சாதிவாரி கணக்கெடுப்பு: வலுக்கும் குரலும், மத்திய அரசின் அணுமுறையும் எத்தகையது?

சாதிவாரி கணக்கெடுப்பு: வலுக்கும் குரலும், மத்திய அரசின் அணுமுறையும் எத்தகையது?
சாதிவாரி கணக்கெடுப்பு: வலுக்கும் குரலும், மத்திய அரசின் அணுமுறையும் எத்தகையது?
Published on

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு சாதிவாரியாக வழங்கப்படுகிறது,  இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்கள் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். 

இட ஒதுக்கீடு என்பது என்ன?

எதன் பெயரை சொல்லி மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டதோ அதன் பெயரிலேயே அந்த மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் வழங்குவதே சமூக நீதி. இந்தியாவில் சாதியில் பெயராலேயே இவை பறிக்கப்பட்டன, அதனால்தான் இங்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விகிதாச்சாரங்களில் இட ஒதுக்கீட்டினை வழங்குகின்றன.  இவை பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

சமீபத்திய காலங்களில், தங்களுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கிறது அல்லது எங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீடு இல்லை எனக்கூறி பல சமூகங்களும் சாதிவாரி கணக்கெடுப்பையும், உள் ஒதுக்கீட்டினையும் கேட்டு வருகின்றன, அதுவே தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு எவ்வளவு?

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள இடங்களில் 31 சதவீத இடங்கள் பொது பட்டியலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீடு போக, 26.5 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்கிறது. அதுபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. பட்டியிலின மக்களுக்கான 19 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு போக 15 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலின மக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியர் உள் ஒதுக்கீடு:

தமிழ்நாட்டிலும் பெரும்பாலான கட்சிகள் சாதிவாரியான கணக்கெடுப்புக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் ஆதரவாகவே உள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வன்னியர் சமூகத்துக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

அருந்ததியர் இட ஒதுக்கீடு:

தற்போது வழங்கப்பட்டிருக்கும் வன்னியர் சமூக உள் ஒதுக்கீட்டுக்கு முன்னுதாரணமாக அமைந்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடுதான். தாழ்த்தப் பட்டோரின் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு அருந்ததியர் மக்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்குவதாக 2009 மார்ச் மாதம் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே ஆண்டு மே-29ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.

வலுக்கும் சாதிவாரி இடஒதுக்கீடு குரல்:

அரசாங்கமே சாதிவாரியான கணக்கெடுப்பினை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்கவேண்டும் என்ற குரல் இந்திய அளவில் மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கைக்காக குரல் எழுப்பி வருகின்றன.

இது தொடர்பாக தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு இன்னும் தொடங்கப்படவில்லை, அதனால் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று பல கட்சிகளும் கோரிக்கை வைத்தன. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “ பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் கணக்கெடுப்பைத் தவிர, இதர சாதி கணக்கெடுப்பை நடத்தவேண்டாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது” என தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவும், எதிர்ப்பும்:

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அந்தந்த சமூகங்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ற சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்பு உருவாகும். இதன் காரணமாக காலம் காலமாக சாதிய அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகங்களுக்கு, அதன் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும், தற்போது இட ஒதுக்கீட்டு முறையில் நடக்கும் பல தவறுகளும், சுரண்டல்களும் தடுக்கப்படும் என்று சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உள்ள தரப்பு குரல் எழுப்புகிறது.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் சாதிரீதியான கட்டமைப்பு மேலும் கூர்மைபெறும் வாய்ப்பு உருவாகும், சாதிவாரி கணக்கெடுப்பை கையில் வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான பேரம் பேசும் வாய்ப்புகளும் ஏற்படும், இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமற்றது என்று இதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கின்றன.

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாமா?

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத பட்சத்தில், மாநில அரசே இதனை நடத்தும் சட்ட உரிமை உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இந்த பணியையும் சேர்த்து செய்வது மிக எளிதானது. ஆனால், மாநில அரசு தனியாக சாதிவாரியான கணக்கெடுப்பை செய்வது மிகப்பெரிய பணியாகும், இதற்கு பின்னால் பல சவால்களும் உள்ளன என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com