'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி

'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
Published on
நடிகர் விவேக் மறைவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கனிமொழி, தூத்துக்குடி எம்பி: நடிகர் 'பத்மஸ்ரீ' விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆ.ராசா, நீலகிரி எம்பி: கலைவாணருக்கு பிறகு, எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு சிரிப்போடும் சிந்தனையோடும் பகுத்தறிவு கொள்கைகளை வெளிப்படுத்திய விவேக்கின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு.
 
தயாநிதி மாறன், மத்திய சென்னை எம்பி: சிரிக்கவைத்த ஜனங்களின் கலைஞன், சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர், நம்பிக்கை விதைத்த கலாமின் சீடர், அன்புச் சகோதரர் விவேக் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் துயரத்தையும் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
தமிழச்சி தங்கப்பாண்டியன், தென் சென்னை எம்பி : சமூகச் சிந்தனையோடு, சீர்திருத்தக் கருத்துக்களையும் தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, இயற்கை நலனில் ஆர்வம் கொண்ட, ‘சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்படும், பத்மஶ்ரீ விவேக், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கின்றது.
மரங்களின் காவலர், மனித நேயப் பண்பாளர், கலைப்பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்ற அவரது இழப்பு, திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் நல்லதொரு நண்பரை இழந்த, பெரும் வலி எனக்கு. அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் , அனுதாபமும்.
கலாநிதி வீராசாமி, வடசென்னை எம்பி: சின்னக் கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சிறந்த சமூக ஆர்வலரை நாம் இன்று இழந்துள்ளோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணிக்கம் தாகூர், விருதுநகர் எம்பி: மதுரையின் மகன்... தமிழ் திரையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த “சின்ன கலைவானர்” இல்லை இனி.. அவரது இழப்பு கோவில்பட்டிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் தான். ஆழ்ந்த இரங்கல்.
திருநாவுக்கரசர், திருச்சி எம்பி: திரையுலகில் தனக்கென தனியொரு பாணியை வகுத்துக் கொண்டு அறிவாற்றல் நிறைந்த தன் நகைச்சுவை பேச்சுக்களால் நடிப்பால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அனைவராலும் சின்னக் கலைவாணர் என்று போற்றப்பட்டவர் சகோதரர் விவேக் அவர்கள்.

பத்மஸ்ரீ விருது மற்றும் 5 முறை தமிழக அரசின் விருது என பல்வேறு சிறப்பான விருதுகளை தன் திறமையால் பெற்று 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து திரையுலகில் புகழ் கொடி நாட்டியவர். மக்கள் ஜனாதிபதியாக திகழ்ந்த அமரர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அன்பிற்குரியவராய் அவரின் ஆலோசனைப்படி லட்சக்கணக்கான மரங்களை நட்டு சுற்றுச்சூழலை சமூக பொறுப்போடு மேம்படுத்த தன்னை அர்ப்பனித்துக் கொண்ட பொது நலவாதி. சமூக சீர்த்திருத்தவாதி. பழகுவதற்கு இனியவர், பண்பாளர், எளிமையும் அடக்கமும் நற்குணங்களும் நிரம்பியவர்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு விவேக் இயற்கை எய்தியிருப்பது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. திரையுலகில் விவேக் அவர்களின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்பிட இயலாது. அன்னாரின் அகால மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சு வெங்கடேசன், மதுரை எம்பி:  மதுரையின் மீது வாஞ்சை கொண்ட மக்கள் கலைஞன் விவேக்.  பேசும் பொழுதெல்லாம் “மதுரையில் மரம் நடும் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் சார், நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் நான் வருகிறேன்” என்று தொடர்ந்து சொல்லிவந்தவர் திரைக்கலைஞர் விவேக்.
ஸ்மார்ட் சிட்டி வேலைகளால் மதுரையின் மையப்பகுதிகளில் இருந்த வெகுசில மரங்களையும் இழந்துவிட்டோம். நான்கு மாசி வீதிகளுக்குள் எத்தனை மரங்கள் தான் இருக்கின்றன என DYFI தோழர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தினோம். கூடல் மாநகரின் பெரும் கொடுமையாக இருந்தது அந்த எண்கள். விவேக் சாரிடம் பேசினேன். மதுரையின் மீது அவருக்கு இருக்கும் வாஞ்சை ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்டது.
கொரோனா காலம் முடிந்ததும் பெரும் இயக்கமாக மதுரையில் இதனை நடத்துவோம் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். நேற்று முன்தினம் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொடுத்த ஊடகவியலாளர் சந்திப்பை பார்த்ததும் அழைத்து பேச வேண்டுமென தோன்றியது. ஆனால் ஏனோ அழைக்காமல் விட்டுவிட்டேன். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதில் இருந்து உள்ளுக்குள் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. இன்று காலை அந்த கொடுஞ்செய்தி நம்மையெல்லாம் நிலைகுலைய வைத்துவிட்டது. மக்கள் கலைஞனின் புகழ் நீடு வாழ்க!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com