மறக்க முடியுமா, மயிலு? ஸ்ரீதேவி தடம் பதித்த 10 கேரக்டர்கள்!

மறக்க முடியுமா, மயிலு? ஸ்ரீதேவி தடம் பதித்த 10 கேரக்டர்கள்!

மறக்க முடியுமா, மயிலு? ஸ்ரீதேவி தடம் பதித்த 10 கேரக்டர்கள்!
Published on

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் அடையாளம். தனது நடிப்பால், ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவில் ஆரம்பித்த அவரது திரைக் கொடி இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஒன்றாக பறந்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு சென்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர். 

அங்கும் தன் திறமையால் புகழ்கொடி நாட்டிய ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்:

1. மூன்று முடிச்சு ’செல்வி’:
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி ஹீரோயினாக அறிமுகமான படம். ரஜினி, கமலுடன் போட்டிப் போட்டு நடிக்க வேண்டிய கட்டாயம். இந்தப் படத்தில் இடம்பெற்ற, ’வசந்த கால நதிகளிலே’ பாடல் என்றும் நிலைத்திருக்கும் ஒன்று. இதில் ஸ்ரீதேவியின் கேரக்டரான செல்வி பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

2. 16 வயதினிலே ’மயிலு’:
பாரதிராஜாவின் முதல் படம். கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் பேசப்பட்டப் படம். இந்தப் படத்தின் மயிலு கேரக்டருக்கு மயங்காதவர்கள் இல்லை. ‘சப்பாணின்னா சப்புனு அறைஞ்சிரு’ என்று ஸ்ரீதேவி பேசும் வசனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. 

3. சிகப்பு ரோஜாக்கள், ’சாரதா’:
நடிகர் சிவகுமார் மறுத்ததால் கமல்ஹாசன் நடித்த படம் இது. முதல் இரண்டு கிராமத்துப் படங்களை இயக்கிவிட்டு திரில்லருக்கு வந்த பாரதிராஜா இதிலும் சாதித்தார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் சாரதா கேரக்டர் பிரபலமான ஒன்று.

4. ’ப்ரியா’வின் பிரியா:

எஸ்.பி,முத்துராமன் இயக்கிய படம். ரஜினி ஹீரோ. ப்ரியா என்கிற நடிகையின் வாழ்க்கையை சுற்றிப் பின்னப்பட்ட கதையில் அபாரமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது ப்ரியா கேரக்டர் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஒன்று.

5. ஜானி ’அர்ச்சனா’
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, அர்ச்சனா என்ற கேரக்டரில் பாடகியாக கலக்கி இருப்பார். ’என் வானிலே, ஓர் வெண்ணிலா’,  ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘ஒரு இனிய மனது, இசையை சுமந்து செல்லும்’ ஆகிய பாடல்கள் ஸ்ரீதேவிக்கு மேலும் புகழைத் தந்தன.

6. வறுமையின் நிறம் சிவப்பு, ’தேவி’:
கே.பாலசந்தரின் காலத்தால் அழிக்க முடியாத படங்களில் ஒன்று. இதில் தேவியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருப்பார். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் இன்றும் பலரின் நினைவுகளில் தாளமிட்டுக் கொண்டிருக்கிறது. அதில் வரும் ஸ்ரீதேவியின் நடிப்பும்.

7. மூன்றாம் பிறை, ’பாக்யலட்சுமி’:
பாலுமகேந்திராவின் தேசிய விருது வாங்கிய படம். மனநலம் பாதித்தவராக மிரட்டிய ஸ்ரீதேவி, இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. 

8. வாழ்வே மாயம், தேவி:
ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கமல், ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர் உட்பட பலர் நடித்த படம். ஸ்ரீதேவி, தேவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். காதல் படமான இதில், கங்கை அமரனின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். ஒரு காதலியாக, கமலால் நிராகரிக்கப்படும்போது கோபமான பெண்ணாக, உண்மை தெரிந்து கலங்கும் கடைசி கட்டம் என ஸ்ரீதேவி மிரட்டியிருப்பார்.

9. நான் அடிமை இல்லை, ‘பிரியா’:
ரஜினியுடன் ஸ்ரீதேவி நடித்த படம். துவாரகநாத் தயாரித்து இயக்கிய, இந்த படத்தில் காதலி, மனைவி என அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. விஜய் ஆனந்த் இசையில், ’ஒரு ஜீவன் தான்’ உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்தி சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிய ஸ்ரீதேவி, அதற்கு முன் கடைசியாக (1986-ம் ஆண்டு) நடித்த தமிழ்ப் படம் இது.  

10. இங்கிலீஷ் விங்கிலிஷ், சஷி காட்போலே: 
இந்தப் படத்தில் ஆங்கிலம் தெரியாத ஒரு மிடில் கிளாஸ் அம்மாவின் யதார்த்தமான நடிப்பை, அப்படியே அள்ளித் தந்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது பதற்றம், அமெரிக்காவில் தடுமாற்றம் என அவரது இயல்பான நடிப்பில் தங்களை உணர்ந்த பெண்கள் பலர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com