நம் காலத்து நாயகன் சச்சின்.. ஹேப்பி பர்த்டே சச்சின்!
கிரிக்கெட் உலகின் தனி அகராதி சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்! அவரது உயரத்திற்கு ஃபாஸ்ட் பவுலர் ஆக முடியாது எனத் திருப்பி அனுப்பப்பட்ட பந்து அவர். ஆனால் இந்தப் பந்து பின்னால் திரும்பி வந்தது தோற்றுப் போக அல்ல; அதைவிட வேகம் எடுக்க. ஆகவேதான் அவர் தனி அகராதி. இன்று அவரது மகன் ஒரு ஃபாஸ்ட் பவுலர். அதிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர். தகப்பனின் தாகத்தை தணிக்க வந்த இந்த மாமழை மைதானத்தில் பந்து மழை பொழிய ஆரம்பித்திருக்கிறார். அர்ஜூன் டெண்டுல்கருக்கு அப்பாதான் ஆதர்சம். அதைவிட அவர் அப்பா இந்த கிரிக்கெட் உலகத்திற்கு ஆதர்சம். அந்த ஆட்டக்கார நாயகனுக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே டே சச்சின்! இப்படி பல ஹேஷ்டேக்கள் சமூக வலைத்தளத்தில் கொட்டிக் குவிகின்றன. எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் உயர்ந்து நிற்கிறார் சச்சின்! ஆனால் அது சாதனை பட்டியலில் மட்டும்தான். அவரால் நடுரோட்டில் இறங்கி கல்லி கிரிக்கெட் கூட ஆட முடியும். ஆறு வயது டவுசர் பசங்களோடு எந்த ஈகோவும் இல்லாமல் கைக்குலுக்க முடியும். அதுதான் சச்சின். அவரை கெளரவிக்க எம்பி பதவிக் கொடுத்தால் அவர் தனது சம்பளத்தை தாராளமாக தந்து நாட்டை கெளரவிக்க சொல்கிறார்.
மும்பையில் சாதாரணமான நடுத்தரக் குடும்பத்தில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்த சச்சின், வீட்டிற்கு நான்காவது பிள்ளை. தந்தை ரமேஷ் டெண்டுல்கர் ஒரு மராத்திய எழுத்தாளர். தன் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் மேல் கொண்ட தீராக் காதலால் அவர் தனது மகனுக்கு அந்தப் பெயரை சூட்டினர்.
முதலில் அண்ணனின் வழிகாட்டுதலால் கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் கொண்டுப்போய் விடப்பட்டார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தனர். ஆரம்ப காலத்தில் சகோதரரின் வழிகாட்டுதலால் கிரிக்கெட் மட்டையை தூக்கியவர் காலம் நகரநகர அதன் மேல் தீரக் காதல் கொண்டார். அதற்குப் பரிசாக வருக்கு 16 வயதில் தேசிய அணியில் களம் காணும் வாய்ப்பு கைக்கு எட்டியது.
நவம்பர் 15 ஆம்,1989ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்குள் 4 விக்கெட் இழந்த போது களம் இறங்கினார் இந்த 16 வயது இளைஞன். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை; இவரே பின்னாளில் ‘கிரிக்கெட்டின் கடவுள்’என கொண்டாடப்படுவார் என்று. அன்று வெறும் 24 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் அதே இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடுவார் என்று.
இவரைக் களத்தில் கண்ட பல எதிரணி பவுலர்கள் அவரது உயரத்தைக் கணக்கிட்டு ‘பொடியன்’என்றார்கள். அந்தப் பொடியன் பிற்காலத்தில் அவர்கள் அனைவரது பந்து வீச்சையும் பொடிப் பொடியாக்கியதை கிரிக்கெட் வரலாறு பெருமிதத்துடன் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1990-ல் முதல் சதம் அடித்து, சாதனைக் கணக்கை தொடங்கினார். உண்மையை சொன்னால் இன்று நாம் ஜாம்பவான்களாக பார்க்கும் பலரும் சச்சின் விளையாடிய காலகட்டத்தில் கலக்கி கொண்டு இருந்தவர்கள்தான்! அது எப்படிபட்ட பந்தாக இருந்தாலும் சரி, ஆக்ரோஷப்பட வைத்து ஆட்டமிழக்க வைக்கும் யுக்தியாக எதிரணி பவுலர் எவ்வளவுதான் வார்த்தைகளால் வசைப் பாடினாலும் சரி, அதற்கெல்லாம் தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னார் இந்த சாமர்த்தியசாலி சச்சின்.
கிரிக்கெட் உலகில் பிதாமகனாக பார்க்கப்படுபவர் பிராட்மேன்! பிற்காலத்தில் அந்த பிராட்மேனையே தன்னுடைய பேட்டிங் திறமையால் புகழவைத்தவர் சச்சின். 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளுக்கு சொந்தகாரர் ஆனார். டெஸ்ட் போட்டியில் 13 முறையும், ஒருநாள் போட்டியில் 60 முறையும் ஆட்ட நாயகன் விருதும், 4 முறை டெஸ்ட் தொடரிலும், 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுத்த சிறப்பே போதும் சச்சினின் புகழை சொல்ல!
சச்சினின் புகழை இன்னும் ஒருபடி கூட்டும் வகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அர்ஜூனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றார். மேலும் 1999 இல் இந்தியாவின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும், 2008ல் பத்ம விபூஷண் விருதும் இவர் கரம் வந்தது. இதற்கு எல்லாம் உச்சமாக 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதும் சச்சினை விட அவரது ரசிகர்களுக்கு அளவற்ற ஆனந்தம் பற்றியது. மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் உரிய நேரத்தில் உயரிய மனிதரை அது சென்று சேர்ந்துள்ளதாக பலர் சொன்னார்கள்.
இவர் ஒரு கிரிக்கெட் வீரர்தானே ஏன் இவரை இத்தனை லட்சம் பர் தன்னுடைய ரோல் மாடலாக பார்க்க வேண்டும் என்ற கேள்வி பலரின் மனங்களில் எழலாம். அதற்கு சச்சினே பல முறை விடை கொடுத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் உங்களின் வாழ்கையில் நீங்கள் உணர்ந்த தர்ம சங்கடமான சூழ்நிலை எது என்றபோது, பல இருக்கிறது என்று ஆரம்பித்தவர், நான் சிறு வயதில் ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு கோடை விடுமுறையின்போது கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்தார் என்னை சேர்த்துவிட்டனர். அப்போது எனக்கு 11 வயது. முதன்முதலில் அப்போதுதான், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டேன். நான் ஆடுவதை பார்க்க எனது அபார்ட்மென்டிலுள்ள நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்.
எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால், நான் சந்தித்த முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினேன். நான் வெளியே வந்தபோது எனது நண்பர்கள் எனக்கு கைதட்ட வேண்டுமா, ஆறுதல் சொல்ல வேண்டுமா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர். அது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. அப்படியான சூழல் எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தப் பந்து மிகவும் தாழ்வாக வந்ததால் போல்ட் ஆகிவிட்டதாகவும், எழுந்து வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன் என்றும் நண்பர்களிடம் கூறி சமாளித்தேன்.
இதையடுத்து அடுத்த போட்டியில் கொஞ்சம் முன்னேறினேன். முதல் பந்தை தடுத்துக்கொண்டேன். ஆனால், கொடுமை என்னவென்றால், அடுத்த பந்தில் போல்ட் ஆகிவிட்டேன். அடுத்த போட்டியில் சிங்கிள் ரன் எடுத்து அதன்பிறகு அவுட் ஆனேன். ஆக மொத்தம் கிரிக்கெட் பந்தில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் நான் எடுத்த மொத்த ரன் 1 மட்டுமே. ஆனால், காலரை தூக்கிவிட்டபடி, பார்த்தாயா, நான் 1 ரன் எடுத்துவிட்டேன் என்று கூறியபடி சமாளித்தேன். நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது” என்றார்.
அவரை டக்-அவுட் செய்த பவுலர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் இன்று கவனிக்கவில்லை. தொடர்ந்து அவுட் ஆன போதும், நம்பிக்கையை இழந்து சச்சின் கிரிக்கெட்டே வேண்டாம் என்று நடையை கட்டியிருந்தால், இன்று உலக கிரிக்கெட்டுக்கு ஒரு நாயகன் கிடைக்காமல் போயிருக்க கூடும். ஆகவேதான் அவர் நம் காலத்து நாயகன். ஆட்ட நாயகன்! மீண்டும் ஹேப்பி பர்த்டே சச்சின்!