செப்டம்பரில் அடுத்த இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார், ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய பஞ்சாயத்து தந்த காயத் தை இது மாற்றும் என்கிறார்கள் ரசிகர்கள் சிலர்.
ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தைத் திட்டமிட்டு சேதப் படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மை யை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றார் என கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மி த்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற் கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டும் பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதமும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதை யடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்மித், அவர் காதலி டேனி வில்லிஸ்-ஐ செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ‘ஸ்மித் ஒரு மோசடி பேர்வழி. அவரை கல்யாணம் பண்ணாதீங்க’ என்று பல கிரிக்கெட் ரசிகர்கள், டேனி வில்லிஸ்-க்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில். டேனி, அப்படி விட்டுவாரா? இந்த நேரத்தில், காதல் ஆறுதல் தேவை என்பதை அறியதாவரா அவர்? இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
டேனி, சட்டம் படித்தவர். நீச்சல் வீராங்கனை, வாட்டர் போலோ வீராங்கனை என்பது கூடுதல் தகவல்.
காதல் மலர்ந்த கதை!
ஸ்மித்துக்கும் டேனி வில்லிஸ்-க்குமான காதல் மலர்ந்த கதை சுவாரஸ்யமானது. 2011-ம் ஆண்டில் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா பார்ட்டியில், பார்-ல் டேனியை சந்தித்தார் ஸ்மித். ரொம்ப போரடிக்க, கொஞ்சம் பீரோடு இருந்த வருக்கு அவரைக் கண்டதுமே, ’யாருடா இது?’ என்று கேட்கத் தோன்றியது.
காதல் வழக்கப்படி, ‘நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசைப்படலை, நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. ஆனா, இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாயிருக்கு’ என்று ’அலைபாயுதே’ மாதவன் மாதிரி மனதுக்குள் ஓடியது டயலாக்.
டேனியும் ஸ்மித்தைக் கண்டதும் கொஞ்சம் அப்படி இப்படி ஆனார். ‘நீ நிதானமா இல்லை. கால் தரையில படலை. முதல்ல நில்லு. அப்புறம் வந்து சொல்லு’ என்று சொல்லத் தோன்றியது ஸ்மித்துக்கு!
இங்கு தொடங்கிய நட்பு, நட்பாகவே தொடர்ந்து கொண்டிருந்தது பல வருடங்களாக. தோழியோடுதான் எங்கும் செல்வார் ஸ்மித்தும். ஸ்மித் வலை பயிற்சியில் இருக்கும்போது அவருக்கு உதவி செய்பவர் டேனி, எப்படி? பவுலிங் மெஷினுக்குள் பந்தை போட்டு அதை இயக்குவது. இதுபற்றி ஒரு முறை டேனி சொல்லும்போது, ‘ஸ்மித்துக்கு கிரிக்கெட்தான் எப்பவும். எனக்கு கிரிக்கெட் பற்றி கொஞ்சம் தெரியும். நான் வீசுற பந்தை அவர் கொஞ்சம் தூரமா அடிச்சுட்டா எனக்கு கோபம் வரும்’ என்று ஜாலியாகச் சொல்லியிருக்கிறார். ஸ்மித்தும் டேனியின் சட்டப் புத்தகத்தை வாசித்து சில அடிப்படை சட்ட விதிகளை தெரிந்து கொண்டிருக்கிறாராம்.
ஸ்மித், கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா வந்தபோது டேனியும் உடன் வந்தார். விராத் கோலி உள்ளிட்ட சில இந்திய வீரர்களுக்கும் டேனி, அறிமுகம்.
’ஸ்மித் மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு போரடிக்காதா?’ என்று கேட்டால், ‘ஆரம்பத்துல எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. இப்ப ஓட்டல் ரூம்ல உட்கார்ந்து எப்பவும் டிவி-ல கிரிக்கெட்டையே பார்த்து பார்த்து நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்’ என்கிறார் டேனி.
இப்படி ஜாலியாக திகட்டத் திகட்டச் சுற்றிய பிறகும் காதலை சொல்லாமல் இருந்தால் எப்படி? கடந்த வருடம் காதலைச் சொல்லிவிடுவது என முடிவெடுத்தார் ஸ்மித். காலம் முழுவதும் கூட வரும் காதலை, பட்டென்று சொல்லிவிட முடியுமா? அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பிளைட் பிடித்தார், டேனியுடன்.
உச்சியில் சொன்ன ஸ்மித்!
நியூயார்க்கில் உள்ள மிக உயரமான ராக்ஃபெல்லர் மைய கட்டிடத்தின் உச்சியில் நின்று தன் காதலைச் சொன்னார் ஸ்மித். கூடவே செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று டேனியும் ஏற்றுக்கொண்டார். இது நடந்தது கடந்த வருட ஜூலையில். ராக்ஃபெல்லர் மையம் 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி. 22 ஏக்கர் (89,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ள இது அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னம் என்பது, சிறு குறிப்பு.
’டேனி வந்த பிறகுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையில நிறைய மாற்றம். நல்லா விளையாட ஆரம்பிச்சேன். இதுக்கு காரணம் அவங்கதான். அது எப்படின்னு எனக்குத் தெரியாது’ என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் ஸ்மித்.
மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியில் இருந்து இறங்கியதும் அந்த வாய்ப்பு ஸ்மித்துக்கு கிடைத்தது. அப்போது பேசிய ஸ்மி த், ‘எல்லாத்துக்கும் டேனிதான் காரணம். நான் எங்க இருந்தாலும் எனக்காக அவர் எப்போதும் இருக்கிறார்’ என்று சொன்னார். இந்த செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டு தனி இன்னிங்சை தொடங்க இருந்த ஸ்மித்துக்கு திருஷ்டி பொட்டு மாதிரி அமைந்துவிட்டது, பந்தை சேதப்படுத்திய பஞ்சாயத்து!
சிலருக்கு காலம் எல்லா புகழையும் கொடுக்கிறது. சில நேரங்களில் கறைகளையும் சேர்த்தே கொடுத்து விடுகிறது. ஸ்மித்துக்கும் அப்படித்தான் போல.
ஸ்மித்- டேனி காதல் கேலரி இங்கே: