சட்டமன்றத் தேர்தல்: ரஜினி, கமல் சேரும் கூட்டணி எதுவாக இருக்கும்?

சட்டமன்றத் தேர்தல்: ரஜினி, கமல் சேரும் கூட்டணி எதுவாக இருக்கும்?
சட்டமன்றத் தேர்தல்: ரஜினி, கமல் சேரும் கூட்டணி எதுவாக இருக்கும்?
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளும் ஆயத்தங்களும் மெல்லத் தொடங்கியுள்ளன. ஊடகங்களில் தேர்தல், கூட்டணி தொடர்பான விவாதங்களும் அரும்பிவரும் நிலையில், எதிர்வரும் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் என்று அரசியல் களத்தில் அனுபவமிக்க பத்திரிகையாளர் துரை கருணாவிடம் கேட்டோம். முந்தைய தேர்தல் களநிலவரங்களை சுட்டிக்காட்டி சில கணிப்புகளை அவர் முன்வைக்கிறார்…

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. இங்குள்ள பிரதான அரசியல் கட்சியான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமையில் அமைகிற கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிப்பதாக பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.

வழக்கமான இந்த பார்முலாவை உடைத்தது ஜெயலலிதாதான். 2014ம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு 39 தொகுதிகளில் தனித்து களமிறங்கி, 37 இடங்களில் வெற்றி பெற்றார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத மிகப்பெரும் பதிவு அது. ஒரு மாநிலக் கட்சி எங்கும் தனித்துப் போட்டியிட்டு இந்த அளவிற்கு வெற்றிபெற்றதில்லை. அதேபோல 2016 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை களமிறக்கி வெற்றிக் கண்டார். அதாவது 2011 தேர்தல் வெற்றியின் நீட்சியாக இரண்டாவது முறையும் வெற்றிபெற்ற ஒரு சாமர்த்திய அரசியலை ஜெயலலிதா கையாண்டார்.

இனி அப்படியான ஒரு வாய்ப்பு எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில்கூட கூட்டணி அமைத்துதான் திமுகவால் 38 இடங்களில் வெற்றிபெற முடிந்தது. மீண்டும் ஒரு வலிமையான கூட்டணி எதுவோ, அதுவே 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும். திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. எந்தவித குழப்பமும் இல்லை.

ஆனால் அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, பாஜக, ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆளுக்கொரு கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரையில், “எங்கள் தலைமையில்தான் கூட்டணி” என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் அதையும் தாண்டி கூட்டணி ஆட்சி என்றும் பாஜக கூறிவருகிறது.

தேமுதிகவும் “நாங்களும் தனித்துப் போட்டியிடுவோம்” என்கிறார்கள். இவை எல்லாமே அரசியல் தேர்தல்நேர பேரம் என்று சொல்லலாம். அதிக இடம் வேண்டும் என்பதற்காக அவர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். அதிக இடங்கள் கொடுக்கிறபோது, தனி மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியை உருவாக்கி, கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் திட்டம்.

ஆனால், அவர்களுடைய பலம் என்ன என்பது கடந்த பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 8, 10 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி சரிந்து 4 சதவிகிதமாகிவிட்டது. பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கி என்பது அறிந்ததுதான். 2 அல்லது 3 சதவிகிதம்தான். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பத்து கட்சிக் கூட்டணியில் 18, 19 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் வெற்றிபெற்றது இரண்டு தொகுதிகளில்தான். 2019 தேர்தல் கூட்டணியில் தேனி தொகுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத்குமார் வெற்றிபெற்றார்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்குவங்கியும் பலமாக சரிந்துவிட்டது. அதனால் அவர்கள் இப்போது விழித்துக் கொண்டுள்ளார்கள். 160, 170 இடங்களில் அதிமுக போட்டியிடவேண்டும். மீதமுள்ள 64 தொகுதிகளைத்தான் பாஜக,  தேமுதிக போன்ற மற்ற கட்சிகளுக்குக் கொடுக்கவேண்டும். விருப்பம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால், அம்மா வழியில் 234 தொகுதிகளிலும் மீண்டும் இரட்டை இலையை களமிறக்குவோம் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டது.

பாஜக தலைமையில் கூட்டணி என்றால், அதிக இடங்களைக் கேட்பார்கள். அதனுடைய முன்னோட்டம்தான் 60 தொகுதிகளைக் கண்டறிந்துள்ளோம், அந்த 60 தொகுதிகளிலும் தனித்து நின்றால் பாஜக வெற்றிபெறும் என தமிழக தலைவர் எல். முருகன் பேசுகிறார். தமிழகத் தேர்தல் களத்தின் எதார்த்தம் புரிகிறதா என்று தெரியவில்லை. நோட்டாவுக்கும் கீழே, நாம் தமிழர் கட்சியைவிட குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சி, 60 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

அதாவது 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால், அதிகபட்சம் கோவை, சேலம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் 10, 12 தொகுதிகளில் டெபாசிட் வாங்கலாம். ஆனால் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது திமுக, அதிமுகவாகத்தான் இருக்கும். இந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி என்பது ஒரு கனவுதான். அதிமுகவும் திமுகவும் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

(பத்திரிகையாளர் துரை கருணா)

1980ம் ஆண்டு திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்று அறிவித்து படுதோல்வியைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது கற்றுக்கொண்ட பாடத்தால்தான், 1996 தேர்தலில் குறைவான எண்ணிக்கையில் வெற்றிபெற்றாலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசைத்தான் நடத்தினார். கூட்டணி ஆட்சி என்று யாருக்கும் பங்கு கொடுக்கவில்லை. தேமுதிக தனித்து நின்றபோது அதில் வெற்றிபெற்றது விஜய்காந்த் மட்டும்தான். 2011 அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 29 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிகவால் வரமுடிந்தது.

எனவே, தேர்தலுக்குத் தேர்தல் அதிக தொகுதிகளுக்காக பேரம் பேசுவது என்பது வழக்கமானது. அதற்காகத்தான் தமிழக அரசியல் களத்தில் கூட்டணி ஆட்சி, தனித்துப் போட்டி என்று பேச்சுகள் எழுந்துவருகின்றன. காட்சிகள் மாறினால், சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் தலைமையில் மூன்றுவிதமான கூட்டணிகள் அமைய வாய்ப்பிருக்கிறது. பாஜக தலைமையிலான அணியில், ரஜினிகாந்த், கமல் போன்றவர்கள் இடம்பெறலாம். அப்படி இல்லையென்றால், அவர்கள் நான்காவது அணியாக உருவெடுக்கலாம்.

தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக நாங்கள் ஒரு கூட்டணி ஆட்சியைக் கொண்டுவருகிறோம் என்று வந்த மக்கள்நலக் கூட்டணியின் நிலைமை என்னவென்று தெரியும். 2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் எல்லோரும் சேர்ந்துநின்று ஒரு எம்எல்ஏகூட வெற்றிபெறவில்லை. அதுதான் தமிழகத்தின் தேர்தல்கள எதார்த்தம்.

இப்போது காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் ரஜினி கமலுக்கு அழைப்பு விடுக்கிறார். ஏற்கெனவே திமுக அணியில் நிறைய கட்சிகள் உள்ளன. சில நேரங்களில் அவர்களுக்குப் போதுமான இடங்களை ஒதுக்க முடியாமல் அதுதொடர்பாக மனவருத்தங்களும் எழும்புவது உண்டு. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் விரும்பும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால், ரஜினி, கமலுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் மேலும் ஒரு கூட்டணி அமைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com