விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாகப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமோ?.. அதுதான், உயிரைக் காப்பாற்றும். அதுபோல, சைபர் க்ரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்கமுடியும்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழிக் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டில் 385 ஆக இருந்த குற்றங்கள், 2020-ம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 -ஆக அதிகரித்திருக்கின்றன. கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ல் இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 385 சம்பவங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கின்றன. அடுத்து, 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் இடையிலான காலகட்டத்தில் 1,125 சம்பவங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, 2016ல் 12,317 குற்றங்களும், 2017ல் 21,796 குற்றங்களும், 2018ல் 27,248 குற்றங்களும், 2019ல் 44,735 குற்றங்களும், 2020ல் 50,035 குற்றங்களும் பதிவாகியிருக்கின்றன. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் மட்டுமல்ல, ஏ.டி.எம், டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை மையமாக வைத்து நடக்கும் நூதன திருட்டுகளும் அதிகரிக்க முக்கிய காரணம், வங்கி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் அனைத்து வங்கிகளும் கணக்கை இணையவழி மூலம் இணைக்கப்பட்டிருப்பதே என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்.
இதைத் தெரிந்துவைத்திருக்கும் கிரிமினல்கள், வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளைப் பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள். இப்படி ஏமாந்தவர்கள் மூலம் பதிவாகும் விவரங்கள் அதிகம். லேட்டஸ்ட்டாக பிட்காயின். இந்த வகை கிரிப்டோ மோசடி தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருகிறார்கள்.
அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் மிகவும் குறைவானவையே என கூறலாம். இதைவிடப் பல மடங்கு இண்டர்நெட் தொடர்பான க்ரைம் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 2016ல் 144 குற்றங்களும், 2017ல் 228 குற்றங்களும், 2018ல் 295 குற்றங்களும், 2019ல் 385 குற்றங்களும், 2020ல் 782 குற்றங்களும் பதிவாகியிருக்கின்றன.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் அதிகளவு சைபர் குற்றங்கள் நடைபெற்ற முதல் 5 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 11,097 குற்றங்களும், இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 10,741 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 5,496 குற்றங்களும், தெலங்கானாவில் 5,024 குற்றங்களும், அஸ்ஸாமில் 3,530 குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 12வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களைப் பார்த்தால் விரைவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து விடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
இந்த டிஜிட்டல் உலகத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? சைபர் மோசடியில் சிக்காமல் இருக்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, எத்திக்கல் ஹேக்கர் மகேஷ் பாஸ்கரன் கூறுகையில், நம்முடைய தகவல்கள் திருடப்படுவதை தவிப்பதற்காக பொது இடங்களிலும், மால்கள் போன்ற இடங்களிலும் உள்ள Open / Free வைஃபை (Wifi) பயன்படுத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும்.
வங்கிகள் எப்போதுமே, வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி தகவல்களை, அதாவது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை போன், எஸ்.எம்.எஸ் மூலம் கேட்காது. அதனால் யாராவது உங்களின் வங்கிக் கணக்கு விவரம், ஓ.டி.பி கேட்டால் கண்டிப்பாகப் பகிர வேண்டாம். மோசடி பேர்வழிகள் காட்டும் கைவரிசையில் சிக்காமல் இருக்க ஏ.டி.எம் கார்டு பின் நம்பர் மற்றும் இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றலாம்.
தேவையில்லாத மின்னஞ்சல்கள் (email)மற்றும் எஸ்எம்எஸ்(SMS)தொடர்புகள் தவிர்க்கப்படவேண்டும். தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் மின்னஞ்சல், அழைப்புகள், SMSகளுக்கு பதிலளிக்க வேண்டாம். தெரியாத ஒரு தளத்திலிருந்து உங்களுக்கு வரும் லிங்க், புகைப்படம், வீடியோ, ஸ்பேம் மின்னஞ்சல்கள் (Spam Email) போன்றவற்றை ஒரு போதும் க்ளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். முடிந்தவரை சமூகவலைத்தளங்களில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, வங்கி விவரங்கள் போன்ற தகவலைப் பதிவிடுவதைத் தவிப்பதன் மூலம் உங்களுடைய தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.
தனிப்பட்ட தகவல்கள் உங்களின் கணினி, லேப்டாப் போன்றவற்றிலிருந்தால், அவை பாதுகாப்பாக இருக்கக் கடவுச்சொல்(Password) பயன்படுத்தி, லாக் செய்து வைக்க வேண்டும். மேலும், தனிப்பட்ட(unique)முறையிலான கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம். பொதுவாகப் பலரும் அவர்களின் செல்லப்பிராணிகள், பிடித்த நடிகர்கள், தேதிகள், மாதங்கள் போன்றவற்றையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவர். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருந்தாலும், அதில் பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் (Eg: !, @, &, %, +) ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துவதால் ஹேக்கர்களால் கூட உங்களின் தகவலைத் திருடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதேபோல், முடிந்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றவேண்டும். மேலும், ஒரே பாஸ்வேர்டுகளை பல வலைத்தளங்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் உள்ள வீட்டில், உங்கள் குழந்தைகளின் மொபைலில் பெற்றோர் கண்காணிப்பை (Parent Monitoring) இயக்கி வைப்பது மிகவும் பாதுகாப்பானது. இணையதளத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான நெறிமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கலாம். தேவையற்ற இணையதளத்தைப் பயன்படுத்துவதையும், அதிலிருந்து பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்கலாம்.
மேலும், பாதுகாப்பான ஆன்டி-வைரஸ் நிறுவி வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பு. இது போன்ற நம்முடைய தகவல்களை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் மட்டுமே, சைபர் குற்றங்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும். இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை நம்முடைய செயல்பாடு இல்லாமல் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. எனவே இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்கிறார் மகேஷ்.
தமிழகத்தில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களில் 99 சதவிகிதம் பேர் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து புகார் தருவதில்லை எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஓ.டி.பி மூலமாகவோ, வேறு வகையிலோ மோசடியாக வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால், உடனே புகார் தெரிவிக்க `National Cyber Crime Helpline - 155260' சைபர் கிரைம் பிரிவு அறிமுகம் செய்துள்ளனர் . பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி மணி நேரத்துக்குள் இந்த எண்ணுக்கு அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம்" என சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமான காவல் நிலையத்துக்கு நேரில் வராமலேயே www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலேயே புகார் அளிக்கலாம்.