எந்த ஊருக்குச் சென்றாலும் அதிகாலை முதலே சாலையோரங்களில் சைக்கிள், இருசக்கர வாகனம் என ஏதாவது ஒரு வாகனத்தில் பத்து ஐம்பது இளநீரோடு ஒரு இளநீர் வியாபாரி நின்று கொண்டிருப்பார். இளநீர் யாருக்கும் திகட்டாத பானம். இன்னும் கொஞ்சம் இருந்தால் போதும் என நினைக்கிற பானம், மருத்துவ குணம் நிறைந்த பானம். தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் மருத்துவ குணமுள்ளதாகவே இருந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கலப்படமில்லாமல் இயற்கையாக, உடலை நலமுடன் வைத்துக்கொள்ள நாம் அன்றாடம் அருந்தும் பானங்களில் இளநீர் தவிர்க்க முடியாத ஒன்று.
கோடை காலங்களில் இளநீர் தேவை அதிகரித்து வருவது நாம் அறிந்ததே. அந்தவகையில் மருத்துவகுணம் நிறைந்த, கலப்படமில்லாத பானமான இளநீர் விற்பனை செய்யும் ஏழை தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
’’என் பெயர் சீனிவாசன். எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசு ஆகுதுங்க. சின்ன வயசுல அப்பா தேங்காய் மரத்துல கள் இருக்கறதுக்காக கள்ளுப்பானை கட்டுவார். அப்போ அவருக்கு உதவியா நிறைய நாட்கள் வேலைக்குப் போயிருக்கேன். அப்போல்லாம் கள் இருக்கிறதுக்கு இப்ப இருக்கிற மாதிரி தடை எல்லாம் கிடையாது. ஒரு நாளைக்கு 10 மரத்திலிருந்து 40 மரம் ஏறி ஏறி அப்பாவுக்கு காலெல்லாம் காப்புகாச்சி போயிருக்கும். எனக்கு படிப்பும் பெருசா ஒன்னும் வரல. அப்பா, அண்ணன் கூட சேர்ந்து அப்பப்போ வேலைக்கு போவேன். அப்புறம் கொஞ்ச நாள் ஆனதுக்கப்புறம் கள் இறக்க தடை விதிச்சிட்டாங்க. அப்பாவுக்கும் வேலையில்லை.
அந்த நேரத்தில் இளநீர் வியாபாரம் பண்ணலாம்னு அப்பா முடிவு பண்ணுனார். அண்ணனும் அப்பாவுக்கு உதவியா இருந்தார். எனக்கும் பெருசா படிப்பு மேல அக்கறை இல்ல. நானும் அப்பா, அண்ணன் கூட சேர்ந்து இளநீர் கடையில் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்படியே பழகினதுதாங்க, இருபத்தி ஏழு வருஷம் ஆயிடுச்சு. அப்பா அண்ணனுக்கு அப்புறம் நானே இளநீர் கடைய பார்த்துக்கிட்டேன். என்னா ஒண்ணு காலையிலேயே எழுந்திருச்சிடனும். இளநீர்ல மருத்துவகுணம் நிறைய இருக்கு. அதனால வெறும் வயிற்றில சாப்பிடறவங்க, சாப்பாடு சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுறவங்க அப்படின்னு நிறைய பேரு இருக்காங்க. ஒரு இளநீர் சாப்பிட்டதும் அவங்க முகத்தில் ஒரு சந்தோஷம் இருக்கும் பாருங்க... அதுதாங்க.
இளநீர் சரியா இல்லைன்னு இதுவரைக்கும் யாரும் என்கிட்ட சொன்னதே இல்லை. அப்போ முதன்முதலில் இளநீர் விக்கும்போது 3 ரூபாய்க்கும் 4 ரூபாய்க்கும் வித்தேன். அப்புறம் நாளுக்காய் பத்து ரூபாய்க்கு வித்தேன். இப்ப எல்லாம் 30 ரூபாய் 40 ரூபாய் 50 ரூபாய் வரைக்கும் இளநீர் விக்கிறாங்க. பத்து நாள் ஆனாலும் கெட்டுப்போகாத ஒரு பொருள்தாங்க இளநீர். கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை இப்படி 20 கிலோ மீட்டரில் நானே மரம் ஏறி இளநீர் பறிச்சுடுவேன். மத்தபடி வெளியூரிலிருந்து இளநீர் வாங்குவதெல்லாம் கிடையாது. பைபாஸ் ரோட்டுல இருக்கிற வியாபாரிங்கதான் வெளியூரிலிருந்து காய் வாங்கிட்டு வருவாங்க.
குறிப்பா நாம் எந்த பகுதியில இருக்கிறோமோ அந்த பகுதியில் இருந்து உற்பத்தியாகிற உணவுப் பொருட்களை சாப்பிட்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்ன்னு சொல்லுவாங்க. அதனால நம்ம இருக்கிற பகுதியிலேயே நானே இளநீர் வாங்கி விற்பனை செய்றதுதாங்க. 25 வருஷத்துக்கு முன்னாடி லாபம் கம்மியா இருந்தாலும் செலவு அதிகமாக இல்லாம இருந்துச்சு. ஆனா இப்போ லாபம் நல்லா இருக்கு; இருந்தாலும் அதுக்கு நிகரா செலவும் இருக்குதுங்க. எனக்கு ஒரு பொண்ணு; ஒரு பையன். ரெண்டு பேரையும் நல்ல படிக்க வச்சிட்டேன். இளநீர் கடை மட்டுமில்லன்னா வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியிருக்கும். அதனால நானே ஒரு எட்டு ஏக்கர் நிலத்துல, வருஷத்துக்கு ஒரு மரத்துக்கு 1000 ரூபாய் அப்படின்னு 360 மரத்தை இப்ப வரைக்கும் குத்தகை கொடுத்து இருக்கேன்.
அதுல நானே மரம் ஏறித்தான் என்னோட வியாபாரத்துக்கு தேவையான இளநீரை கொண்டுவர்றேன். என்னைவிட சின்ன சின்ன வியாபாரிங்க இருக்காங்க. அவங்க என்ன போல ஆட்கள்கிட்ட ஒரு நாளைக்கு 50 காய் 100 காய்ன்னு வாங்கி விப்பாங்க. ஒரு ஊருக்கு குறைஞ்சபட்சம் 10 பேராவது இளநீர் விக்கிறவங்க இருப்பாங்க. அவங்களுக்கு நிம்மதி எல்லாம் அவங்ககிட்ட இளநீர் வாங்கி குடிச்சிட்டு வயிறார வாழ்த்திட்டு போறவங்கதாங்க.
பெரும்பாலும் அதிக அளவு இளநீர் பொள்ளாச்சி, தேனி, கம்பம், அதுக்கப்புறம் நம்ம பக்கத்துல இருக்கிற புதுச்சேரி இங்கிருந்துதாங்க தமிழ்நாடு முழுக்கவே இளநீர் கொண்டு வருவாங்க. பெரிய நகரங்களில் இளநீர் கடைக்கு பெரிய மவுசு உண்டு. கிராமப்புறங்களில் எல்லார் வீட்லேயும் தென்னை மரங்கள் இருக்கும். அதனால பெருசா நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா மருத்துவமனையில காலையிலேயே இரண்டு இளநீர் சாப்பிடணும்னு சொல்லிட்டாங்கன்னா நமக்கு முன்னாடியே எழுந்து வந்து தயாரா இருப்பாங்க. கடையில எந்த டாக்டரும் இளநீர் குடிக்கக்கூடாது என்று சொல்றதே கிடையாது. மருந்துச்சீட்டு இல்லாமல் நாங்க கொடுக்குற இளநீர்தான் மருந்து மாதிரின்னு நாங்க நினைக்கிறோம்.
வயிற்று வலி, அல்சர், மஞ்சள் காமாலைன்னு பாதிக்கப்படுகிற எல்லாத்துக்குமே இளநீர்தாங்க மருந்து. அந்த வகையிலே நாங்க ஒருவருடைய நோயை குணமாக்குற ஆட்களாத்தான் எங்களை நினைக்கிறோம். வெயிலோ, மழையோ எந்த நேரமாக இருந்தாலும் இளநீர் வியாபாரம் நீக்காம போகும். எங்க குடும்பத்துக்கு பொருளாதாரமே இளநீர்தாங்க. எனக்குப் பிறகு என் மகன் விருப்பப்பட்டா செய்யலாம். இது ஒன்னும் தப்பு இல்லை; ஆனா எனக்கு பிறகு யாராவது ஒருத்தர் இந்த வியாபாரத்த செய்யத்தான் போறாங்க’’ என்கிறார் சீனிவாசன். சுட்டெரிக்கும் வெயிலில் நின்றுகொண்டு வருவோரின் மனதும் உடலும் குளிர்வதைப்போன்று இளநீரை வெட்டித்தருகிற ஏழைத் தொழிலாளிகள் பலரின் வாழ்க்கை இன்னும் சீவப்படாத இளநீர் போலவே இருக்கிறது.
- ஜோதி நரசிம்மன்