முகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்

முகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்
முகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்
Published on

இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று சொல்லும் போது பெருமையாக இருக்கும். ஆனால் அவ்வப்போது நடக்கும் சில விஷயங்கள் அதனை அசைத்துப் பார்க்கும். ஆனால் அதை விட பெரிய விஷயம் வந்து, அந்த பிரமிப்பை, பெருமையை மீண்டும் மீட்டுக் கொண்டு வரும். கேரள வெள்ளத்தில் நாம் மீண்டும் கற்றுக் கொண்டது ஒன்றே. மதங்களால் வேறுபட்டு இருந்தாலும் நாம் சகோதரர்கள். நிலத்தால் வேறுபட்டு இருந்தாலும் நாம் சகோதரர்கள். மொழியால் வேறுபட்டு இருந்தாலும் நாம் சகோதரர்கள். நாம் இந்தியர்கள்

கேரள வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றதும் கரம் நீட்டியது தமிழ்நாடு. அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி கொடுக்கப்பட்டது. மக்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பொருட்களை சேகரித்தார்கள். தாங்களே சென்று கொடுத்தார்கள். குழுவாக சேர்ந்து நிவாரணம் கொடுத்தார்கள். மற்ற மாநிலங்களும் சேர்ந்து கேரளாவுக்கு கோடி கோடியாக நிதி கொடுத்தனர். சாமானியர்கள் தங்களால் முயன்ற நிதியை கொடுத்தனர். அரசின் உதவிகளுக்கு காத்திராமால் மக்களே தங்களை காத்துக் கொண்ட அதிசயம் சென்னைக்கு பிறகு கேரளாவில் நடந்தது. நடக்கிறது. 

மக்கள் பசியில் வாடுவார்களே என யோசித்த சீக்கிய சகோதரர்களின் அமைப்பான கல்சா தினமும் 2000-10000 பேருக்கு இன்றுவரை உணவு வழங்கி வருகிறது. கொச்சியில் உள்ள குருத்வாராவுக்கு வந்து சேர்ந்தனர் சீக்கிய சகோதரர்கள். குருத்வாரா சமையல் கூடம் ஆனாது. முதல் நாள் 2000 பேருக்கு உணவு. மக்கள் சரியாக சாப்பிடவில்லை என்ற குரல் கேட்டதும் , பொறுக்க முடியாமால் கூடுதலாக இன்னொரு சமையலறை தயாரானது. இப்போது 4000 பேர் வரை வயிறார உண்டனர். அடுத்தடுத்த நாட்களில் 10000 பேர் வரை உணவு உண்ணும் வகையில் சமையல் செய்தனர். மக்கள் பசி போக்கினர். மடிக்கேரியில் இருக்கிறது ஸ்ரீராமா கோயில். வெள்ளத்தால் மக்கள் தவிக்கிறார்கள் என்றதும் கோயிலின் கதவுகள் திறந்தன. முகாமாக மாறியது கோயில். மக்களுக்கு பல்வேறு வகைகளில் தேவையான அனைத்து உதவிகளும் கொடுக்கப்பட்டன. மக்கள் இன்னும் அந்த கோயிலில் இருக்கிறார்கள். 

கேரள மாநிலம் சுண்டிக்கொப்பாவில் இருக்கிறது மசூதி ஒன்று. முஸ்லீம் பயிற்சி பள்ளியும் இணைந்த ஒன்றாக அது கட்டப்பட்டுள்ளது. அதன் அருகில் இருப்பது புனித மரியன்னை ஆலயம். மதராசாவில் அதிக இடம் இல்லை. ஆனால் சர்ச்சில் இருக்கிறது. என்ன செய்யலாம் என யோசித்தார்கள். மதராசாவில் சமைக்கலாம். சர்ச்சில் தங்கலாம் என யோசனை வந்தது. மக்களில் சிலர் மதராசவுக்கு சென்று அங்கிருந்த முஸ்லீம் சகோதரர்களோடு சேர்ந்து சமைக்க உதவினர். சர்ச் நிர்வாகம் மூலம் உணவு ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அரசு சார்பில் இதனை நிவாரண முகாமாக அறிவித்தனர். மக்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.   

இன்னும் பல இடங்களில் கோயில்களும் , மசூதிகளும் , சர்ச்சுகளும் மக்களுக்கு தங்கும் இடமாக மாறியிருக்கின்றன. மக்க அங்கேயே தங்கி, உணவருந்தி, உறங்கி தங்கள் பாதிப்பை மறக்கின்றனர். எந்த தெய்வமும் யாரையும் வர வேண்டாம் என சொல்லவில்லை. எந்த மத சகோதரர்களும் , என்ன மதம் என பார்த்து உதவவில்லை. அனைத்தும் திறக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கேரள வெள்ளம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. 
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com