மீண்டும் உயிர் பெறுகிறதா ‘திராவிட நாடு’ முழக்கம்

மீண்டும் உயிர் பெறுகிறதா ‘திராவிட நாடு’ முழக்கம்
மீண்டும் உயிர் பெறுகிறதா ‘திராவிட நாடு’ முழக்கம்
Published on

தென் மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கை மீண்டும் வீரியத்துடன் எழத் தொடங்கியுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம் நாடு முழுவதும் வெடித்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரும் கோரிக்கையை கேரளா முன் வைத்தது. இது ஒருவகையில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. திராவிட நாடு கோரிக்கையை முழு மூச்சாக பேசியது தமிழகம்தான். ஆனால், தற்போது தமிழகத்தை தவிர மற்ற தென் மாநிலங்களில் இந்த கோரிக்கை எழுவதை பார்க்க முடிகிறது.

நாடு விடுதலை அடைவதற்கு முன்பு சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்ற பெயரில் தனிநாடாக்க பெரியார் முயற்சித்தார். 1940களில் அவர் இதை முன் வைத்து பேசியிருந்தார்.‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்கிற அண்ணாவின் பேச்சுகள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த காலம் உண்டு. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கிய தொடக்க காலத்திலும் அண்ணா, திராவிட நாடு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதை உணர்ந்த அவர் காலப்போக்கில் அந்தக் கோரிக்கையை ஒத்தி வைத்தார்.

தனித் திராவிடநாடு காலப்போக்கில் தனித் தமிழ்நாடு என்று கூட முழங்கப்பட்டது. ஆனால் அதுவும் பின்னர் மறைந்து போனது. மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற கொள்கைதான் இன்றளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் அண்ணா ஒருமுறை உரையாற்றியபோது கூட, திராவிட நாடு  கோரிக்கை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்று கூறியிருந்தார். 

திராவிட நாடு கோரிக்கைக்கு அடிப்படையான காரணங்களும் இல்லாமல் இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன  நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இவை அனைத்து திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856 இல் கால்டுவெல் எழுதியது இதற்கு ஒரு முக்கிய வித்தாக அமைந்தது. மொழி, கலாச்சாரம், பண்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களிடையே பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது. 

அதேபோல், வரலாற்று ரீதியாகவும், வட இந்திய மன்னர்களின் தாக்கம் தென்னிந்தியாவில் குறைவாகவே இருந்தது. ஒட்டு மொத்த இந்தியாவையும் கைப்பற்றிய மெகலாயர்கள் கூட தமிழகத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. மராட்டிய மன்னர்களின் படையெடுப்பாலும் தமிழகத்தில் பெரிய அளவில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. தென்னிந்திய மாநிலங்கள் வட இந்தியாவுடன் தனித்த மனநிலையிலேயே இருந்தது. 

விஜயநகர பேரரசின் காலத்தில் ஹம்பியில் இருந்து நிறையபேர் தமிழகத்தில் குடியேற்றப்பட்டார்கள். அதேபோல், கேரளா, ஆந்திராவில் எல்லைப் பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல்தான், கர்நாடகாவின் பெங்களூரு, கோலார் நகரங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். வணிக ரீதியாகவும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்களிடையேயும், தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாக இருக்கிறார்கள். அதாவது தென்னிந்திய மாநிலங்களில் மக்களிடையே ஒரு பிணைப்பு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருமொழி என்பது வரலாற்று ரீதியாக புழக்கத்தில் இருந்துள்ளன. தென்னிந்திய மாநிலங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்தார்கள்.

இருப்பினும்,தொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும்தான் தனி திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் இதைபற்றி எதுவும் பேசியது இல்லை. சென்னை தான் நான்கு மாநிலங்களுக்கும் முக்கிய தலைநகராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இன்றுவரை தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றாமல் வைத்திருப்பதும் அதற்கு ஒரு சான்று. ஆனால், அப்படி இருந்த காலங்கள் மாறி தற்போது தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கை முன் இப்போதுவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக கேரளா தான் இதனை தொடங்கி வைத்துள்ளது. 

தற்போது ஆந்திர மாநிலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை உரக்க பேசியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன், ‘5 தென்னிந்திய மாநிலங்களையும் தனிநாடு கோரிக்கையை எழுப்ப வைத்துவிடாதீர்கள்’ என்று பேசிய வீடியோ தற்போது யு-டியூபில் அதிக அளவில் பார்க்கப்படுகிறது. அவர் பிப்ரவரி 12ம் தேதி பேசியிருந்தாலும், கடந்த சில தினங்களாக அந்தப் பேச்சு வைரலாகி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்துள்ளது ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் பேச்சு. தென்னிந்திய மாநிலங்கள் கொடுக்கும் அதிக அளவிலான வரியை எடுத்து வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அவர் வெளிப்படையாக ஆந்திர மாநில சட்டசபையில் பேசியுள்ளார்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தங்களது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்களில்  தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒத்தக் கொள்கையில் செயல்படுகின்றன. இருப்பினும், கண்ணுக்கு பிடிபடாத ஒரு கோரிக்கையாகதான் திராவிட நாடு கோரிக்கை இருந்து வருகிறது. தற்போதையை நிலவரப்படி தென் மாநிலங்களுக்கு தனி நாடு கோரிக்கை எழுந்தால் தமிழகத்தில் இருந்து கூட எதிர்ப்பு வரலாம். சில தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித் தமிழ்நாடு கோரிக்கையில் தான் உறுதியாக இருக்கிறார்கள். தற்போது முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது என பல பிரச்னைகள் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே இருந்து வருகிறது. இதனால், தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி புதிய கோரிக்கையாக திராவிட நாடு உருவாவதற்கு தற்போதைக்கு சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் வரை தென்னிந்திய மாநிலங்கள் இடையே இயல்பான இயற்கையான ஒற்றுமை இருந்தது. ஆனால், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் இந்த ஒற்றுமையில் லேசான விரிசல் ஏற்பட்டது. நிறைய நன்மைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போது உள்ள பிரிவினை மன நிலைக்கும், தீர்வு காண முடியாத அளவிற்கு பிரச்னை செல்லும் அளவிற்கு செல்வதற்கும் தொடக்கமாக மொழிவாரி மாநில பிரிவினை அமைந்துவிட்டது. கேரள, ஆந்திர மாநிலங்களில் இருந்து எழும் புதிய குரல்கள், தற்போது நிலவி வரும் சிக்கல்களை தீர்த்து திராவிட நாடு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் லோகோவும் தென்னிந்திய மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும் கடந்து, அண்ணா கூறியது போல் ‘திராவிட நாடு’ கோரிக்கை சக்தி வாய்ந்த முழக்கமாக மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் இல்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com