சாதாரணமாக குப்பைக் கூளங்களை பார்த்தால் நமக்கு அருவெறுப்பாகத்தான் இருக்கும். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைப்போம். நம்முடைய வீட்டுக்குள்ளே இருக்கிற குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்துவதற்கு நமக்கு நெருடலாக, கோபமாக, இருக்கும். இந்த மனநிலையில் ஒரு ஊருக்குள்ளே இருக்கிற குப்பைகளை அகற்றுவது அப்புறப்படுத்துவது எவ்வளவு சிரமமான வேலை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
கழிவுநீர் வாய்க்காலில் ஒரு நாள் அடைப்பு ஏற்பட்டால் தெரு முழுவதுமாக கழிவு நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசும். நோய்த்தொற்றும் அபாயம் என்றெல்லாம் நான் பேசிக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் கழிவுநீரை அகற்றுவதே தன் வேலையாகவும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதே அவருடைய கடமையாகவும் எண்ணிக்கொண்டு பணியாற்றுகிறார்கள் துப்புரவு பணியாளர்கள். எளிய மனிதர்கள்தான்; ஆனால் நம்மைப் பாதுகாக்க ஒரு மிகப்பெரிய பணியை அவர்கள் செய்து வருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட எளிய மனிதர்களை தான் இன்றுதான் சந்திக்கப் போகிறோம்.
''என் பெயர் சுபா. எனக்கு வயசு 36 ஆகுது. விழுப்புரம் தான் சொந்த ஊரு. அஞ்சு வருஷமா இந்த ஊர்ல தான் குப்பை பெருக்கி குப்பை கலெக்ட் பண்ற வேலையை செய்கிறேன். காலைல அஞ்சு மணிக்கு வருவேன் வேலைக்கு. அப்ப கையில தொடப்பத்தை புடிச்சன்னா 11. 30 வரைக்கும் வேலை செய்துகிட்டு தான் இருப்பேன். அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டு 2 மணிக்கு மறுபடியும் வேலைக்கு வருவேன். 5 மணி வரைக்கும் வேலை செஞ்சிட்டு இருப்பேன். இந்த மக்கும் குப்பை, மக்காத குப்பை, அந்த வேலை, இந்த வேலைன்னு ஏதாவது வேலை இருந்துட்டே தான் இருக்கும். எங்க வீட்டுக்காரர் லோடுமேன். மூட்டை தூக்கற வேலை அவருக்கும் தினமும் வேலை இருக்குன்னு சொல்ல முடியாது. எனக்கு மூணு புள்ளைங்க எல்லாரும் படிக்கிறாங்க.
காலையில பெருக்க தொடங்கினால் 12 மணி வரைக்கும் பெருக்கிகிட்டே தான் இருப்போம். ஒரு சில வீடுகளில் குப்பை அதிகமா இருக்கும் ஒரு சில வீடுகளில் பெரும்பாலும் குப்பை இருக்காது. அவங்களே கூட்டி வைத்திருப்பார்கள். இன்னும் சில வீடுகளில் நாம எப்போது குப்பை பெருக்கு வருவோம்னு தூங்கி எழுந்திருக்காமல் படுத்திருப்பாங்க. இருந்தால் நம்ம வேலை தானே அது அப்படியே பார்க்காம அந்த வேலையை செய்றது. இது மட்டும் இருந்துட்டா கூட பரவாயில்லைங்க. நிறைய கழிவுப் பொருள் எல்லாம் கொண்டுவந்து போட்டிருப்பாங்க. இன்னும் சொல்லப்போனால் வீடுகளில் பொம்பளைங்க சாதாரணமா பயன்படுகிற தீட்டுத்துணி கூட அப்படியே போட்டுட்டுப் போயிடுவாங்க. அது இயற்கை தான் நாம ஒன்னும் அது பெருசா எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும்இப்படித்தான் ஒவ்வொரு நாளும் வேலை செஞ்சிட்டு இருக்கேன். தீட்டு துணியை அவங்க கவரில் போட்டு கொடுத்தா கூட நுனிவிரலதான் புடிச்சு கொடுப்பாங்க. ஆனா நாங்க ரெண்டு கையையும் நீட்டி தான் வாங்குவோம். அது பத்தி நாங்க பெருசா நினைச்சிக்கிறது இல்ல. அவங்க தான் அது ஏதோ தீண்டத் தகாத துணி மாதிரி பார்ப்பாங்க நாங்க அப்படி பார்க்கிறது இல்லை.
சில பேர் அன்பா பழகுவாங்க. சில வீடுகளில் நாங்க வர நேரத்திற்கு டீ, காபி எல்லாம் கூட போட்டு கொடுப்பாங்க அவங்கள நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும். அந்த மாதிரி ஆளுங்களை பார்க்கும்போது இங்களுக்காக எந்த வேலை வேணாலும் செய்யலாம்னு தோணும். சில பேர் இருக்காங்க நாங்க வரும்போது தொடப்பம் வருது, குப்பை வண்டி வருது, விசில் வருது இப்படி எல்லாம் கேலியா பேசுவாங்க. அதெல்லாம் ஒரு காதில் வாங்கி ஒரு காதுல விட்டுட்டு வேலை செஞ்சிட்டு தான் இருப்போம். ஏன்னா இவங்க ஒரு சிலரால நிறைய பேர் பாதிக்கக்கூடாது இல்லையா அப்படி இங்கறதுக்காக.
எங்களுக்கு ஒரு நாள் லீவு போட்டாலும் அன்னைக்கு பூரா அந்த தெருவின் நினைப்புதான் இருந்துகிட்டே இருக்கும். யாரு வீட்டில குப்பை அதிகமா இருக்கும் யாராவது போட்டுட்டு எல்லாம் தெருமுழுக்கு குப்பை பரவிட போது அத உடனே அப்புறப்படுத்தனும் அப்படி தான் நெனப்பு இருக்கும். சொந்த விஷஷேசத்துக்கு வந்தாலும் சரி துக்க நிகழ்ச்சிக்கு போனாலும் சரி தெருவுதான் முன்னாடி நிக்கும்.
எந்த ஊருக்கு போனாலும் தெருவில் கண் குப்பையை கண்டு கொண்டிருக்கும். இங்க வேலை செய்றவங்க யாரோ ஏன் சரியா வாரல இப்படி எல்லாமே தோணும். ஒவ்வொரு நாளும் வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போனா அடிச்சி போட்ட மாதிரி தூக்கம் வரும். அப்படி தூங்க முடியுமா வயிறுன்னு ஒன்னு இருக்கு. எனக்கு மட்டுமா எங்க குடும்பத்துல புள்ளைங்க எங்க வீட்டுக்காரருக்கு எல்லாருக்கும். சோறு வேணும் இல்ல. இவ்வளவு வேலைக்கு நடுவிலும் 5 பேருக்கு வயிறு இன்னும் ஒன்னு இருக்கு இல்ல அதுக்காக கொஞ்சம் வேலை செய்யணும். கூலி என்னமோ கம்மிதான் எல்லாரும் நினைக்கிறாங்க ஊட்டுக்கு அம்பது நூறு கொடுப்பாங்கன்னு அப்படி எல்லாம் யாரும் கொடுக்கிறதில்லை.
தீபாவளி பொங்கல் அப்படின்னா ஏதாவது குடுப்பாங்க அவ்வளவுதானே தவிர பெருசா எதுவும் வீடுகள்ள நாங்களும் வாங்குவதில்லை. உழைக்கறதுக்கு தகுந்த கூலி கிடைக்கும் போது நாம எங்க பிச்சை எடுக்கனும்'' என்றார்.
பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலும் சாலைகளில் நடமாடியவர்கள் துப்புரவு பணியாளர்கள் தான். அரசும் கூட தூய்மைப் பணியாளர்களை முன் களப்பணியாளர்கள் என்று கௌரவப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனாலும் நம்மைப் போன்றவர்கள் அவர்களை மனிதர்களாக மதிப்பதை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்
- ஜோதி நரசிம்மன்
இதையும் படிக்கலாம்: எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’