"சரியான திசையில் ஸ்டாலின்... அதிமுகவில் 'கத்தி' அரசியல்!" - தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி

"சரியான திசையில் ஸ்டாலின்... அதிமுகவில் 'கத்தி' அரசியல்!" - தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி
"சரியான திசையில் ஸ்டாலின்... அதிமுகவில் 'கத்தி' அரசியல்!" - தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி
Published on

கொரோனாவுடன் போராடி மீண்டு வந்திருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். 71 வயதில் உடல்நிலை சரியில்லாத சூழலிலும் தமிழக அரசியல் நிலவரம்  குறித்து பேசினால், அப்டேட்டுகளை அள்ளிக் கொட்டி ஆச்சயர்யப்பட வைக்கிறார். ஊடகங்களிடம் பேசாமல் அமைதி காத்து வருபவரிடம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள புதிய ஆட்சி மாற்றம் குறித்த பல்வேறு கேள்விகளைக் கேட்டோம். தயங்கித்தான் பேச ஆரம்பித்தார்.

திமுக ஆட்சியைப் பிடித்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

”இந்தியா ஒரு ஜனநாயக நாடு. திமுக மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மை மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதற்கு, கட்டுப்பட்டு நாம் தலைவணங்கித்தான் தீரவேண்டும். மக்கள் வைத்த நம்பிக்கையை முதல்வராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலின் நிறைவேற்றுகிறாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.”

அதிமுகவின் தோல்வி குறித்து?

”அதிமுகவில் ஆளுக்கு ஒரு கத்தியை முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு திரிகிறார்கள். இனிமேல், அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், கட்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அதனால், கட்சியை யார் கையகப்படுத்துவது என்ற போட்டி இருக்கும். அந்தப் போட்டியில், கட்சி நிறைய உட்குழப்பங்களைச் சந்திக்கும். பழைய ஆளுமைக்குரிய இடங்களை இனி பெறுவது சந்தேகம். அதிமுக மீண்டும் உயிர் பெறும் என்றால், திமுக தொடர்ந்து தவறுகளை செய்தால் அந்த தவறுகளில் அதிமுகவிற்கு உயிர் கிடைக்கலாம். மற்றபடி, திமுக தொடர்ந்து நல்லாட்சியை வழங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் குடுமிப்பிடி சண்டையிலேயே அதிமுக காணாமல் போய்விடும்.”

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லையே?

”திமுக, அதிமுக இரண்டும் இல்லாத ஓர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முழுநேரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். திமுக ஆட்சி வந்தவுடனேயே வாழ்த்து சொல்லி சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வது என்பது என் வாழ்க்கையிலே கிடையாது.”

முதல்வர் மு.க ஸ்டாலினின் முதல் நாள் அறிவிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

   “அவர் அறிவித்த அனைத்துமே நல்ல அறிவிப்புகள். திமுக ஆட்சி சரியான திசையில் பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல், நான் எந்த இலவசத் திட்டங்களையும் முழுமையாக ஏற்பவன் இல்லை. இலவசத் திட்டங்களை வாங்குபவனும் இல்லை. உழைத்து தன்னுடைய வியர்வையில் உண்பதுதான் உண்மையான சுயமரியாதை. அதனால், இலவசத் திட்டங்களை நான் ஆதரிக்கமாட்டேன். ஆனால், சில இலவசத் திட்டங்களை ஆதரிக்கலாம். ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இலவசம் என்ற பெயரில் சைக்கிள், லேப்டாப் கொடுத்ததெல்லாம் கல்வி புரட்சிதான். இதனால், கிராமப்புற, தெருவோர ஏழை மாணவர்கள் பயன்பெற்றார்கள். இதுபோன்ற விஷயங்களைத்தான் வரவேற்கவேண்டும். அதைவிடுத்து டிவி கொடுப்பது, கிரைண்டர் கொடுப்பது, மிக்சி கொடுப்பது போன்றவை தேவையில்லாத இலவசங்கள். இலவசங்களையும் பகுத்துப் பார்த்துதான் வரவேற்கவோ எதிர்க்கவோ வேண்டும்.

   கொரோனாவால் அத்தனை பேரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசு சிறிய அளவிற்காவது மக்களின் துயரத்தை போக்கியிருக்கிறது என்ற அர்த்தத்தில், மு.க ஸ்டாலின் 4000 ரூபாய் அறிவித்ததை வரவேற்றுத்தான் ஆகவேண்டும். அதேபோல, மகளிருக்கு கட்டணமில்லா இலவசப் பேருந்தும் பாராட்டுக்குரியது. பெண்களுக்கான எந்த நல்லத் திட்டங்களையும் வரவேற்பேன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆணாதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் பெண்களுக்கு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அனைவரும் முழு மனதோடு ஏற்கவேண்டும்.”

இறையன்பு ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டிருக்கிறாரே?

”தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸை நியமித்தது சரியானத் தேர்வு. இறையன்பு ஐ.ஏ.எஸ் மிகத்தகுதியான, நேர்மையான, திறமையான, ஒழுக்கம் சார்ந்த மனிதர். நல்ல படிப்பாளி. நல்ல சிந்தனையாளர். இளைஞர்கள் சமூகத்திற்கு ஊக்க சக்தியாக விளங்குபவர். தனக்கென்று பதவியை பயன்படுத்திக் கொண்டவர் கிடையாது.  அதிகாரிகளிடம் இவற்றையெல்லாம் ஒருசேரப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஜெயலலிதா ஆட்சியில் பணப் பெட்டியை வாங்கி அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கத் தயாராக இல்லாத நேர்மையான ஐ.ஏ.எஸ்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அதனை, அப்படியே எடப்பாடி பழனிசாமியும் கடைப்பிடித்தார். இப்படியொருச் சூழலில்,  நேர்மையான இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களை முதன்மைச் செயலாளராக உட்கார வைத்தது நல்ல விஷயம்.”

புதிய அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

” ‘மதுவற்ற மாநிலம்; ஊழலற்ற ஆட்சி’ காந்திய மக்கள் இயக்கத்திற்கு இந்த இரண்டே கோரிக்கைகள்தான். இந்த இரண்டும் கிடைத்தால் தமிழக மக்கள் நலமோடு வாழ்வார்கள். இதைவிட எனக்கு பெரிய சந்தோஷம்  உலகத்தில் வேறெதுவும் இல்லை. அதனால், மு.க ஸ்டாலினின் ஆட்சி பொற்கால ஆட்சியாக அமைந்து ஊழலின் நிழல்கூட படாத  ஆட்சியாக இருக்கவேண்டும். அதனை, அவர் தருவாரா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம். தமிழகம் மதுவற்ற மாநிலமாக  மாற, அவர் ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கவேண்டும். மதுவிலக்கின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மதுவை நேரடியாக விற்பதற்கு பதில் மணலை நேரடியாக விற்கவேண்டும். கிரானைட், தாது மணல்களை தனியாரிடம் இருந்து மீட்டு அரசு நிர்வகிப்பதோடு பத்திரப்பதிவுத் துறையையும் ஒழுங்குப்படுத்தினால், ரூ.32 ஆயிரம் கோடிக்குமேல் அதிக வருவாய் ஈட்டலாம்.  மு.க.ஸ்டாலின் இதனை முதலில் செய்வதோடு ஊழலில்லாத ஆட்சி நடத்தவேண்டும். இரண்டும் செய்தாலே எனக்கு போதும்.

   ’திமுக – அதிமுக  ஆட்சி கூடவேக் கூடாது என்று சொல்லும் தமிழருவி மணியன் இதைக் கொடுத்தால் போதும் என்கிறாரே?’ என்ற கேள்வியும் பலருக்கு எழும். தந்தைப் பெரியார் சிதம்பரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் ’கடவுள் உங்க முன்னாடி வந்தாலும் கடவுள் இல்லைன்னு சொல்வீங்களா?’ என்று கேட்டார்.  ‘அப்படி கடவுள் என் முன்னால் வந்தால் கடவுள் இருக்கிறார்; கடவுள் உண்டு என்று என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வேன்’ என்றார் பெரியார்.

     அப்படித்தான், ’மு.க.ஸ்டாலின் ஒரு பைசா கூட ஊழலில்லாத சிறந்த ஆட்சியை வழங்குகிறார்;  வெளிப்படைத்தன்மையோடு ஆட்சி நடக்கிறது’ என்று சொல்லும் விதமாக இன்றைய சூழலில் ஆட்சி செய்துவிட்டால் இதைவிட தமிழர்களுக்கு செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஊழலற்ற அரசு மதுவற்ற மாநிலம் இரண்டையும் செய்தால் இதைவிட மிகச்சிறந்த ஆட்சி உலகத்தில் எதுவுமில்லை என்று இமயத்தின் உச்சியில் ஏறி நின்று உரத்தக் குரலில் முழக்கமிடுவேன். இப்போது, ஊரடங்கு அறிவித்து விட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு மதுக்கடைகளை மூடுகிறார்கள். இதனை, நிரந்தரமாக தொடரவேண்டும். மதுக்கடைகளை மூடினால் பெண்களின் பேராதரவு மு.க.ஸ்டாலினுக்கே கிடைக்கும். பீகாரில் நிதிஷ்குமார் மதுக்கடைகளை மூடவில்லையா? மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாரயம் பெருகும் என்பது போலிவாதம். கள்ளச்சாரயம் பெறுகினால், காவல்துறை எதற்கு உள்ளது? காவல்துறை விழிப்புணர்வுடன் இருந்தால் எப்படி கள்ளச்சாரயம் பெருகும்?.”

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகிக்கொண்டே இருக்கிறார்களே?

”கமல்ஹாசன் கட்சியில் நேர்ந்திருக்கக்கூடிய குழப்பம் ’புயலைப்போல் வந்து; மின்னலைப் போல் மறையும்’ என்ற வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன”.

கொரோனாவிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?

”ஜனவரி 30 ஆம் தேதி காந்தி நினைவுநாள். அதற்காக, ஈரோட்டுக்குச் சென்று  ஆயிரம் பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினேன். பலர் செல்ஃபி எடுக்க விடுபட்டதால் மறுக்க முடியாத சூழல். வீடு திரும்பியதும் கொரோனா தொற்று உறுதியானது. அறுவை சிகிச்சையும் வால்வு மாற்றமும் செய்துகொண்ட என்  மனைவிக்கும் என்னால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சித்த மருத்துவர் வீரபாபுதான் தன்னுடைய உழைப்பாளி மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அரை மனதுடன் நான் என் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு இசைந்தேன். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு நிமோனியா காய்ச்சல் என்னை மரணத்தின் விளிம்புவரை கொண்டுசென்றது. மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். அப்போதுதான், களத்திலிருந்து ரஜினி விலகி நின்றது எவ்வளவு வேகமான முடிவு என்பது தெளிவாகப் புரிந்தது. அவர் மீது அன்றுவரை எனக்கிருந்த ஆழ்ந்த வருத்தமும் அகன்றது. என்னை முழுமையக காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான். ஆனாலும், நான் வீடு திரும்பி ஒரு மாதம் மேல் ஆகிறது. நான் இன்னும் பழைய உடல்நிலையைப் பெறவில்லை. தளர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை. வருமுன் காப்பதே விவேகம். தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள். முகக் கவசம் அணியாமல் எங்கும் போகாதீர்கள். தனிமனித இடைவெளி மிகவும் முக்கியம். யாரோடும் செல்ஃபி எடுக்க முயலாதீர்கள்.”

 - வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com