தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
Published on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து, அதன்பின்னர் 26 நாட்கள் கழித்து மே 2-இல் வாக்குகள் எண்ணப்படுவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது தேர்தல் தேதிக்கும், வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் இடையே உள்ள அதிக இடைவெளி பற்றிய விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்தபோது, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், வாக்கு பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள இடைவெளி 10 நாட்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனாலும் தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே 25 நாட்கள் இடைவெளி இருப்பது பல அரசியல் கட்சிகளையும் அதிருப்தியடைய செய்திருக்கிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஏப்ரல் 22 ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி, மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்பின் மூன்றே நாட்களில் மே 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் “ மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது என்பதால், எல்லா மாநில தேர்தல் வாக்குகளையும் ஒன்றாக எண்ணுவதற்காகவே இந்த இடைவெளி உள்ளது என சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் இது தொடர்பாக பல்வேறு அச்சங்கள் உள்ளதையும் பார்க்க முடிகிறது. பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியில் இருந்து இயக்கமுடியும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால்தான் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே உள்ள இடைவெளியை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

கடந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இணையசேவையை நிறுத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமே நேரடியாக கோரிக்கை வைத்தார்கள். ஏற்கனவே இவிஎம் இயந்திரத்தின்மீது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான இந்த அதிக இடைவெளியானது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது. மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டுமெனில், வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருக்கவேண்டும்.மேலும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரத்துடனும் விவிபேட் இயந்திரத்தை பொருத்தவேண்டும், அதுபோலவே அனைத்து விவிபேட் பதிவு சீட்டுகளையும் எண்ணவேண்டும்.” என்கிறார்

இதுபற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் “ இது வழக்கமான ஒன்றுதான், ஏனென்றால் கடந்த 2011 ஆம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடத்தப்பட்டு, மே 13 ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதுபோலவே இப்போதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு மே 3 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக தமிழக அரசு மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதை முன்பே உணர்ந்திருப்பார்களோ என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com