எளியோரின் வலிமைக் கதைகள் 16: தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்

எளியோரின் வலிமைக் கதைகள் 16: தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்
எளியோரின் வலிமைக் கதைகள் 16: தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்
Published on

‘’யாரோ ஒருத்தர் ரெண்டு பேருதான் மனிதாபிமானத்தோடு கூடுதலா ஒரு பத்து ரூபாய், ஐந்து ரூபாய் கொடுப்பாங்க. அவங்கள பார்க்கும்போது சாமிய பாக்குற மாதிரி தெரியும்.’’

சாதாரணமாக நாம் வெளியே செல்கிறபொழுது காலணிகள் அணியாமல் செல்வதில்லை. விதவிதமான காலணிகளாக இருந்தாலும் கூட அவற்றை கால்களைப் பாதுகாக்க மட்டுமே நாம் பயன்படுத்தி வருவது வழக்கம். காலணிகள் நம்முடைய உயிர் காக்கும் ஒரு ஆயுதமாகவே இருந்து வருவதை யாரும் மறுத்துவிட முடியாது.

இப்படிப்பட்ட காலணிகள் சரியாக இல்லாமல் போனால் உடனடியாக அதை சரி செய்கிற அல்லது மாற்றிக் கொள்கிற எண்ணம் எல்லோர் மத்தியிலும் இருந்து கொண்டேதான் இருக்கும். பெரும்பாலும் அறுந்து போகிற காலணிகளை சரி செய்து மாற்றிக் கொள்பவர்களே அதிகம் எனக் கூறலாம். புதிய செருப்புகள் ஆகட்டும் அல்லது அறுந்துபோன செருப்புகள் ஆகட்டும் அவற்றை நம்மால் எப்போதும் சரி செய்து கொள்ள முடிவதில்லை. அதற்கென அந்த வேலை செய்கிற தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் தேடி சென்று அவற்றை பூர்த்தி செய்து கொள்ளுகிறோம். அப்படி நம் உயிர் காக்கும் ஒரு உடமையினை தயாரித்து கொடுக்கின்ற தொழிலாளர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

‘’என் பெயர் சேகர். சொந்த ஊர் செஞ்சி. எனக்கு வயசு 42 ஆவுது. 25 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆச்சு. எங்க மாமனார் ஊரு திருவண்ணாமலை. எங்க மாமனார் செருப்புத் தைக்கிற தொழில் பார்த்து வந்தார். கல்யாணம் செஞ்சுட்டு வீட்டுக்கு போனேன். எனக்கு எதுவும் வேலை இல்ல. அதனால மாமனார் கூட உதவியா வேலை செய்யப் பழக்கினேன். அப்படியே இந்த தொழில் எனக்கு பழக்கமாயிடுச்சு. அப்பல்லாம் ஒரு நாளைக்கு 15 ரூபாய், 20 ரூபாய் கூலியாக தருவாங்க. அத வச்சுட்டுதான் குடும்பம் நடத்தனும். பெருசா ஒன்னும் இந்த தொழில்ல லாபம் கிடையாதுங்க. நானு எங்க மாமனார் கிட்ட வேலைக்கி இருக்கிற காலத்துல செருப்பு அறுந்து போச்சுன்னா தச்சி கொடுக்கறதுக்கு ஒரு ரூபாய்,இல்லன்னா 50 பைசா கொடுப்பாங்க.

ஆனா இப்ப பரவாயில்ல அஞ்சு ரூபா வரைக்கும் அது மாறிப் போச்சு. ஒரு புது செருப்பு தைக்கனும்னா குறைந்தது 200 ரூபா வரைக்கும் பொருள் வாங்கி ஆவனும். அதுவும் இங்க எல்லாம் கிடைக்காது. புதுச்சேரிக்கு தான் போவனுங்க. அப்படி பொருள் வாங்குறதுக்கு ஒரு நாளும், புதுசா செருப்பு செய்யறதுக்கு ஒரு நாளும் ஆயிடும். 3 நாள் வேலை செஞ்சாதான் 300 ரூபாய்க்கு செருப்பு விக்க முடியும். அப்படி விக்கிற செருப்புல 100 ரூபாய் லாபம் கிடைக்கும்.

எல்லாரும் புது செருப்பு தான் வாங்குவாங்கன்னு சொல்ல முடியாது. நிறைய பேர் அறுந்து போன செருப்பு தைக்க வருவாங்க, பாலிஷ் போட வருவாங்க, அப்புறம் புது செருப்பு வாங்குவாங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் நெய்வேலி டயரில் செருப்பு தைப்ப்போம். அப்புறம் லாரி டயர்ல எருமை மாட்டு தோல்ல செருப்பு தைப்போம். ஊர்ல இருக்கிற இளைஞர்கள் ரோட்ல நடக்கும்போது கிரீச் கிரீச் என்று சத்தம் வர மாதிரி செருப்பு தைச்சி கொடுக்க சொல்லுவாங்க. அவங்களுக்கும் தச்சி கொடுப்போம்.

எவ்வளவுதான் செருப்பு தைச்சி காசு சம்பாதிச்சாலும் மாற்றுத்திறனாளி யாராவது வந்தா அவங்களுக்கு இலவசமாக செருப்பு செஞ்சு கொடுக்கிறேன். அதையே என் வாழ்நாள் முழுக்க செய்யணும்னு ஆசைப்படுறேன். பாவம் அவங்களுக்கு யார் வேலை செய்வாங்க. இந்த ஊரிலேயே கேட்டா சொல்லுவாங்க மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செருப்பு செஞ்சி தர சேகர்ன்னு சொன்னா தெரியும் அதில் ஒரு திருப்தி எனக்கு’’ என்றார் சேகர்.

ஒருவரின் பாதுகாப்பு கருதி அதற்கான தேவையை பூர்த்தி செய்வதில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக நம்முடைய பாதங்களைப் பாதுகாக்க செருப்புகளை தயாரிக்கிற இந்த தொழிலாளர்கள் மிகவும் போற்றப்பட கூடியவர்கள். ஆனாலும் கூட அவர்கள் வாழ்வில் வறுமைநிலை இன்னும் ஒழியவில்லை என்றே சொல்லலாம்.

இப்படியே வின்சன்ட் என்னும் மற்றொரு நபரை சந்தித்தோம். ‘’20 வருஷத்துக்கு முன்னாடி படிப்பு பெருசா வரலன்னு அப்பா செய்கிற இந்த தொழிலுக்கு ஒத்தாசையா நானும் வந்தேங்க .என் கூட பிறந்தவங்க ஏழு பேர். ஆறாவது வரைக்கும்தான் படிச்சேன் அப்ப எந்த வேலைக்கு போனாலும் யாராவது ஒருத்தர் சிபாரிசு பண்ணனும். எனக்கு சிபாரிசு பண்றதுக்கு பெருசா யாரும் இல்லைங்க. செருப்புத் தைக்கிற எங்கப்பா சிபாரிசு பண்ணி எந்த கடையிலையும் வேலை கொடுக்க போறதில்ல. அதனாலதான் அப்பா கூட வேலை செய்யலாம் என முடிவெடுத்து இந்த வேலைக்கு வந்துட்டேன்.

அப்பா பெரிய வேலை செஞ்சா,  நான் நூலுக்கு மெழுகு போடறது, ஊசி எடுத்துக் கொடுக்கிறது அப்படின்னுதாங்க வேலையை ஆரம்பிச்சோம். அப்பல்லாம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகும்போது அப்பா இரண்டு ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரைக்கும் கொடுப்பாரு. அப்புறம் கொஞ்ச நாள்ல வேலை பழகிப்போச்சு. அப்புறம் பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சார். எந்த நேரமும் நிரந்தரமா வேலை இருக்குன்னு சொல்ல முடியாது. மழை பெஞ்சா கடை வைக்க முடியாது. மழை விட்டதுக்கு அப்புறம் தான் கடை வைக்க முடியும். அந்த மாதிரி நேரத்துல வேற ஏதாவது வேலைக்கு போலாம்னு பார்ப்பேன். மறுபடியும் செருப்புத் தைக்கிற வேலைக்கே வந்திடுவேன்

ஒரு நாளைக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம். அதுவும் நிரந்தரம் இல்லை அத வெச்சிகிட்டு தான் இந்த குடும்பத்தை ஓட்டுரேன். காலைல 8 மணிக்கு வந்தா சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வேலை சரியா இருக்கும். யாரோ ஒருத்தர் ரெண்டு பேரும் தான் மனிதாபிமானத்தோடு கூடுதலாக ஒரு பத்து ரூபாய் ஐந்து ரூபாய் கொடுப்பாங்க. அவங்கள பார்க்கும்போது சாமிய பாக்குற மாதிரி தெரியுதுங்க. விரல்விட்டு என்ன கூடிய அளவு தான் இந்த வேலை செய்றாங்க. இப்ப எல்லாரும் கம்பெனி செருப்பு வாங்குறவங்களா மாறிட்டாங்க. எங்களுக்கு வேற வேலை தெரியாது. அதனாலதான் இந்த வேலையை தொடர்ந்து செஞ்சிட்டு இருக்கிறோம். எங்களுக்கு பிறகு இந்த வேலை செய்யறதுக்கு யாராவது வருவாங்களான்னு சொல்ல முடியாதுங்க’’ என்றார் வின்சென்ட்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com