மாதத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டில் தங்கியிருந்து தேன் மற்றும் வன மகசூல் பொருட்களை சேகரித்து வந்து ஊர்ப்புறங்களில் விற்று வாழ்கின்றனர் பளியர் பழங்குடி மக்கள்.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருக்கு உட்பட்ட தலையணை, கோட்டமலை, கருப்பாநதி ஆகிய வனப்பகுதிகளில் பளியர் எனும் பழங்குடி மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குகைகள், பாறை இடுக்குகள், மரத்தின் மேல் அமைந்த பரண், ஓலைக் குடிசைகளில் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியை நாடு அடைந்தபோதிலும், அதிலிருந்து விலகிய இம்மக்கள் காடுகளில் தனிமைப்பட்டு, உணவு தேடும் நிலையிலே இருந்திருக்கிறார்கள்.
1980க்கு பிறகு காடுகள் பாதுகாப்புச் சட்டம், மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் அமலாகின. இதையடுத்து மலைப்பகுதியிலிருந்த பழங்குடி மக்களை மீட்டு, ஊர்ப்பகுதிகளுக்கு அருகாமையில் இருந்த மலையோர பகுதிகளில் வீடுகள் கட்டி குடியமர்த்தியது அரசு. இவர்கள் மலைத்தேன், வன மகசூல் சேகரிப்பது தவிர எந்தத் தொழிலிலும் பழக்கப்படாமல் வாழ்ந்தவர்கள். இன்றும் அதேதொழில்களை செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் இன்று வரையிலும் வன வாழ்க்கையிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. இன்றும் இவர்கள் வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் தான் செல்ல வேண்டும். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டில் தங்கியிருந்து தேன் மற்றும் சாம்பிராணி, ஈச்ச மட்டை, தேற்றான் கொட்டை உள்ளிட்ட வன மகசூல் பொருட்களை சேகரித்து வந்து ஊர்ப்புறங்களில் விற்று வாழ்கின்றனர். இதில் கிடைக்கும் சொற்பத் தொகைதான் அவர்களது வருமானம். இவர்களுள் ஒருசிலர் மட்டுமே ஆடு வளர்ப்பதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.