எளியோரின் வலிமைக் கதைகள் 26: ”பெரும்பாலும் நின்னுகிட்டே செய்ற வேலைதான்... இருந்தாலும்..!”

எளியோரின் வலிமைக் கதைகள் 26: ”பெரும்பாலும் நின்னுகிட்டே செய்ற வேலைதான்... இருந்தாலும்..!”
எளியோரின் வலிமைக் கதைகள் 26: ”பெரும்பாலும் நின்னுகிட்டே செய்ற வேலைதான்... இருந்தாலும்..!”
Published on

சுவைமிகுந்த கடலை மிட்டாய் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அதை உற்பத்தி செய்கிற தொழிலாளியின் வாழ்க்கை சுவையாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நமக்கு இனிப்பான கடலை மிட்டாயை உற்பத்தி செய்ய அவர்கள் கொஞ்சம்கூட தயங்கவில்லை.

"உழைக்காமல் உண்ணுகிறவன் திருடன்" என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. உழைப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும் கூட சிலர் மட்டுமே இன்று வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உழைப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் உழைப்பில் நமக்கு பல்வேறு பொருட்கள் கிடைத்தாலும் உணவுப் பொருள்களை உண்ணும்போது அதை உருவாக்கிய உழைப்பாளர்களை மறந்துவிட முடியாது.

கடலை மிட்டாய் அனைவருக்கும் பிடித்த தின்பண்டம். பெயரைச் சொன்னவுடனே நாக்கில் எச்சில் ஊறும். கடலைமிட்டாய் தின்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு உணவுப் பொருள். ஆமாம் இப்படி  பல்வேறு சிறப்புகள் இருக்கும் அந்த கடலை மிட்டாயை உற்பத்தி செய்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

“என் பெயர் கண்ணன். எனக்கு வயசு 40 ஆவுது. திருமணமாகி எனக்கு ரெண்டு பிள்ளைங்க. நான் 15 வருஷத்துக்கு முன்னாடி இந்த கடலை மிட்டாய் செய்யக் கத்துக்கிட்டேன். எட்டாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்குமேல படிப்பு ஏறல. குடும்பமும் கஷ்டப்பட்ட குடும்பம். அப்பா கூலி வேலை செய்பவர். கூலி வேலைன்னா மூட்டை தூக்குவது. அந்த நேரத்தில் தான் இந்த கடலை மிட்டாய் செய்றதுக்கு நான் கத்துகிட்டேன்.

நான் வேலைக்கு வந்தப்போ எனக்கு 70 ரூபா சம்பளம். ஒரு நாளைக்கு 200 கிலோவுல இருந்து 500 கிலோ வரைக்கும் கடலைமிட்டாய் செய்வோம். ஒவ்வொரு கம்பெனிலயும் ஒவ்வொரு விதமா ஆளுங்க இருப்பாங்க. ரெண்டு பேர்ல தொடங்கி 15 பேர் வரைக்கும் வேலை செய்வாங்க. ஆம்பளைங்க வெல்லபாகு காய்ச்சறதும் கடலையை போட்டு கிண்டவும் செய்வோம்ங்க. பொம்பள ஆளுங்க லேபிள் ஒட்டவும் பாக்கெட் பண்ற வேலையும் செய்வாங்க. இப்ப எல்லாம் சம்பளம் அதிகமாக 500 ரூபாய் 600 ரூபா வரைக்கும் கொடுக்கிறார்கள். அதே பொம்பள ஆளுங்களுக்கு 200 ரூபாய் கொடுப்பாங்க.

எல்லா நாளும் வேலை இருக்கும்ன்னு சொல்ல முடியாது. இந்த மாசத்திலேயே பாதி நாள் அரைநாள் வேலை தான் இருந்துச்சு. தமிழ்நாட்டிலே கோவில்பட்டி கடலைமிட்டாய் தான் ரொம்ப ஃபேமஸ்ங்க. 15 கிலோ வெல்லம் காய்ச்சினா ஒரு லிட்டர் வெல்லப்பாவுக்கு 2 கிலோ வறுத்த கடலை போடணும். பாகு காய்ச்சிற பக்குவம் எல்லாருக்கும் வராது. வெல்லப்பாகு காய்ச்சி கையில் எடுத்து பார்த்தா கம்பி மாதிரி இருக்கணும். வெல்ல பாகையும் வறுத்த கடலையும் சேர்த்து கலக்கி ட்ரேவில் கொட்டி மட்டமா பூரிக்கட்டை போல உள்ள அந்த கட்டியை வச்சி சமமா உருட்டி தேவையான அளவுக்கு கட் பண்ணி பாக்கெட் பண்ணனும். இதுதாங்க வேலை! பெரும்பாலும் நின்னுகிட்டே செய்ற வேலைதான்.

புதுசா வேலைக்கு வருகிற ஆளுங்களுக்கு 300 ரூபா 200 ரூபா சம்பளம் தான் கொடுப்பாங்க. வேலை நல்லா கத்துக்கிட்டு தனியா கடலை மிட்டாய் செய்கிற பக்குவம் தெரிஞ்ச என்ன மாதிரி ஆளுக்கு தான் சம்பளம் அதிகம். பெரும்பாலும் பொம்பள ஆளுங்க இங்கு வேலை கிடைக்கலன்னா தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்கு போயிடுவாங்க. ஆனா அவங்கள மாதிரி ஆம்பள ஆளுங்க போக முடியாது. ஏன்னா இந்த தொழிலை முழுமையா கத்துக்கிட்டோம். அதனால வேற தொழில் மேல கவனம் போகல. இப்படியேதான் எங்க வாழ்க்கை ஓடிட்டு இருக்குங்க. எப்படியோ சிரமப் பட்டாவது பிள்ளைகளை படிக்க வச்சுட்டா போதும் அதுதாங்க வாழ்க்கையில பெரிய கனவா இருக்கு” என்றார் கடலை மிட்டாய் தொழிலாளி கண்ணன்.

சுவைமிகுந்த கடலை மிட்டாய் யாருக்குத்தான் பிடிக்காது ஆனால் அதை உற்பத்தி செய்கிற தொழிலாளியின் வாழ்க்கை சுவையாக இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நமக்கான இனிப்பான கடலை மிட்டாயை உற்பத்தி செய்ய அவர்கள் கொஞ்சம்கூட தயங்கவில்லை. எளிய மனிதர்களாக இன்னும் இது போன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com