கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகிலுள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சுவாமிதாஸ் இளவரசின் முயற்சி புதுமையாக இருக்கிறது. இலக்கிய மன்றங்களின் மூலம் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்ப்பதோடு, ஆண்டுதோறும் மாணவர்களை ஆசிரியர் குழுவாக உருவாக்கி கையெழுத்துப் பத்திரிகைகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறார்.
“ஒவ்வொரு ஆண்டும் 8, 9, 10ம் வகுப்பு மாணவர்கள்தான் கையெழுத்துப் பத்திரிகைகளைத் தயாரிப்பார்கள். சில குழுக்களாக அவர்களைப் பிரித்துவிடுவோம். சுமார் பதினைந்து மாணவர்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பத்திரிகைக்கும் ஒரே பெயர் கிடையாது. பெயர்கள் மாறுபடும். குறிஞ்சி, தமிழருவி, பூவிதழ் என மாறுபட்ட பெயர்களை மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ஆசிரியர் இளவரசு.
பல்சுவை இதழாக வெளிவரும் பள்ளி மாணவர்களின் கையெழுத்துப் பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏ4 அளவில் 30 பக்கங்களில் வெளியிடுகிறார்கள். நான்கு பிரதிகளைத் தயாரித்து பள்ளி நூலகத்தில் படிப்பதற்காக பார்வைக்கு வைக்கிறார்கள். ஆண்டுதோறும் மாணவர்களால் தயாரிக்கப்படும் இந்த கையெழுத்துப் பத்திரிகையை உள்ளூர் மக்கள் முன்னிலையில் சுதந்திர தினத்தன்று வெளியிட்டு மகிழ்கிறார்கள்.
“கதை, கட்டுரைகள், புதிர்கள், துணுக்குச் செய்திகள் என பல்சுவைத் தகவல்களை எழுதுவதில் மாணவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். பள்ளியைப் பற்றியும், ஆசிரியர்களைப் பேட்டி எடுத்தும் எழுதுவார்கள். மாணவர்களின் படைப்புத்திறன் வளர்ப்பதற்கான வாய்ப்பாக கையெழுத்துப் பத்திரிகை பயன்படுகிறது” என்கிறார் இளவரசு.
(தமிழாசிரியர் இளவரசு)
2014ம் ஆண்டு முதல் வெளிவரும் மாணவர்களின் இந்தப் பத்திரிகை தடையில்லாமல் தடம்பதித்துவருகிறது. அறையில் ஆடினால் அம்பலத்தில் ஆடலாம் என்பதைப் போல கையெழுத்துப் பத்திரிகையில் எழுதிப் பழகும் மாணவர்களில் சிலர், தொடர்ந்து கவிதைகள் எழுதும் கவிஞர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்தப் பணியுடன் மட்டும் தமிழாசிரியர் இளவரசு நிறுத்திக்கொள்ளவில்லை. பள்ளி மாணவர்களின் பன்முக வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுவருகிறார்.
“எங்கள் பள்ளிக்கு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்தான். ஆனாலும் மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வெல்பவர்களாக உயர்ந்துள்ளார்கள். முன்னாள் மாமவர்கள், ஊர்ப் பெரியவர்களின் உதவியுடன் காலணிகள், சீருடைகள், ஸ்போர்ட்ஸ் உபகரணங்களை இலவசமாகப் பெற்றுக்கொடுத்திருக்கிறோம். வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் போன்ற போட்டிகளில் மாநில அளவில் வென்றுள்ளார்கள். இத்தனைக்கும் எங்கள் பள்ளியில் மைதானமே கிடையாது. வயல்வெளிகளில், தோப்புகளில் மாணவிகள் விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறுகிறார்கள்” என்று கூறும் இளவரசு, மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்துவதிலும் பேரார்வம் காட்டிவருகிறார்.
தேசிய அளவில் நடத்தப்படும் மாணவர்களின் திறன் போட்டித்தேர்வுகளில் விமல்குமார், செல்வராஜ் ஆகிய இரு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களில் வென்று பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற்றுவருகிறார்கள். “பள்ளி மாணவர்களின் தொடர்பு என்பது பள்ளியுடன் முடிந்துவிடுவதில்லை. பிளஸ் ஒன் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவில் சேரலாம் என்பது தொடங்கி மேற்படிப்புகள் வரையில் நாங்கள் ஆலோசனைகள் தருகிறோம். பள்ளியைத் தாண்டியும் மாணவர்கள் உயர்வில் பங்கெடுப்பதை பெருமிதமாக உணர்கிறோம்” என்று தாய்மை உணர்வுடன் பேசுகிறார் தமிழாசிரியர் இளவரசு.