பட்டாடி, மந்திர வஞ்சி, வெள்ளை மருது, துறிஞ்சி, பெருங்கொன்றை, கரும் பொரசு, ஏழிலைப்பாலை, நிங்கள், சரக்கொன்றை, செந்தணக்கு, நாட்டுவடுமை, வேங்கை, கரு மருது என நீள்கிறது 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' செல்பேசி செயலியில் இடம்பெற்றுள்ள மரங்களின் பெயர்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில மரங்களின் பெயர்களை நம்மில் பலரும் முதல்முறையாக கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்புள்ளது. இப்படி மரங்கள் குறித்த பல்வேறு விதமான அறிய தகவல்களை வழங்குகிறது இந்த மொபைல் ஆப்.
மாறி வரும் உலகச் சூழலால் நாம் உயிர் வாழத் தேவையான உயிர்வளி (ஆக்சிஜன்) காற்றை மட்டுமே அதிகம் கொடுத்துப் பழகிய மரங்கள் உலக அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் உலகம் வெப்பமயமாகி வருகிறது. அது மறைமுகமாக பல எதிர்வினைகளை ஆற்றி வருகிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் இது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுகின்றன. மர தேவைக்காக (37%), விவசாய நில விரிவாக்கத்திற்காக (28%), காட்டுத்தீ முதலான பேரிடர்கள் (21%), சுரங்கப் பணி (12%) மற்றும் சாலைப் போக்குவரத்து விரிவாக்கம் (2%) என பல்வேறு காரணங்களுக்காக மரங்கள், உலக அளவில் அழிக்கப்பட்டு வருவதாக IFL (Intact Forest Landscapes) சில ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியுள்ளது. உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 3.5 பில்லியனில் இருந்து 7 பில்லியன் வரையில் மரங்கள் வெட்டப்பட்டு வருவதாகவும் IFL சொல்லியுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை மாறியிருக்கலாம். அதிகரித்திருக்கலாம்.
இந்த நிலையில், மக்களிடையே மர வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த 2018-ல் அறிமுகமானது தான் 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்'. இதன் பெயரைப் போலவே மரங்கள் சார்ந்த அனைத்து விதமான தகவலையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது இந்த செயலி.
தமிழ்நாடு மரக்களஞ்சியம்!
மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை பாடப் புத்தகத்தில் தொடங்கி பல்வேறு வகைகளில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பொது மக்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறை தனது பங்காக இந்த செயலியை வடிவமைத்துள்ளது. தமிழ்நாடு புதுமை முயற்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முயற்சி இது.
தமிழ்நாட்டில் நிலவுகின்ற தட்பவெப்பச் சூழல் நிலையை தாங்கி வளரக்கூடிய மரங்கள் குறித்த விவரங்கள் தொடங்கி சுமார் 150-க்கும் மேற்பட்ட மரங்களின் தனித்துவமான தகவல்களை அறிந்து கொள்ளலாம் என இந்த செயலியை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அப்ளிகேஷனின் உதவியோடு பல்வேறு மரங்களின் பெயரை தமிழ் மொழி, ஆங்கிலம் மற்றும் அதன் Binomial nomenclature (அறிவியல் பெயர்) மாதிரியானவற்றை தெரிந்துகொள்ள முடிகிறது. அதோடு மரங்களின் உருவ அளவு, பயிரிடும் முறை, அதன் பயன்கள், பயிரிடும் முறை, அடையாளம் காண்பதற்கான எளிய வழிமுறைகள், அதன் வாழ்விடம், புகைப்படம் மற்றும் மரத்தின் தனித்தனமை, குணாதிசயங்கள் என அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்குகிறது. இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் iOS இயங்குதளம் கொண்ட போன்களிலும், www.tntreepedia.com என்ற வலைதளத்தின் மூலமாகவும் பயன்படுத்தலாம். இந்த செயலியை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.
இந்த செயலியின் சிறப்பம்சங்கள் என்ன?
> மரத் தேடல் என்ற ஆப்ஷன் மூலம் இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்கள் நான்கு விதமாக தங்களுக்கு பயன் அளிக்கின்ற மரங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
> இதில் உள்ள மர இனத் தேர்வு ஆப்ஷனை பயன்படுத்தி பல்வேறு வகையான மர இனங்களை குறித்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். கிட்டத்தட்ட சுமார் 150 மர இனங்கள் இதில் உள்ளன.
> அதே போல பயனர்கள் தங்களது பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப மரங்களை தேர்வு செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது 'பயன்பாட்டுத் தேர்வு' ஆப்ஷன். இதில் நறுமண மரங்கள், அவென்யூ மரங்கள், மூங்கில், நார் தேவை, விறகு மற்றும் தீவன மரங்கள், எரிபொருள் மற்றும் எண்ணெய் மரங்கள், தோட்டக்கலை மரங்கள், நீண்ட சுழற்சி மரங்கள், பென்சில் மரங்கள், மருத்துவ மரங்கள், மாசுக் கட்டுப்பாட்டு மரங்கள், கூழ் மரங்கள், குறுகிய சுழற்சி மரங்கள், ஆன்மீக மரங்கள், பெரு மரங்கள், நகர்ப்புற மரங்கள், விவசாயிகளுக்கு உதவும் காற்று தடுப்பு மரம் / வரப்பு நடவு மரம், ரப்பர் மரம், பட்டு உற்பத்திக்கு உதவும் மரங்கள் என அனைத்தும் இதில் உள்ளது. இது மரம் வளர்க்க விரும்பும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுக்கும் உதவும்.
> 'இடத்திற்கேற்ற தேர்வு' என்ற ஆப்ஷன் மூலம் மாநிலத்தின் மாவட்டங்கள் வாரியாக அந்தப் பகுதிக்கு ஏற்ற மரங்களை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். சென்னை, தர்மபுரி, ராமநாதபுரம், நீலகிரி, கன்னியாகுமரி என பகுதி சார்ந்த சூழலுக்கு ஏற்ப வளரக்கூடிய மரங்களை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
> அதேபோல மரங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், ஊடுபயிராக எந்த பயிர் பயிரிடலாம் என்ற ஆலோசனையையும் இந்த செயலி வழங்குகிறது.
> மேலும், மரங்களின் கன அளவை கணக்கிடவும் இந்த செயலி உதவுகிறது. இதில் வெட்டப்பட்ட மற்றும் உயிருடன் உள்ள மரங்களின் கனத்தை கணக்கிடலாம். அதற்கு மரத்தின் உயரம், ஆரம் மற்றும் மரத்தின் வகையை தேர்ந்தெடுத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்.
> இது தவிர, மர வளர்ப்பு சார்ந்த வழிகாட்டி வீடியோக்கள், மரங்கள் சார்ந்த Glossary மாதிரியானவை உள்ளன. அதேநேரத்தில் இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது.
மரங்களை குறித்து தெரிந்துகொள்ள விரும்புவர்கள், மர வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் இந்த செயலியை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு மரக்களஞ்சியம் செயலி > ஆண்ட்ராய்ட் லிங்க் > iOS லிங்க்
முந்தைய அத்தியாயம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 6 : 'மீனவ நண்பன்!' மீன்பிடி தொழில் செய்து வரும் மக்களுக்கு உதவும் செயலி!