ஆட்டு இனங்களில் வரையாடு கூடுதல் உடல் வலிமை கொண்டது. பிறக்கும்போதே அதன் கால்கள் மிக வலிமையாக அமைகின்றன. வரையாடுகள் பெரும்பாலும் மலைச்சரிவுகளில் வாழும் தன்மை கொண்டவை. அதனால் சரிவுகளில் ஏறி இறங்க அதன் கால்கள் இயற்கையாவவே வலிமையாக அமைகின்றன. தென் இந்தியாவின் பசுமைப் பொக்கிஷம் என மேற்கு தொடர்ச்சி மலையினைக் கூறலாம். ஆயிரம் ஆயிரம் காட்டுயிர்களுக்கு உயிராதாரமாக இருப்பது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.
தற்போது உணவுக்காக வளர்க்கப்படும் வளர்ப்பு ஆடுகளும் முன்பு காட்டு ஆடுகளின் வகைக்குள் இருந்தவைதான். மனித கரங்களுக்குள் வளர்க்கப்பட்டதால் அதன் ஆதிதன்மை மாறிப் போய்விட்டது. ஆனாலும் இப்போதும் தனது ஆதிதன்மை குறையாமல் இருக்கும் சில ஆட்டு வகைகளில் வரையாடு முக்கியமானது. சங்கப் பாடல்களில் மரையா என வழங்கப்பட்டவைதான் இந்த வரையாடுகள்.
இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பில் விரிந்து கிடந்த இந்த வரையாடுகள் 19ஆம் நூற்றாண்டில் தான் அதிகமாக வேட்டையாடப்பட்டதாகச் சொல்கின்றன தகவல்கள். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பரவலாக இந்த ஆடுகள் வேட்டையாடப்பட்டதால் தற்போது ஆங்காங்கே குறைந்த அளவில் குழுக்களாக வாழ்கின்றன.
அழிவின் விழிம்பில் உள்ள அரிய வகை “வரையாடுகள்”, இந்தியாவில் இமயமலைக்கு அடுத்து பாதி சதவீதம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலை, மீசைப்புலிமலை, மறையூர், மாங்குளம் பகுதிகளில் வாழ்கின்றன.
ஜனவரி முதல் மார்ச் இறுதிவரையிலான காலமே இவற்றின் இனப்பெருக்க காலமாக உள்ளது. பிரசவ காலங்களில் வரையாடுகளுக்கு மிகுந்த அமைதி தேவைப்படும். கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இரவிகுளம் தேசியப் பூங்காவில் 723 வரையாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 115 புதிய வரையாட்டுக் குட்டிகள் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் மாநில விலங்கான “வரையாடுகள்” தமிழகத்தில் தேனி மாவட்டம் மேகமலை, நீலகிரி வனப்பகுதிகளில் 50-க்கும் குறைவான அளவிலேயே வாழ்கின்றன. இவற்றைக் காத்து இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் தமிழக வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்களும் வரையாடுகள் போன்ற அரிய காட்டுயிர்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்தவற்றை செய்யவேண்டும். பெரிதாக ஒன்றும் வேண்டாம் குறைந்தபட்சம் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் உணவுகளை வரையாடுகள் போன்ற காட்டுயிர்களுக்கு கொடுக்காமல் தவிர்ப்பதே போதுமானது. அவை தனக்கான உணவை வனத்தில் தேடிக் கொள்ளும். நாம் கொடுக்கும் உணவானது அவற்றின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் தவிர இப்படி சுற்றுலாப் பயணிகள் வன உயிர்களுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றமும் ஆகும்.
பல்லுயிர் ஓம்புதலும் பகுத்துண்டு வாழ்வதுமே அறம்.