வெள்ளித்திரையில் இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழும் பலரும் தங்கள் கேரியரை ஏதோ ஒரு சிறிய புள்ளியிலிருந்துதான் தொடங்கியிருப்பார்கள். அது பெரும்பாலும் சின்னத்திரையாக இருக்கும். கோலிவுட்டில் கோலோச்சும் பலரின் தொடக்கம் எது என்று தேடினால், அது சென்று சேரும் இடம் தொலைக்காட்சிதான். அப்படியாக சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்த நடிகர்கள் குறித்து பார்ப்போம்.
விஜய்சேதுபதி: நடிகர் விஜய்சேதுபதி கடந்த 2006-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'பெண்' என்ற நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். இன்றைய அவரது வெள்ளித்திரை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது 'பெண்' டிவி சீரியல்தான். அதுமட்டுமல்லாமல் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியிலும் அவர் பங்காற்றியிருக்கிறார்.
நயன்தாரா: ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகத்தான் தனது கேரியரை தொடங்கியிருக்கிறார் நயன்தாரா. பின்னர் 2003-ம் ஆண்டு 'சமயம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது தான், இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கிய தனது முதல் படமான 'மனசினக்கரே'-க்கு தேர்வு செய்யப்பட்டார்.
சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் வெள்ளித்திரைக்கு பக்கபலமாக அமைந்தது சின்னத்திரைதான். ஒரு மிமிக்ரி கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதையடுத்து 'மெரினா' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்து நடிகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக தன்னை தகவமைத்துக்கொண்டார்.
சாய் பல்லவி: 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி தான் சாய் பல்லவிக்கு வெள்ளித்திரைக்கான பாதையை அமைத்து கொடுத்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு, திரையுலகில் பிரதான கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
மாதவன்: இந்திய சினிமாவில் அனைவராலும் விரும்பக்கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாதவன். அவரது சினிமா பயணத்துக்கு விதைப்போட்டது 'சீ ஹாக்ஸ்', 'பனேகி அப்னி பாத்' மற்றும் 'கர் ஜமாய்' போன்ற சீரியல்கள்தான்.
பிரகாஷ்ராஜ்: தமிழ் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, பிரகாஷ் ராஜ் தூர்தர்ஷன் சீரியல்களில் 'பிசிலு குடுரே' மற்றும் 'குடடா பூட்டா' ஆகியவற்றில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
யஷ்: 'கே.ஜி.எஃப்' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யஷ்ஷின் தொடக்கம் சின்னத்திரைதான். ETV கன்னடாவில் ஒளிபரப்பான 'நந்த கோகுலா' உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானி: தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். அவர், 'ஷக லாகா பூம் பூம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனது கேரியரை தொடங்கினார். அது மட்டுமல்லாமல், 'டெஸ் மெய்ன் நிக்லா ஹோகா சந்த்' என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
தினேஷ்: நடிகர் தினேஷும் சன் டிவியின் 'பெண்' என்ற தொடரில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆவார். அந்த தொடரில் நடிகை சீதாவின் மகனாக தினேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷ்: ஐஸ்வர்யா ராஜேஷும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார். சன் டிவியின் பிரபல நிகழ்ச்சியான 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதேபோல், கலைஞர் டிவியிலும் பணிபுரிந்த பின் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
சந்தானம்: நடிகர் சந்தானத்தின் திரை வாழ்க்கை அறிமுகம் பலருக்கும் தெரிந்ததே. 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்து பிரபலமாகி அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர் சந்தானம். தற்போது இந்த அளவுக்கு சினிமாவில் வளர்ச்சி கண்டிருக்கும் அவருக்கு அடித்தளம் கொடுத்ததே டெலிவிஷன் தொடர்தான்.
விமல்: ராதிகா நடிப்பில் பல வருடங்களாக குடும்ப பெண்களை ரசிக்க வைத்த 'சித்தி' சீரியலில் நடிகர் விமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது இந்த சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதனை பயன்படுத்திக்கொண்டுள்ளார் விமல்.
சமுத்திரக்கனி: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் குணசித்திர நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது டிவிதான். ஒரு நடிகராக கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்துவதற்கு முன்பு நிறைய டிவி தொடர்களில் நடித்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. சமுத்திரகனி முதலில் கே.பாலசந்தர் இயக்கிய தொடரான 'ரமணி Vs ரமணி'யிலும், பின்னர் சன் டிவியின் 'அரசி' மற்றும் ஜெயா டிவியின் 'அண்ணி' தொடரிலும் நடித்திருக்கிறார்.
சூரி: நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஹீரோவாக நடித்த 'திருமதி செல்வம்' தொடரில் நடித்தவர்தான் சூரி. இந்த தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி.
இதேபோல் ஸ்ரீகாந்த், வாணி போஜன், மறைந்த நடிகர் விவேக் உட்பட பலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்தான். தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு உட்பட மற்ற மொழி சினிமாக்களிலும் சின்னத்திரையில் இருந்து வந்த நடிகர்கள் பலர் கோலோச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.