Ind Vs Pak: 'மவ்கா மவ்கா' விளம்பரம் - வன்மமும் வெறுப்பும் இனியாவது முடிவுக்கு வருமா?

Ind Vs Pak: 'மவ்கா மவ்கா' விளம்பரம் - வன்மமும் வெறுப்பும் இனியாவது முடிவுக்கு வருமா?
Ind Vs Pak: 'மவ்கா மவ்கா' விளம்பரம் - வன்மமும் வெறுப்பும் இனியாவது முடிவுக்கு வருமா?
Published on

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள 'மவ்கா மவ்கா' விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரசிகர்கள் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பார்ப்போம். 

1999-ம் ஆண்டின் துவக்கம் அது. சென்னை சேப்பாக்கம் மைதானம் போருக்கான களமாக காட்சியளித்தது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஜெர்ஸி அணிந்து களத்தில் ஆடிவருகின்றனர். ஆட்டம் முடிந்துவிட்டது. மைதானம் முழுவதும் குழுமியிருந்த சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்கின்றனர்; கைதட்டுகின்றனர். ஆனால் சின்ன ட்விஸ்ட். வென்றது இந்தியா அல்ல; பாகிஸ்தான். அந்த அணி வீரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாகிஸ்தான் மைதானத்தில் இருக்கிறோமா? என அவர்களுக்குள் குழப்பம். பார்வையாளர்கள் மாடத்தில் பளிச்சிடும் ரசிகர்களின் ஜெர்ஸிக்கள் சென்னை களத்தில் இருப்பதை உறுதிபடுத்துகின்றன. இதுதான் இந்திய அணி ரசிகர்கள். விளையாட்டை விளையாட்டாக அணுகும் போக்கு அன்றிருந்தது. அது ஒரு ஆரோக்கியமான பார்வை. ரசிகர்களின் அந்த முதிர்ச்சியையும், அந்த எண்ணத்தையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.

கட் டு 2021 அக்டோபர்

அண்மையில் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' ''மவ்கா மவ்கா'' என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. 2015-ம் ஆண்டு இந்த விளம்பரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய ரசிகர்கள் பலரும்கூட அந்த விளம்பரங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி அந்த விளம்பரத்தில் என்னதான் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.

அதாவது இதுவரை இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில், பாகிஸ்தான் வெற்றிபெறாததை கேலி செய்யும் வகையில், அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் ரசிகர்கள் பட்டாசுகளை வாங்கிக் வைத்துக்கொண்டு, வெற்றி பெறாத ஏக்கத்தில் பல ஆண்டுகளாக அதனை வெடிக்காமல் கையில் வைத்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் ரசிகர்கள் டிவி வாங்கச் சென்றால், கடைக்காரர்கள் இரண்டு டிவிக்களை கொடுப்பது போன்றும் காட்சிப்படுதப்பட்டுள்ளது. எதற்காக இரண்டு டிவி என்றுதானே கேட்கிறீர்கள். அதாவது எப்படியும் நீங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறமாட்டீர்கள். அதனால் போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு வரும் ஆத்திரத்தில் அந்த டிவியை நீங்களே உடைத்துவிடுவீர்கள். அதனால் இன்னொரு டிவியை வைத்துக்கொள்ளுங்கள் என்கிற பாணியில் அந்த விளம்பரம் இருக்கிறது. இந்த விளம்பரத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதை தாண்டி, ஒரு வெறுப்பரசியல் கட்டமைக்கப்படுவதாக இந்திய ரசிர்கள் பலரும்கூட குற்றம்சாட்டி வருகின்றனர்.

'போலி தேசியவாதம்' தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மனதில் வன்மம், வெறுப்பை விதைக்கும் இதுபோன்ற விளம்பரங்கள் தேவையா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில், 'ஸ்டார் ஸ்போர்ட்'ஸின் ''மவ்கா மவ்கா' ' வெறுப்பு பிரசாரத்திற்கு கோலி நேற்று அழகாக பதிலளித்தார். ஆட்டம் முடிந்து பாபர் அசாம், ரிஸ்வான் இருவரும் நடந்து வரும்போது, கோலி அவர்களை அணைக்கும் புகைப்படம் அப்படியொரு வைரல்!

ரசிகர்கள் கொண்டாடித்தீர்கிறார்கள். 'பாகிஸ்தான் என்பதற்காக அவர்களை வெறுக்கவேண்டியதில்லை' என அவர்கள் விளையாட்டை விளையாட்டாக அணுகும் பக்குவத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் இன்றும் வெறுப்பை விதைத்து, பகையை வளர்த்து, அரசியல் ஆதாயம் பார்ப்பதை இந்திய ரசிகர்கள் விரும்பவில்லை என்கின்றனர் பலரும். விளையாட்டுடன் அரசியலை இணைத்துப்பார்ப்பதில் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com