''கூடுதல் தடுப்பூசி வழங்குக'' : பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தல்

''கூடுதல் தடுப்பூசி வழங்குக'' : பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தல்
''கூடுதல் தடுப்பூசி வழங்குக'' : பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Published on

தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், செங்கல்பட்டில் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டமைப்பது, தமிழ்நாட்டுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற மருத்துவத் துறையைச் சேர்ந்த பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், தற்போதைய கோவிட் மூன்றாம் அலை அச்சுறுத்தல் காரணமாக தடுப்பூசி கோரிக்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னுரிமை அளித்துளளனர்.

டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, நவநீதகிருஷ்ணன், வைகோ மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கோவிட் நிலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் விரைவில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த நிலையில், பெரும்பாலான கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கோவிட் தொடர்பான ஆலோசனையில் கலந்துகண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற முக்கிய அம்சத்தையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் இவர்கள் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி விநியோகம் குறித்த பல்வேறு விவரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுத்து அளிக்கப்பட்டது.

கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் மாநகரங்கள் என்று அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என்றும் வாசன் வலியுறுத்தியுள்ளார். கோவிட் மூன்றாம் அலை ஏற்பட்டால் உயிர் சேதம் இல்லாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலமாகவும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவும் தங்களுடைய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட் மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக பல்வேறு அம்சங்களை மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளது. அதேபோலவே தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான விவரங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக விளக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'புதிய தலைமுறை'க்கு தெரிவித்தனர்.

தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவரிக்கபட்டன. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆலைகள் அமைத்து, அதன் மூலம் மீண்டும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கம் முதலே நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், கோவிட் தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோலவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கோவிட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்ததுடன், ஆலோசனைகளும் அளித்துள்ளனர்.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com