'ஷாட்டேஜ்' பாபு...! குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர்...!

'ஷாட்டேஜ்' பாபு...! குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர்...!
'ஷாட்டேஜ்' பாபு...! குமரி மக்கள் கொண்டாடும் அரசு பேருந்து நடத்துநர்...!
Published on

பொதுமக்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்பதே நம்மூர் அரசு ஊழியர்கள் குறித்து நீண்டகாலமாகவே இருக்கும் பொதுவான விமர்சனம். அது ஒன்றும் இப்போது முழுமையாக சரியாகிவிடவில்லை. ஆனால், ஆங்காங்கே பல நம்பிக்கைகள் பிறக்கும். அப்படியொரு நம்பிக்கை தரும் அரசு ஊழியர்தான் ஷாட்டேஜ் பாபு.

கன்னியாக்குமரி சார்ந்து இயங்கும் சமூக வலைதள பக்கங்களில் இவர்தான் தற்போது சூப்பர் ஸ்டார். அரசு பேருந்து நடத்துநரான ஷாட்டேஜ் பாபுவின் மனிதநேய அணுகுமுறைகளுக்கு அப்பகுதியில் பலரும் ரசிகர்கள்.

என்ன காரணம்...?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தில் இருந்து கோதையாறு மலை கிராமம் வரை இயங்கும் அரசு பேருந்தில் நடத்துநராக வேலை செய்கிறார் ஷாட்டேஜ் பாபு. குலசேகரம் பகுதியின் திருவட்டாறு வலியாற்றுமுகம் பகுதியை சேர்ந்த இவர், செங்கல் சூளைகளில் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு அரசு பேருந்து நடத்துநராக பணியில் சேர்ந்த இவருக்கு 2015-ஆம் ஆண்டு நிரந்தர பணி ஆணை கிடைத்தது.

அப்போதிருந்தே தடம் எண் 332 குளச்சல் - கோதையாறு பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். வயதானவர்கள் பேருந்தில் ஏற சுமைகளுடன் காத்திருந்தால், பேருந்தை நிறுத்தி பொருள்களை பேருந்தில் ஏற்றி இறக்க உதவி செய்வார். பயணிகள் அனைவரிடமும் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வார். தனது நடத்துநர் இருக்கைக்குக்கூட அவர் உரிமை கொண்டாடியதில்லை. சென்னையின் நடத்துநர்கள் பலரும் எழுந்து வந்து பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூலிப்பதில்கூட சோம்பேறித்தனம் காட்டுவதை இங்கே நியாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

தான் இயக்கும் பேருந்தை நேரம் தவறாமல் வழிநடுத்துவார். மாற்றுத்திறனாளிகளிடம் கட்டணத்தொகை வசூலிக்காமல் பெரும்பாலும் தன் செலவில் டிக்கெட் கொடுத்துவிடுவாராம். தினமும் பணிமனையில் கணக்கு ஒப்படைக்கச் செல்லும்போது, கணக்கில் பணம் ஷாட்டேஜ் வருமாம். இதை நிவர்த்தி செய்ய விடுமுறை நாள்களில் தனது முந்தைய தொழிலான செங்கல் சூளைக்கே சென்று வேலை செய்து ஷாட்டேஜ் பணத்தை அரசுக்கு கட்டி விடுகிறார், இந்த ஷாட்டேஜ் பாபு. இவருக்கு ஷாட்டேஜ் பாபு என பெயர்வர இதுவே காரணம்.

உடன்பணிபுரியும் சக ஊழியர்கள் இவரை ஷாட்டேஜ் பாபு என்றழைக்க, பின் நாளில் அவரை பொதுமக்களும் ஷாட்டேஜ் பாபு என்றே அழைக்கத் துவங்கினர்.

“நீங்கள் எங்கள் பகுதி பேருந்து நடத்துனநராக பணியாற்ற, நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய குமரி மாவட்டம் கோதையார் பொதுமக்கள் சார்பில் நன்றி” என்றும் அவரது புகைப்படத்துடன் அவரது சேவையை பாராட்டியும், ஷாட்டேஜ் பாபு எங்கள் ஊர் சூப்பர் ஸ்டார் எனவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவிட, அது தற்போது வைரலாகியிருக்கிறது.

இது குறித்து பாபு புதியதலைமுறையிடம் நெகிழ்ச்சியுடன் பேசும்போது, "என் தாய், தந்தையைப் போலவே பெரியவர்களை அணுக விரும்புகிறேன். என் பணியை எப்போதும் தொடர்வேன்" என்றார்.

இவரது மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, டர்போ விளையாட்டு கழகம் மற்றும் ஜி.வி.எஸ் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், 5,000 ரூபாய்க்கு மேல் சில்லறை காசுகளையும் கொடுத்தனர். ஷாட்டேஜ் பாபு போன்றவர்களால்தான் அரசுத் துறை மீதான பொதுமக்களின் மரியாதை கூடுகிறது என்றால் மிகையல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com