திரைப்பட இயக்குநர் என்றால் இயக்குநர்தான். இதில் ஆண், பெண் பேதத்திற்கு அவசியமில்லை. ஏனென்றால், கலை எனும் அற்புதக் கருவி இங்கு அனைவரின் கரங்களுக்கும் பொதுவானது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களை, வெற்றியின் சிகரத்தில், புகழின் உச்சியில் அமர வைத்து அழகு பார்க்க, தமிழ் சினிமா தவறியதில்லை. ஆனால், ஒட்டுமொத்த சினிமாவில் பணியாற்றும் கலைஞர்களில் 99 சதவிகிதம் பேர் ஆண்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
இதயம் நிறைய கனவுகளுடன் வரும் ஒரு பெண், சினிமாவில் நடிப்பு, பின்னணி குரல் உள்ளிட்ட துறைகளைக் கடந்து ஜொலிப்பதில் இங்கு பல சிக்கல்கள் உள்ளன. தயாரிப்பாளர், ஹீரோ, முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் என ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இத்துறையில், பல தடைகளைத் தகர்த்து இயக்குநராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார், மைக் பிடித்த சினிமா தேவதைகள் சிலர்.
1. சுதா கொங்கரா
பெண் இயக்குய்நர்களில், முக்கியமான இயக்குநர் என்றால், சுதா கொங்கராவைச் சொல்ல வேண்டும். சினிமாவில் இயக்கம் என்பது அத்தனை சுலபமல்ல.. அது, கற்பனையில் உதிக்கும் சிந்தனையை, ஒரு குழுவின் உதவியோடு திரையில் காட்சியாக்கும் சவால் மிகுந்த பணி. அப்பணியை ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பாக செய்ததற்காக, தேசிய விருதை வென்றிருக்கிறார் சுதா கொங்கரா.. இவர், ANDHRA ANDAGADU எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்.
அதன்பின் ’துரோகி’ என்ற திரைப்படத்தை இயக்கி, இறுதிச் சுற்றில் படத்தில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தார். அது சுதாவின் தனித் திறமையை தமிழ் சினிமாவுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தது. அதன்பின் அவர் சூர்யாவுடன் இணைகிறார் என்றதுமே, திரைத்துறையின் கவனம் இக்கூட்டணியின் பக்கம் திரும்பியது. அதில் சிறப்பான பங்களிப்பை செய்து இன்று தேசிய விருது நாயகியாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார், சுதா கொங்கரா. தமிழில் உருவான ’சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக, அது இப்போது இந்தியில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது.
2. ஹலிதா ஷமீம்
சுதா கொங்காராவின் வரிசையில் குறிப்பிட வேண்டிய மற்றொரு இயக்குநர், ஹலிதா ஷமீம். எதார்த்த கதைகளின் மூலமாக இதயங்களைத் தொடும் மாயக்காரி இவர். 2014ஆம் ஆண்டு வெளியான ’பூவரசம் பீப்பி’ திரைப்படம்தான் இவரின் அறிமுகப் படைப்பு. ’பூவரசம் பீப்பி’ மூலமாக தமிழ் சினிமாவில் தனி இசையால் ஒலித்த ஹலிதா, சில்லுக் கருப்பட்டி படம் மூலமாக ரசிகர்களின் மனதை தித்திக்க வைத்தார். இந்த காதல் எத்தனை வசீகரம் கொண்டது என்பதை, தன் தனித்துவ காட்சிகளால் இதயங்களுக்கு கடத்தியிருப்பார். ’ஏலேய்’, ’புத்தம் புது காலை விடியாதா’ என இவரின் அடுத்தடுத்த படைப்புகள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும், ஆன்மாவைத் தொடும் கதைகளை தமிழ் சினிமாவுக்கு தர தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார், இயக்குநர் ஹலிதா ஷமீம்.
3. கிருத்திகா உதயநிதி
ஹலிதாவைப் போலவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு இயக்குநர், கிருத்திகா உதயநிதி. நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல் பிரபலமுமான உதயநிதியின் மனைவி.. அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இவருக்கு ஆர்வம் எல்லாம் சினிமாவில்தான் உள்ளது. கற்பனைகளும், கனவுகளோடும் கலைக் கருவையை கையில் எடுத்த கிருத்திகா, தமிழ் சினிமாவுக்கு முதலில் கொடுத்த திரைப்படம் ’வணக்கம் சென்னை’. சிவா, பிரியா ஆனந்தின் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில், அனிருத்தின் இசையில் உருவான பாடல்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட். அதைத் தொடர்ந்து ’காளி’ படத்தை இயக்கிய கிருத்திகா, ’பேப்பர் ராக்கெட்’ படத்தை இயக்கி ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
4. நடனக்கலைஞர் பிருந்தா
தனித்திறன் கொண்ட கலைஞர்களை, தமிழ் சினிமா ஒரே பாதையில் பயணிக்க விடாது எனலாம். அந்த கூற்றுக்கு உதாரணமாக சொல்ல வேண்டியவர், நடனக்கலைஞர் பிருந்தா. நடன வடிவமைப்பில் அசைவுகளை அழகியலாக்கும் இவர், மைக்கை, கைப்பற்றி காட்சியாக்கும் கலைஞராகியிருக்கிறார். நாட்டியத்தில் அழகிய ஆட்டமாடி, ரசிகர்களை எல்லாம் ஆட்டுவித்த பிருந்தா, ’ஹே சினாமிகா’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர்களை ஆட்டுவிக்கும் நடனத்தில் இருந்து, ஒட்டுமொத்த குழுவையுமே ஆட்டிவைக்கும் இயக்கத்தில் நுழைந்திருக்கும் பிருந்தா, அடுத்த படத்திற்கும் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
4. இயக்குநர் காயத்ரி
இவர்களின் வரிசையில் தவிர்க்க முடியாத இயக்குநர் காயத்ரி. இயக்குநர் புஷ்கரின் மனைவி. ஆசியாவிலேயே கணவன் மனைவியாக இருக்கும் இயக்குநர்கள் இவர்கள். புஷ்கரும், காயத்ரியும் சினிமாவின் DUAL COMBO எனலாம். வீட்டில் மட்டுமல்ல, வேலையிலும் இணைந்தே பணியாற்றும், CINEMA COUPLE. ’ஓரம்போ’ தமிழ் சினிமாவுக்குள் உள்ளே போன இவர்கள், ’வா குவாட்டர் கட்டிங்’ படம் மூலம் புது அனுபவத்தைக் கொடுத்தார்கள். ’விக்ரம் வேதா’ எனும் மெகா ஹிட் திரைப்படம், இவர்களின் வெற்றி கிரீடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பதிந்தது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
5. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சுதா கொங்கரா, ஹலிதா ஷமீம், கிருத்திகா உதயநிதி, பிருந்தாவின் பட்டியலில் மற்றொரு இயக்குநரையும் குறிப்பிட வேண்டும். அவர்தான் ஐஸ்வர்யா ரஜினி காந்த்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைமகள்... நடிப்புத்துறையில் கொடிநாட்டிய ரஜினியின் வாரிசான இவர், நடிப்பில் அல்லாமல் இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என களமிறங்கிய இவர், தனுஷின் ’3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில், காதல் கதையை காட்சிகளாக்கி, அதன் கணத்தோடு இதயத்தில் இறக்கினார். இன்று ராக் ஸ்டாராக இருக்கும் அரபிக்குத்து அனிருத்துக்கும், இதுதான் அறிமுகத் திரைப்படம். முதல் படத்திலேயே சினிமாவில் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ரஜினி.
இவர்களைப் போலவே லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரேவதி, ரோஹினி, சுஹாசினி, பி.பானுமதி உள்ளிட்ட ஏராளமான பெண் கலைஞர்கள் சினிமாவில் இயக்குநர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள். தனித் திறமைகளுக்கு, தனி இடம் கொடுக்கும் தமிழ் சினிமா உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்க என்றும் தவறியதில்லை. அப்படி, தீவிர பயிற்சியால், விடாமுயற்சியால் உயர்ந்த இக்கலைஞர்களைப்போல், இயக்கம் மட்டுமின்றி சினிமாவின் அனைத்து முன்னணி துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.
- புனிதா பாலாஜி