இன்ஸ்டாகிராம் செயலி குறித்து ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரியவந்ததால் அதனை அந்நிறுவனம் மறைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த அதிர்ச்சி தகவலையும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
ஃபேஸ்புக் மீதும், அதன் துணை சேவைகள் மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் அணுகுமுறை தொடர்பாக அண்மையில் வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம் செயலியின் தாக்கம் குறித்து அறிய 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு பயனர் குழு ஆய்வு, ஆன்லைன் ஆய்வு மற்றும் நாட்குறிப்பு ஆய்வு போன்றவற்றை நடத்தியுள்ளது. இந்த ஆண்டும் மிகவும் விரிவான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்களில், 32 விழுக்காட்டினர், தங்கள் உடல் பற்றி மோசமாக நினைத்துக்கொண்டிருந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அதை மேலும் தீவிரமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாவில் பகிரப்படும் அழகிய புகைப்படங்கள் கச்சிதமான உடல்வாகு தொடர்பான அழுத்தத்தை உண்டாக்கி, அதன் காரணமாக டீன் ஏஜ் பெண்கள் சரியாக சாப்பிடாமல் உணவுக் கோளாறு பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராமால் தங்கள் கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தவிர சமூக ஒப்பீடு தொடர்பாக இளம் பெண்கள் மத்தியில் ஏற்படும் பிரச்னை இன்ஸ்டாகிராமில் மிகத் தீவிரமாக இருப்பதாகவும், மற்ற செயலிகளில் இவ்வாறு இல்லை என்றும் ஃபேஸ்புக் அறிந்துள்ளது. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் கூட, ஃபேஸ்புக் இது தொடர்பாக தனது சேவையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த ஆய்வை ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஃபேஸ்புக் தரப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பாகக் கசிந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவின் 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' நாளிதழ் இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம், இளம் பெண்களின் மனநலத்திற்கு தீங்காக அமைவதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு முடிவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு காட்சி விளக்கமாக அளிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது.
இன்ஸ்டாகிராம் சேவையை 13 வயதுக்கு குறைவானவர்கள் பயன்படுத்த முடியாது எனும் நிலையில், சிறார்களுக்கு என தனியே இன்ஸ்டாகிராம் சேவையை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டிருப்பது கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், இந்த திடுக்கிடும் ஆய்வு முடிவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உளவியல் நிபுணர் கஜலட்சுமி கூறுகையில், ''சமூகவலைதளங்களில் உண்மைத்தன்மை இருக்காது. அது ஒரு யதார்த்தமற்ற எதிர்ப்பார்ப்பாகத்தான் இருக்கும். பொய்யான முகத்தை வெளிப்படுத்தும். இதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் பர்ஃபெக்ட்டாக இருக்கும். அது பலமுறை எடிட் செய்யப்பட்டு பின்புதான் பதிவேற்றம் செய்யப்படும். அது யதார்தமில்லை. இதனால் ஒருவர் மற்றவருடன் தன்னை ஒப்பீடு செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுவார்.
உடல் அமைப்பு குறித்து எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். குறிப்பாக டீன்ஏஜ் பருவத்தினருக்கு இது ஆபத்து. யதார்த்ததை மீறி இருக்கும் விஷயங்களை நாம் அடைய முயற்சிக்கும்போது, நம்மை நாமே வருத்திக்கொள்கிறோம். அது நமக்கு நாமே பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. பதட்டத்தை, தனிமையை உருவாக்கி விடுகிறது. சமூகத்திலிருந்து நம்மை அந்நியப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கிறது. மற்றவர்களை ஒப்பிட்டு தான் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்; உடற்பயிற்சி செய்ய வேண்டும் என எண்ணுவதில் பிழையில்லை.
ஆனால், சம்பந்தப்பட்ட நபரைப்போலவே இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டால், அதுவே அவர்களுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுத்துவிடும். அதிலிருந்து அவர்கள் மீள்வது சிரமம். எல்லோரும் பாசிட்டிவ் கமெண்ட் போடுவதில்லை. எதிர்மறை கமெண்ட்டுகளை பதிவிட்டுவிட்டால், அதை இந்த இளைய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது தவறான வழிகளுக்கு அவர்களை ஈட்டுச்செல்கிறது. அவர்கள் தனக்கு தானே தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை வருத்திக்கொள்வது. மற்றவர்களின் வாழ்வியலை எண்ணி எண்ணி மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள்'' என்றார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை எந்தளவில் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
உலகளவில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கத்தின்போது வீடுகளிலேயே இருந்தவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது, இணையமும், சமூகவலைத்தளமுமே. 2015ல் 13 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தி வந்த நிலையில், 2021ல் அது 44 கோடியாக அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமை பலர் பொழுதுபோக்காகவும், சிலர் வணிக நோக்கத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இன்ஸ்டாகிராம் தளத்தை உலக அளவில் இந்திய மக்களே அதிகம் பயன்படுத்துவதாக தெரியவருகிறது. 180 மில்லியன் அதாவது 18 கோடி இந்தியர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதில், 73 விழுக்காட்டினர் ஆண்கள். 27 விழுக்காட்டினரே பெண்கள். இதுவே கடந்த 2019ஆம் ஆண்டில் 10 கோடி பேரும், 2020 ல் 13 கோடி பேரும் இந்தியாவில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளனர். எதிர்காலத்தில் இன்ஸ்டாகிராமின் பயன்பாடு அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து, 170 மில்லியன் நபர்களுடன் யு.எஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 110 மில்லியன் நபர்களுடன் பிரேசில் 3வது இடத்திலும், 93 மில்லியன் நபர்களுடன் இந்தோனேஷியா 4வது இடத்திலும், 61 மில்லியன் நபர்களுடன் ரஷ்யா 5 வது இடத்திலும் உள்ளன.
சைபர் குற்றங்கள் தடுப்பு ஆலோகர் வினோத் ஆறுமுகம் கூறுகையில், ''பொய்தோற்றத்தை நகர்த்தி தான் செல்கிறார்கள். இன்ஸ்டாகிராம் உருவாக்கப்பட்டதே அடிமையாக்குவதற்காகத்தான். உளவியல் நோக்கித்தான் கட்டமைக்கிறது. அதிக நேரம் மக்களை செயலியில் எப்படி தக்க வைப்பது என்பதை பல ஆய்வுகளுக்கு கண்டறிந்து அதனடிப்படையில்தான் இன்ஸ்டா உருவாக்கப்பட்டிருக்கிறது. சில நல்லதும் இருக்கிறது.
இன்ஸ்டாவின் ரீல்களை பயன்படுத்தி கல்வியை பெற முடியும். ஆனால், அது அதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. எதுவுமே தெரியாத சிலர் தன்னை ஒரு பிட்னஸ் நிபுணராக வெளிப்படுத்திக்கொண்டு இதெல்லாம் சாப்டுங்க உங்க உடம்பு குறையும் என்று பாடம் எடுக்கிறார்கள். அது மிகவும் ஆபத்தானது. இங்கே தனி நபர்கள் செலிப்ரட்டிகளாக மாற்றப்படுகிறார்கள். வழக்கமான வாழ்வை வாழும் ஒருவருக்கு பாப்புலாரிட்டி கிடைக்கிறது. இது மக்கள் மத்தியில் ஒரு பொய்யான நம்பகத்தன்மையை கட்டமைக்கிறது. அவர் பரிந்துரைக்கும் அனைத்தையுமே மக்கள் எளிதில் நம்பிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து'' என்கிறார் அவர்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/bIyYJY192iI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>