'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?

'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
Published on

"காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதன்பின், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்."

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள துறைமுகத்தை 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணம் என்ன?

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் துறைமுகத்தை 2012ம் ஆண்டிலிருந்து எல்&டி நிறுவனம் இயக்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97 % பங்குகளை 1950 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்கி தற்போது அதை விரிவாக்கம் செய்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி விண்ணப்பித்துள்ளது.

இத்திட்டத்திற்குத் தேவையான 6,110 ஏக்கர் நிலப்பரப்பில், 2,291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலமும், 1,515 ஏக்கர் TIDCO-க்குச் சொந்தமான தனியார் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் சுமார் 1,967 ஏக்கர் கடல் பரப்பும் கைப்பற்றப்பட உள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு 2,000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். இது மீண்டும் சரிசெய்ய இயலாத கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை அதானி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி மீஞ்சூரில் நடத்தப்படுமெனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடல் உணவுகள் அதிகம் கிடைக்கும் இப்பகுதியில் இந்தத் திட்டத்தால், மீன்வளம் வெகுவாகக் குறைந்து, தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவர்களும், இருளர் சமூக மக்களும், பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், துறைமுக விரிவாக்கப்பணிகள் குறித்து மக்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும், கொரோனா பேரிடர் காலத்தில் அதிகளவு மக்கள் கூட இயலாத நிலையில் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள், மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தினால் ஆபத்துகள் ஏற்படும் என்று பட்டியலிட்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொறியாளர் வீ.பிரபாகரன் “இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரி இத்திட்டம் வரவிருக்கும் காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகமும், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் சூழப்பட்டிருப்பதால் இது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 (critical for maintaining ecosystem of coast) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்துவது சட்டவிரோதமானது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதின் மூலமாக சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி அழிவதற்க்கான வாய்ப்புள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பின்படி, உயர்மட்ட கடல் அரிப்புகளைக் கொண்ட கடற்கரைகளில் துறைமுகங்கள் இருக்க முடியாது. காட்டுப்பள்ளிக் கடற்கரையோரம் வேகமாக அரிக்கப்படும் ஒன்று. மேலும், 10 கிமீக்குள் வனவிலங்கு சரணாலயம் இருக்கும்பட்சத்தில் துறைமுகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதானியின் துறைமுகம் பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் மூலமாக 2000 ஏக்கரில் தொழில்நுட்ப பூங்காவையும் அமைக்கவுள்ளனர். இந்தக் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2.1 கிலோமீட்டர் சுற்றளவில் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதனால் பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலத்தில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் எந்த தொழில் திட்டங்கள், தொழிற்சாலைகள், பூங்காக்கள் அமைக்கக்கூடாது என்ற விதி உள்ளது. அதனால் சட்டப்படி இந்த திட்டத்தை செயல்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. மக்கள் கருத்து கேட்புக்கூட்டங்கள் என்பது சட்டத்திற்கு உட்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டமே சட்டவிரோதமானது என்பதால் இதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதே தவறு.

மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும்தான் “வெள்ள வடிகாலாகச்” செயல்பட்டு சென்னையைக் காக்கின்றன. கடந்த சென்னை வெள்ளத்தின்போது அதிகளவு தண்ணீர் கடலில் கலந்தது கொற்றலை ஆற்றில்தான், இங்கே தடுப்பு கட்டப்பட்டால் சென்னையின் வெள்ளம் வடிய வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ.களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி உள்ள இந்நிலையில், இந்தத் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் மீதமிருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. அதன்பின், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன. தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

நாடுமுழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் அதானி குழுமம் விவசாயிகளோடு நில்லாமல் மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதானி குழுமத்திற்கு முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரைவார்க்கபட்டுள்ளன.  இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வர்த்தகத்தையும் அதானிக்கு ஒப்படைப்பதை சூழலியல் ரீதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நலன் அடிப்படையிலும் நாம் எதிர்க்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் லாபவெறிக்காக தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து, 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம்” என்கிறார்

’தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்களான சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆகியவை இணைந்து 2019-20ல் 12.2 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் மொத்த சரக்கு கையாளுதல் திறன் ஆண்டுக்கு 27.4 கோடி டன். துறைமுகத்திறனில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை செயலற்றவை மற்றும் பயன்படுத்தப்படாதவையாகவே உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் ஆண்டிற்கு 32 கோடி டன் சரக்குகள் கையாளும் விதத்தில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் கோருவது தேவையற்றது. இத்துறைமுகம் நிலைபெறுமானால் அதிகச் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காகவும் அதனை வகைசெய்யும் விதத்திலும் மீண்டும் எட்டு வழிச்சாலையை அமைக்கும் பணி கட்டாயமாக்கப்படும்’ என்று சூழலியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com