இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்கிறது. மாநிலத்திலேயே முதல் இடம், மாவட்டத்தில் முதல் இடம், பள்ளியில் முதல் இடம் என்று முதல் இடங்களைக் குறிப்பிட்டு, பிற மாணவ மாணவிகளுக்கு குற்ற உணர்வும் கூச்சமும் ஏற்படும் அளவுக்கு செய்யப்படும் அறிவிப்புகளும் களேபரங்களும் இந்த முறை இல்லை.
இந்த மாற்றம் ஆரோக்கியமானது என்று கல்வியாளர்கள் பலர் கூறியிருக்கின்றனர். அரசும் இதையே சொல்கிறது. இது குறித்து கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறுகையில், இந்த நாட்டைப் போல வேறு எந்த நாட்டிலுமே தேர்வுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றார். அதிலும் பள்ளி இறுதித் தேர்வு என்பது அதுதான் வாழ்க்கையே என்பது போல மிகைப்படுத்தப்படுகிறது என்கிறார்.
படிப்பது எளிமையாக இருக்க வேண்டும். எல்லாமே மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தேர்வை அடிப்படையாக வைத்து நமது கல்வி முறை இயங்குவது
முழுமையான அறிவைப் பெற வழி வகுக்காது. உதாரணமாக ஒரு மாணவர் புத்தகத்தில் உள்ள 60 சதவீதத்தைப் படித்தாலே போதும் இவர்கள் சொல்லும் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று விடலாம். ஆனால் அதில் அவர் முழுமையான அறிவு பெற்றிருக்கிறாரா என்பது கேள்விக்குறிதான். உதாரணமாக தமிழிலில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் நிச்சயமாக யாப்பிலக்கணம் குறித்த கேள்விக்கு சரியாகவே பதில் எழுதுகிறார்கள். ஆனால் யாப்பிலக்கணம் தெரிந்தால் அவருக்கு செய்யுள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு அது தெரியுமா? எனவே அவர்கள் யாப்பிலக்கணத்தை முழுமையாகப் புரிந்திருக்கிறார்களா என்பதற்கான கேள்விகள் அமைவதில்லை. அதற்குப் பதிலாக யாப்பிலக்கணம் என்றால் என்ன என்று கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்து மார்க் வாங்கி விடுகிறார்.
கல்லூரியில் இடம் கிடைப்பதில் நிறையப் போட்டிகள் உள்ளதால், மதிப்பெண்கள் அடிப்படையாக வைக்கப்படுகின்றன. இந்த சிஸ்டமே தவறு. ரேங்க்கிங் சிஸ்டமும் எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை. தேர்வுத் தாள்களைத் திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு நிறைய வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகத் திருத்துவதில்லை. உதாரணமாக ஒரு பாடத் தேர்வுத் தாளை மட்டுமே சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் திருத்துகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மதிப்பெண்கள் அளிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.