நெல்லையில் ஜவுளி பூங்கா ! மத்திய அரசுக்கு கோரிக்கை

நெல்லையில் ஜவுளி பூங்கா ! மத்திய அரசுக்கு கோரிக்கை
நெல்லையில் ஜவுளி பூங்கா ! மத்திய அரசுக்கு கோரிக்கை
Published on

தமிழகத்தின் பழமையான தொழில்களில் ஒன்றாக நெசவு தொழில் உள்ளது. இன்றளவும் இந்தத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். தமிழகத்தில் இன்றளவும் பல நூற்பாலைகள் செயல்பட்டாலும் மாநிலத்தில் முதல் ஆலை நெல்லை மாநகரின் பேட்டை பகுதியில் உருவான  கூட்டுறவு நூற்பாலைதான். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த குடும்பம், குழந்தைகள் கல்வி, வாழ்க்கை என ஒரு சமூகம் கூட்டமாய், குடும்பமாய் வாழ்ந்த வரலாறை கொண்டது பேட்டை நூற்பாலை.  இவ்வளவு பழமை வாய்ந்த நூற்பாலை இன்று வெறும் காட்சிபொருளாக நிற்பது கவலையளிப்பதாக தொழிலாலாளர்கள் வேதனையுடன்  கூறுகின்றனர்.


நூற்பாலை வரலாறு

:1954 ல் பேட்டையில் முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் இந்த நூற்பாலையை கட்டியுள்ளார். பின்னர் பொருளாதார சூழலால் விற்கும் நிலை வந்துள்ளது. இதேநேரம் ஆந்திராவில் செயல்பட்டு வந்த நூற்பாலை ஒன்று மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஈரோட்டை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் என்பவர்தான் கோ - ஆப்டெக்ஸ் நிறுவன தலைவராக இருந்துள்ளார். ஆந்திரா நூற்பாலை மூடினால் அதற்கான மாற்று ஏற்பாடு தேவை என்று நினைக்கும்போது திருநெல்வேலி பேட்டை நூற்பாலை பற்றி தெரிய வர, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரதம நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பங்கு மூலதனத்தை பெற்று பேட்டை நூற்பாலையை வாங்கி தொடங்கியுள்ளார்.

இதன்படி 1958 ல் 58 ஏக்கரில் தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலை பேட்டையில் தொடங்கபட்டது. அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் இந்த நூற்பாலையை திறந்து வைத்தார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் ( முன்னாள் ஜனாதிபதி )  வெங்கட்ராமன் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் முயற்சியில் ஆலை அமைந்தது. சுற்றிலும் 15 அடி உயர கல்சுவர் அமைத்து மிக உறுதியான கட்டிடமாக காட்சியளிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட்கள், ஒரு ஷிப்ட்க்கு 700 பேர் வீதம் மொத்தமாக 2100 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். மாதந்தோறும் 7 ஆம் தேதி சம்பள நாள், அன்றைய நாளை ஏழாம் திருவிழாவாக கொண்டாடியுள்ளனர். நேரடியாக 2100 பேர் என்றால் மறைமுகமாக ஆயிரக்கணக்கான மக்கள் சார்ந்துள்ள தொழில் மூலம் லாபம் பெற்றுள்ளனர். 

தொடர்ந்து சிறப்பாக இயங்கியதால் முதல்ஆலையின்  லாபத்தை கொண்டு அந்த வளாகத்திலேயே மற்றொரு ஆலை தொடங்கபட்டது. பின்னர் சிறந்த நிர்வாக திறனால் இரண்டு ஆலைகளிலும் கிடைத்த லாபத்தை கொண்டு எட்டையாபுரத்தில் மூன்றாவதாக ஒரு நூற்பாலை தொடங்கபட்டது. அந்நாளில் இரவில் ஆலையில் மட்டுமே லைட் இருக்கும். சுற்றிலும் உள்ள பகுதிகளில் விளக்குகள் இன்றி குடியிருப்புகள்  இருட்டாக இருக்கும். ஆனால் இன்று சுற்றிலும் குடியிருப்புகள் தோன்றி தெரு விளக்குகள் காரணமாய் வெளிச்சம் இருந்தாலும், இன்று ஆலை வெளிச்சம்மின்றி இருட்டாக காண்பது வலியானது என்கின்றனர் தொழிலாளர்கள். இந்தளவுக்கு லாபம் கிடைத்து வந்த நூற்பாலை ஒரு கட்டத்தில் நிர்வாக சீர்கெடு, அரசியல் தலையீடு காரணமாக நட்டத்தில் இயங்குவதாக சொல்லபட்டது. இறுதியாக 2004 ஆம் ஆண்டில் மிக மோசமான நிலையாக தொழிலாலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் கொடுக்கபடவில்லை. அந்த ஆண்டே ஆலை மூடபட்டது.

மாற்று ஏற்பாடு

சமீபத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் 20 ஏக்கரில் நிலம் இருந்தால் ஜவுளிபூங்கா உருவாக்கி தரப்படும். அதற்கு மத்திய மாநில அரசுகளின் மானியமும் கடனுதவியும் பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேட்டையில் 58 ஏக்கரில் நூற்பாலை வளாகம் உள்ளது. தற்போது காட்சிபொருளாக மட்டுமே உள்ளது. அதுவும் கூட்டுறவு சங்கங்களின் நிதியில் பெறப்பட்ட கட்டிட வளாகம். எனவே இங்கு தமிழக அரசு ஜவுளிபூங்கா ஏற்படுத்தி தந்தால் அருகில் சங்கரன்கோவில் மற்றும் புதியம்புத்தூரில் ஜவுளிஉற்பத்தி செய்து வரும் நிறுவனர்கள், மற்றும் தொழில் முனைவோர்கள் இங்கு புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேட்டையில் செயல்படாமல் இருக்கும் நூற்பாலை வளாகத்தில் ஜவுளி பூங்காவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com