இந்தியாவில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் எஸ்.ஐ.க்கள் மற்றும் 10 பெண் காவலர்களை பணியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், காலியாக உள்ள ஆண் காவலர்களின் பணியிடங்களில் பெண் காவலர்களை நிரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
நடந்து முடிந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது, இந்தியாவில் உள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கை குறித்து கார்த்தி சிதம்பரம் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமான 20 லட்சம் காவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 10.30 சதவிகிதம், அதாவது 2.15 லட்சம் பேர் பெண் காவலர்கள். இதில், சிவில், மாவட்ட ஆயுதப் படை, சிறப்பு ஆயுத காவலர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் போலீஸ் (பட்டாலியன்) ஆகியவை அடங்கும்.
தரவுகளின் படி, காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16.05 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 காவலர்களில் ஒருவர் பெண் காவலர் உள்ளனர். 9,82,391 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ள துணை ராணுவப் படைகளில் 29,249 பெண் காவலர்கள் பணியில் உள்ளனர்.
இந்தியா முழுவதும் 800 மாவட்டங்களில் சுமார் 16,855 அனுமதிக்கப்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. 2019 ஆண்டில் மட்டும் 1,19,069 காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தகவலின் படி, காவல்துறையில் 5,31,737 காலிப்பணியிடங்கள் இருக்கிறது.
இது தொடர்பாக வழக்கறிஞரும் மனித உரிமைகள் ஆர்வலருமான சுதா ராமலிங்கம் கூறும்போது, "சமீபத்திய தகவலின் படி, பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். பொதுவாகவே காவல்துறை மட்டுமின்றி அனைத்து விதமான துறைகளிலும் பெண்களின் ஈடுபாடு குறைவாகவே இருக்கிறது. ஆண்களால் மட்டும் அனைத்தும் செய்ய முடியும் என்று சிந்திக்கிற மனோபாவம் பலருக்கும் இருக்கிறது. இதனாலேயே அனைத்து துறைகளிலும், பெண்களுக்கான உரிமைகள் குறைப்பட்டுவிடுகின்றன. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை, பெண்கள் மென்மையானவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்துவது, இரவு பணி போன்றவை பாதுகாப்பற்றது என்ற கருத்து இருந்து வந்தது. இதனால், ஆரம்பக்கட்டத்தில் பெண்களை ஈடுபடுத்தப்படாமலேயே இருந்தனர். ஆனால், காலப்போக்கில் பெண்கள் தங்கள் பங்களிப்பை இந்த சமூகத்திற்கு கொடுத்து வந்ததால், வெறும் பொருட்காட்சிக்காக மட்டுமே பெண்களை ஈடுபடுத்தி வந்த நிலை மாறி, தற்போது, பெண்களின் திறமைகளை அறிந்து, அதற்குத் தகுதியான வேலையான, பாதுகாப்புப் பணி, இரவுநேர பணி என பல்வேறு விதமான பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பெண்களை அனுமதித்து வருகின்றனர். பல இடங்களில் இதுபோன்ற பணிகளில் இதற்கு முன் ஆண்களை மட்டுமே அனுமதித்து வந்தனர்.
நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கொண்டால், கழிவறை பிரச்னைகள், மாதவிடாய், மகப்பேறு ஆகியவைதான் பெண் காவலர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகள். இதுபோன்ற சூழ்நிலையில் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக இருந்தாலும், நீண்ட நேர பணி, போதிய வசதியின்மை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காத காரணங்களினால் அவை சிக்கல்களாக மாறிவிடுகின்றன. ஆயுதப் படைகளில் கூட ஆண்களுக்கு ஈடாக பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது என தனியாக வேறுபடுத்திக் காட்ட முடியாது.
பணிச்சூழல், அடிப்படை வசதிகளோடும் போதுமான பாதுகாப்புடனும் இருந்தால், காவல் துறையில் மட்டுமல்ல; வேறெந்தத் துறையிலும் எப்படியான சவால்களையும் பெண்கள் எதிர்கொள்ளத் தயங்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலை அமைத்துத் தரும்போது பெண்களின் பங்களிப்பு அதிகளவிலேயே இருக்கும்" என்றார் சுதா ராமலிங்கம்.