பெண்ணின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு பல்வேறு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் பெருகியுள்ளன. பொதுவாகவே, ’இளம் வயது திருமணம் பெண்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்கிறது மருத்துவ உலகம். இதுகுறித்து, பிரபல மகப்பேறு மருத்துவரும் தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜனிடம் பேசினோம். மருத்துவ- அரசியல் ரீதியான தனது கருத்துகளை முன்வைத்தார்.
பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை ஒரு மகப்பேறு மருத்துவராக எப்படி பார்க்கிறீர்கள்?
”பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை ஒரு மருத்துவராகவும் ஒரு பெண்ணாகவும் மிகவும் வரவேற்கிறேன். பாராட்டக்கூடிய முடிவு இது. 14 லிருந்து 18 வயதினர் அனைவரும் அடலசண்ட் ஏஜ்ஜில் உள்ளவர்கள். அதாவது, குழந்தைப் பருவத்திற்கும் இளம் பருவத்திற்கும் நடுவிலுள்ள இதனை ’வளரிளம் பருவோம்’ என்போம். 18 வயதில்தானே பல இடங்களில் பெண்களுக்கு திருமணம் செய்கிறார்கள். அடல்ட் வயதில் செய்வதில்லையே? அதனால், வளரிளம் பருவ திருமணம் என்பது மருத்துவ ரீதியாக பல்வேறு பிரச்னைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் இளம் வயது திருமணமும் ஒன்று. 18 வயதில் திருமணம் செய்யும்போது உடனடியாக தாய்மையடைகிறார்கள். தாய்மையை உடல்ரீதியாக மட்டுமல்ல மனரீதியாக புரிந்துகொள்வதற்குள்ளும் எதிர்கொள்வதற்குள்ளும் சிரமங்களை சந்திப்பார்கள். குழந்தையைத் தாங்குவதற்கு முதலில் பெண்ணின் கர்ப்பப்பை, எலும்பு என அனைத்து உறுப்புகளும் வளர்ந்திருக்கவேண்டும். 18 வயதில் பெண்ணின் உடல் உறுப்புகள் சரியாக வளர்ந்திருக்காது. இதனால், குழந்தை வயிற்றிலேயே இருக்கும்போது இறப்பதற்கும், வலிப்பு நோய் வருவதற்கும், குறைபிரசவத்தில் பிறப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போதும், மருத்துவத்துறையில் இதனை ’டீன் பிரக்னன்சி’ என்றுதான் கூறுவோம். டீன் பிரகனன்சி என்பது ’ஹை ரிஸ்க் பிரக்னன்சி’. இதில், எல்லாமே ரிஸ்க் ஃபேக்டர் என்று மருத்துவத்துறையே சொல்கிறது. பெண்களின் உயிருக்கே ஆபத்து வரலாம்.18, 19 வயதெல்லாம் டீன் பிரக்னன்சியில்தான் வரும். குழந்தையை தாங்கும் சக்தி கர்ப்பப்பைக்கு முதலில் இருக்கவேண்டும். அதுதான், முக்கியம்.
உடனே, அந்தக் காலத்தில் எல்லாம் 15, 16 வயதிலேயே குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா? என்பார்கள். பெற்றுக்கொண்டார்கள்தான்; உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். வாழும் சூழல், படிப்பு என டென்ஷனிலேயே சுழல்கிறார்கள். இந்த நிலையில், மணவாழ்க்கை, சுற்றத்தார், தாய்மை போன்றவற்றை எதிர்கொள்வது கடினமானது. அனைத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் மனநிலை குறைவாக இருக்கும். 18 வயதிலேயே இன்னொரு குழந்தையை பெற்று வளர்ப்பது எப்படி சரியாகும்? அவர்களே, குழந்தை மனநிலையில்தான் இருப்பார்கள்.
அதனால், இளம் வயது திருமணத்தை ஆதரித்து வளரிளம் பெண்களை சிரமத்தில் தள்ளக்கூடாது. மத்திய அரசின் இந்த முடிவு பெண்களை முன்னேற்றப் பாதைக்குத்தான் கொண்டுச்செல்லும். பெண்ணுக்கு எல்லாவற்றையும் பகுத்தறியும் வயது 21 தான். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்களுக்கு முதிர்ச்சி 21 வயதில்தான் வரும். எலும்புகள் உட்பட அனைத்து உறுப்புகளும் வளந்துகொண்டே இருக்கும். 21 வயதில் திருமணம் செய்யும்போது குழந்தைப் பெறுவது என்பது சுமூகமானாதாகிவிடுகிறது”.
அதேசமயம், மத்திய அரசின் இந்த முடிவு பெண்களின் பாலியல் சுதந்திரத்தில் தலையிடும் முடிவாக விமர்சிக்கப்படுகிறதே?
“இப்படி சொல்வதெல்லாம் தவறு. ஏதாவது ஒன்று விமர்சித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அரசின் முடிவில் பெண்களின் முன்னேற்றத்தை மட்டும்தான் பார்க்கவேண்டும். 18 வயது திருமணச் சட்டத்தில் பெண்ணின் கல்வி, எதிர்காலம் குறித்தக் கனவுகள் நசுக்கப்படுகின்றது. 18 வயதில்தான் ப்ளஸ் டூ முடித்துவிட்டு பட்டப்படிப்பு சேர்ந்திருப்பார்கள். அவ்வளவுதானே? முழுமையான பட்டப்படிப்பு முடிக்க 21 வயது ஆகிவிடுகிறது. படித்துக்கொண்டிருக்கும்போதே வீட்டில் திருமணம் செய்து வைத்து விடுவதால் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது. எத்தனைப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகும் படிக்கிறார்கள்? படிக்கவைக்கப் படுகிறார்கள்? நம் நாட்டில் அதிக இடைநிற்றல்கள் நிகழ்வது இளம் வயது திருமணத்தால்தான். கல்வியோடு உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை இளம் வயது திருமணத்தால் நிகழ்கின்றது.”.
பெண்ணின் திருமண வயது 21 என்று கொண்டுவந்தால் காதல் திருமணங்களை எதிர்க்கும் சாதியவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் ஆகிவிடும் என்கிறார்களே?
“என்னைப் பொறுத்தவரை இப்படி கூறுவதெல்லாம் சரி கிடையாது. பெண்ணின் படிப்பு, உடல்நலம், மனநலம் இதனைத்தான் பார்க்கவேண்டும். நகரங்களில்கூட 16 வயதிலேயே திருமண பேச்சை ஆரம்பித்து விடுகிறார்கள். அது கிராமங்களில் இன்னும் மோசம். மாதவிடாய் அடைந்தவுடனேயே தொடங்கிவிடுகிறார்கள். 21 வயது என்று கொண்டுவந்தால் பெண் மனபயம் இல்லாமல் 21 வயதுவரை நம்மை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று நிம்மதியாக சுதந்திரமாகப் படிப்பாள். அந்த நிம்மதிக்காகவாவது நாம் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கவேண்டும். மத்திய அரசு பெண்களுக்கு மன உறுதியைத்தான் கொடுத்துள்ளது. எந்தப் பெண்ணும் சீக்கிரமே... 18 வயதிலேயே திருமணம் நடக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அம்மா வீட்டில் கொஞ்சநாள் இருந்து பெற்றோரின் பாசத்தை முழுமையாக அனுபவத்துவிட்டுச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்”.
- வினி சர்பனா