பிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டாலின்: தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ஏற்குமா மத்திய அரசு?

பிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டாலின்: தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ஏற்குமா மத்திய அரசு?
பிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டாலின்: தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ஏற்குமா மத்திய அரசு?
Published on

'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைப்பது, தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிப்பது, தமிழ்நாட்டுக்கு கூடுதல் கோவிட் தடுப்பூசிகளை அளிப்பது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டாமல் தடுப்பது போன்ற முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை பிரதமர் மோடி மற்றும் தனது டெல்லி பயணத்தின்போது பல்வேறு அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தவுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதையை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பதற்கும் தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சந்திப்பின் மூலம் திமுக - காங்கிரஸ் உறவு தொடர்ந்து வலுப்பெறும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக வியாழக்கிழமை காலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவருடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் டெல்லி செல்கிறார்கள். ஏற்கெனவே டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வரை டெல்லி விமான நிலையத்தில் டெல்லிக்கான தமிழக சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை மற்றும் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்கள், டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் நேராக டெல்லியில் இருக்கக் கூடிய புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கேயும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சிறிது நேரம் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்க இருக்கிறார். மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை நம்பர்-7 லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச இருக்கிறார்.

இதைத்தவிர குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத் ஆகியோரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தையும் முதல்வர் பார்வையிடுவார் என்றும் டெல்லியில் பணிபுரியும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்திப்பார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முதல்வர் தங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமரை சந்தித்த பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சார்ந்த பல்வேறு நிதி நிலுவை விரிவாக ஆலோசிக்க ஆவணங்களை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை உள்ளிட்டவை விரைவாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்த இருக்கிறார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் பிரச்சனை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தயிருக்கிறார். அதேபோன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயிலை சந்தித்து செங்கல்பட்டு தடுப்பூசி நிலையம், மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான சந்திப்புகளுக்க நேரம் முடிய செய்ய தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய பயணத்தின்பொழுது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com