‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கடந்த ஏப்ரல்-7 ந்தேதி மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியேற்று சரியாக ஒரு மாதமாகிவிட்டது. 30 நாட்கள் அவரது செயல்பாடுகள் குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துக்கொண்டிருக்க , திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த பா.ஜ.க துணைத்தலைவர் வி.பி துரைசாமியிடம் பேசினோம்,
அவர் அளித்த பேட்டியில்,
“இந்த 30 நாளில் முதல்வர் மு.க ஸ்டலின் 300 க்கும் மேற்பட்ட கமிட்டி போட்டுள்ளார். இந்த கமிட்டிகள் தேவையற்றது. கமிட்டிகளை போடுவதற்குப்பதில் முதல்வரே முடிவு எடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் அழைத்து கருத்துக் கேட்பது ஒரு வலுவான அரசிற்கு உதாரணம் அல்ல. கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்களைப் போடுவதற்குப் பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பல மாவட்டங்களுக்குப் போட்டுள்ளார். அவர், முதல் நாளிலேயே ஐந்து கையெழுத்து போட்டதாகச் சொல்கிறார்கள். கல்விக்கடன் ரத்து, மகளிர் சுயவுதவிக்குழு கடன் ரத்து, ஏழை விவசாயிகள் கடன் ரத்து, போன்ற கையெழுத்துகள்தான் தேவை.
அவர், முதல்வராக பதவியேற்றதில் பாராட்டும்படியான ஒரு விஷயம் என்றால், வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்ற பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக நியமித்ததுதான். அது வரவேற்கத்தக்கது. பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட்டை பார்க்க நான் தினமும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதேசமயம், அவர் நாகரீகமற்று விமர்சிப்பதை தவிக்க வேண்டும். தன் திறமையை பட்ஜெட்டில் காட்டட்டும். அவருக்கு மட்டும் இலவசமாக ஒரு யோசனை சொல்கிறேன். அரசின் வருவாய்யை பெருகவும் வரியை உயர்த்தாமல் இருக்கவும் கனிம வளங்களில் நடைபெற்ற ஊழலை முறைப்படுத்தி பணத்தை கஜானாவுக்கு அவர் கொண்டுவரவேண்டும். நம்பிக்கையுடன் இருக்கிறேன். தமிழக அரசிடம் நான் எதிர்பார்ப்பது பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்தான்.
மற்றபடி, தமிழகத்தில் கொரோனா குறையவில்லை. அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கவில்லை. திடீரென்று 4.500 பேருந்துகளை விட்டு கொரோனா பரவ காரணமாக இருந்துவிட்டார் மு.க ஸ்டாலின். மாறாக முதல்வர் நிவாரண நிதி மட்டும் அதிகமாக வருகிறது. இந்த ஒரு மாதத்தில் அவரின் செயல்பாடுகளில் ஒரு விஷயம்கூட பிடிக்கவில்லை.
அமைச்சர்கள் புரோட்டோகால் லிஸ்ட்டில் கணேசன், மதிவேந்தன், கயல்விழி என மூன்று பட்டியலின அமைச்சர்களை மட்டும் கடைசியில் எழுதியிருக்கிறார்கள். இதனை புரோட்டோகால் வரிசைப்படி 9, 10 வரிசையில் எழுதலாம். ஏற்கனவே, ஒடுக்கப்பட்ட மக்களை இப்படி கடையில் போடுவது நியாயமானதா? அதேபோல, நம்பர் 2 வில் வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகரஜன் 24 ல் போடப்பட்டுள்ளார். அப்படி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், பட்டியலின அமைச்சர்களை கடைசியில் ஏன் சேர்க்கவேண்டும்? அவர்களை முன்னுக்கு கொண்டு வருகிறோம் என்றுதானே இந்த திராவிட இயக்கம் கூறிக்கொண்டு வருகிறது.”
- வினி சர்பனா