தமிழ் எழுத்தாளர் ம.நவீன் எழுதியுள்ள ‘பேய்ச்சி’ நாவலுக்குத் தடை செய்துள்ளது மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சகம். மலேசிய சமுதாயத்தின் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையிலான ஆபாசமானதும், ஒழுங்கீனமானதுமான உள்ளடக்கம் கொண்டிருடிருப்பதாக கூறி, இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது குறைந்தபட்சம் மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனை அல்லது மலேசிய ரிங்கிட் கரன்சியை 20000 RM செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகை மற்றும் சிறை தண்டனை என இரண்டும் தடையை மீறுபவர்கள் மீது பாயவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984-இன் கீழ் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து GAY IS OK என்ற புத்தகமும் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
“பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த வெளியீடு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் அச்சிடவும், இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும், வெளியிடவும், விற்பனைக்கும், விநியோகிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது” என்று மலேசிய உள்துறை அமைச்சகத்தின் தலைமை செயலர் தத்துக் வான் அஹ்மத் தஹ்லான் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த தமிழகத்தை சேர்ந்த சக எழுத்தாளர்கள் தங்களது ஆதரவை ம.நவீனுக்கு தெரிவித்து வருகின்றனர். யாவரும் வெளியீட்டின் ஜீவ கரிகாலன் “இது ம.நவீன் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதல். ஜனநாயக நாடான மலேசியாவில் உள்ள போலி தமிழ் ஆர்வலர்களால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் ஆதவன் தீட்சண்யா “என்னைப் பொறுத்தவரை இந்த தடையானது பேய்ச்சி நாவலை படிக்க பலரையும் தூண்டும் என தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
யுவ புரஸ்கார் விருதை வென்ற எழுத்தாளர் லக்ஷமி சரவணகுமார் “படைப்பு சுதந்திரத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் புத்தகம் எழுதலாம். அப்படி எழுதும் புத்தகத்தை விமர்சிக்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம். ஆனால், ஒரு புத்தகத்தை தடை செய்வது அதை கட்டுப்படுத்த முற்படுவதாகவே தெரிகிறது. ம.நவீனுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட 'பேய்ச்சி' நாவல், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைப் பற்றி பேசுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக மலேசியா சென்று, அங்கே தோட்டத்தொழிலாளர்களாக வேலைக்குச் சேருவோரின் வாழ்க்கை, துயரம், அவலச் சூழல், நம்பிக்கை, வழிபாடுகள், சமகால நிகழ்வுகள், என 150 ஆண்டு கால வாழ்க்கையை இந்த நாவல் பேசுவதாக தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.