கவிதைக்குள்ளேயே வாழ்ந்து வந்தவர் அப்துல்ரகுமான்

கவிதைக்குள்ளேயே வாழ்ந்து வந்தவர் அப்துல்ரகுமான்
கவிதைக்குள்ளேயே வாழ்ந்து வந்தவர் அப்துல்ரகுமான்
Published on

கவிக்கோ என்றால் கவிதைகளின் அரசன் என்று பொருள். அந்த அடைமொழிக்கு ஏற்றவாறு தமிழ் கவிதை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

வைகை ஆற்றின் தென்கரையில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9 ஆம் நாள், உருதுக் கவிஞர் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார், அப்துல் ரகுமான். தனது தொடக்கக் கல்வி, உயர்கல்வியை மதுரையில் உள்ள பள்ளிகளிலும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். அங்கு முனைவர் மா.ராஜமாணிக்கனார், அவ்வை துரைசாமி, அ.கி.பரந்தாமனார், அவ்வை நடராசன், அ.மு.பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச.வே.சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் ‘குறியீடு’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1961 ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, 20 ஆண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறையின் தலைவராகவும் இருந்து 1991 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கினார். அவரை புதுக்கவிதைகளின் சிற்பி என்றால் அது மிகையாகாது. அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் சோதனை முயற்சியை மேற்கொண்டார். அத்தொகுதியில் அவர் கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக தந்தார். தமிழில் கவிதைக் குறியீடுகளை குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழில் ஹைக்கூ, கசல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை பரப்பியதிலும் இவருக்கு பெரும்பங்கு உண்டு. சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. அறிவுமதி உள்ளிட்ட இளம்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.

1999 ஆம் ஆண்டு தனது ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும் இவர் கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவளவிழாவில் கவிஞர் வைரமுத்து, “எங்கள் எல்லோரையும் விடச் சிறந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். காரணம் அவர் கருவில் இருக்கும் குழந்தையைப் போல இடம்பெயராமல் கவிதைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார். கவியரங்கம் என்ற கலைவடித்தில் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்திக் கொண்ட ஓர் அற்புதக் குரல் அப்துல் ரகுமானுடையது. ஒருமுறை நதியை ‘இது தண்ணீர் வாக்கியம்’ என்றார் அப்துல் ரகுமான். துளித்துளியான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட தண்ணீர் வாக்கியம்தான் நதி என்றார். மூன்று காண்டங்களில் இளங்கோவடிகள் வடித்த சிலப்பதிகாரத்தை நான்கு வரிகளில் இப்படிச் சொல்கிறார், ‘பால் நகையாள், வெண்முத்த பல்நகையாள், கண்ணகியாள், கால் நகையால், வாய் நகை போய், கழுத்து நகை இழந்த கதை’ என்கிறார் அப்துல் ரகுமான்” என்று சிலாகித்துப் பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் கருணாநிதியை வாரத்தின் ஏழு கிழமைகளோடும் ஒப்பிட்டு ஒரு கவிதை எழுதினார். “ ஞாயிறு.. இரவிலும் விழித்திருக்கும் ஞாயிறு நீ; திங்கள்.. அமாவாசையிலும் ஒளிரும் திங்கள் நீ; புதன்..செந்தமிழ் பேசிப் பேசி சிவந்தவாய் நீ; புதன்.. வீழ்த்தும் தோல்விகளை வெற்றியாக்கும் அற்’புதன் நீ; வியாழன்... ஆழ்ந்த கல்வியாழம் கண்டவன் நீ; வெள்ளி... விடுதலை வானின் விடிவெள்ளி நீ; சனி... உன்னை சபிக்கும் பகைவர்க்கு சனி நீ” என்பது அந்தக் கவிதை.

ஒருமுறை மற்ற கவிஞர்களின் கவிதைக்கும், உங்களின் கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கேட்டபோது, “என் கவிதைகளை படிக்கும் வாசகர்கள் தான் இதற்கு சரியான பதிலை தர முடியும். கவிதைகளை சுருக்கி இருசீர் ஓர் அடி என்ற புதிய சிறிய வடிவத்தில் கவிதைகள் எழுதி தமிழுக்கு அளித்தேன். இதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்று நினைக்கிறேன்” என பதில் சொன்னார் கவிக்கோ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com