் இதயநிதி லண்டன்ல பி.ஏ. மியூசிக் ஹானர்ஸ் படிப்பு படிக்கப்போறேன்னு சொன்னான். அதுக்கு, ஊக்கப்படுத்தினதே தம்பியும் அவரது மனைவி அனுஷாவும்தான்.

கயல்விழி அழகிரியுடன் தயாநிதி அழகிரி மனைவி அனுஷா

தம்பியின் மனைவி எனக்கு மகள்தான்!

அதுமட்டுமில்ல, பையனை லண்டன்ல சேர்க்கும்போது, எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. ஆனா, தம்பியும் அனுஷாவும் 15 நாட்கள் லண்டனில் கூடவே தங்கியிருந்து மகனுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் பண்ணினாங்க. கொரோனா சூழலில் வீட்டுக்கு வந்துடுப்பான்னு எவ்ளோ தூரம் சொல்லிப்பார்த்தோம் வரல. தம்பி, ஃபோன் பண்ணி வீட்டுக்கு வான்னு சொன்னதும் உடனே கிளம்பி வந்துட்டான். அந்தளவுக்கு, ரெண்டு பேரும் பாசக்காரங்க. லண்டனில் இருக்கும்போதும் அவனோட படிப்பு குறித்தும், அங்கு நடக்கும் விஷயங்கள் குறித்தும் தினமும் அக்கறையோடு கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

மேலும், என், அம்மா அப்பாவை அம்மா அப்பான்னுதான் கூப்பிடுவாங்க அனுஷா. அவங்களும் மருமகளாகப் பார்த்தது கிடையாது. எங்களுக்கு மூணாவதா ஒரு பொண்ணுன்னுதான் அம்மாவும் அப்பாவும் சொல்வாங்க. இந்தப் பழக்கத்தை, கற்றுக்கொடுத்தது பாட்டி தயாளு அம்மாள் தான். மருமகள்களை மகள்போல் பாவித்ததைதான், அம்மாவும் ஃபாலோவ் பண்றாங்க.  ஃபோன் பண்ணினாலே அனுஷாக்கிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருப்போம். அனுஷா எனக்கு  இன்னொரு தங்கை மாதிரி.

சீரும் சிறப்புமான தாய்மாமன்!

மதுரையின் சிறப்புகளில்  தாய்மாமன் சீரும் ஃபேமஸ். ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. என் மகன் இதயநிதி பிறந்ததிலிருந்து இன்னைக்கு வரைக்கும் பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சிருக்காரு துரை.

தனது அக்கா மகன் லண்டனில் படிக்கச்  சென்றதை, தனது இன்ஸ்டாவில் பெருமையோடு பதிவு செய்த தயாநிதி அழகிரி!

பள்ளிநாட்களில் தம்பிக்கு கட்டிய ராக்கி கயிறு!

ரக்‌ஷா பந்தன் நாளில் ஸ்கூல் படிக்கும்போது தம்பிக்கு கயிறு கட்டியிருக்கேன். ஆனா, அதுக்கப்புறம்தான் அது, தமிழர் பண்டிகை இல்லை… அது வடநாட்டு பண்டிகைன்னு நாங்க கொண்டாடுறது கிடையாது. தம்பி மீது அன்பையும் பாசத்தையும் இந்த ஒருநாளில்தான் காண்பிக்கவேண்டும் என்றில்லை. எல்லா நாட்களுமே சகோதரத்துவத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் நாட்கள்தான். அதனால், எப்போதும் என் தம்பி மீது எனக்கு அன்பும் பாசமும் உண்டு. அது, எப்போதும் குறையாது. நாட்கள் அதிகமாக அதிகமாக அதுவும் கூடிக்கொண்டே போகும். எனக்கு கிடைத்த தம்பி தங்கக்கம்பி” என்று தம்பி தயாநிதி அழகிரி மீது பாசத்தை பொழிகிறார் கயல்விழி இதயப்பூர்வமாக.    

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com