பேருந்துகளில் கேமரா மட்டுமே போதுமானதா? - என்ன நிலையில் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பும்? நிர்பயா நிதியும்?

பேருந்துகளில் கேமரா மட்டுமே போதுமானதா? - என்ன நிலையில் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பும்? நிர்பயா நிதியும்?
பேருந்துகளில் கேமரா மட்டுமே போதுமானதா? - என்ன நிலையில் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பும்? நிர்பயா நிதியும்?
Published on

நேற்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா என்ற அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 75.02 கோடி ரூபாயில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த திட்டம் நிர்பயா நிதியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்பயா நிதியத்தின் கீழ் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? பேருந்துகளில் கேமரா என்பது மட்டுமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிடுமா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிர்பயா நிதி திட்டத்தின் நோக்கம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அவற்றை மாநில அரசுகள் எந்த விதத்தில் பயன்படுத்தி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்கள் பெண்கள் பாதுகாப்பில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி வருகிறது. தங்கள் பாதுகாப்புக்காக என்னவெல்லாம் தேவை என பெண்கள் நினைக்கிறார்கள்? அவர்களின் தேவைகளை நிர்பயா நிதியம் சரி செய்து வருகிறதா?

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா புள்ளி விவரங்கள் அடங்கிய செய்தியை வெளியிட்டது. அதன்படி, “ இந்தியாவின் மற்ற நகரங்களை பொருத்தவரையில் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடந்து வருகிறது. ஆனாலும் 2016ல் 533 குற்ற வழக்குகள் பதிவான நிலையில் 2017ம் ஆண்டு 642 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த வருடக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு நிர்பயா நிதியில் ரூ.190.68 கோடி வழங்கியுள்ளது. அதில், ரூ.6 கோடியை மட்டுமே தமிழகம் பயன்படுத்தியுள்ளது.

அதில் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர அழைப்பு எண் 181 திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 70ஆயிரத்துக்கும் குறைவான அழைப்புகள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிங்க் நிற ரோந்து வாகனங்கள் மகளிர் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் தேவை என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, பேருந்துகளில் கேமராக்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், பெண்கள் பாதுகாப்புக்கான தேவை இன்னும் நிறைய இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். பேருந்துகளைப் போலவே பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும், பேருந்துகளில் அவசர மணிகள் அமைக்க வேண்டும், பெண்களுக்கு போதிய கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும், குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பெண்களின் கோரிக்கை நீள்கிறது.

மத்திய அரசின் நிதியை முழுமையாக செயல்படுத்தி மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டுமின்றி, செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் முறையாக பாராமரிக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com