வசீகர நாயகி ஸ்ரீதேவி

வசீகர நாயகி ஸ்ரீதேவி
வசீகர நாயகி ஸ்ரீதேவி
Published on

நான்கு வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி.  தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. காலத்தால் அழியாத காந்த நடிப்பாற்றல் 13 வயதிலேயே கதாநாயகியாக நடித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானார். அசத்தும் நடிப்பாற்றல் காரணமாக தமது 13 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 1976-ஆம் ஆண்டு வெளிவந்த ’மூன்று முடிச்சு’தான் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த திரைப்படம். கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து இந்த ப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசந்தகால நதிதனிலே... வைரமணி நீரலைகள் என்ற பாடல் கேட்க ரசனையாவும், பார்க்க த்ரில்லாகவும் இருக்கும். கமல் ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் இந்த படத்தில் மிளிர்ந்தது.

மூன்று முடிச்சில் அறிமுகமானலும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’16 வயதினிலே’ திரைப்படம் மூலம் தான் ஸ்ரீதேவி பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டார். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள செந்தூரப்பூவே பாடலும். ’சப்பாணின்னா சப்புன்னு அடிச்சிரு’ என பேசிய வசனமும் ஸ்ரீதேவியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. 

பின்னாளில் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பலமொழிகளிலும் தம் நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி. தமிழில் ஜொலிக்கத் தொடங்கிய பின் மலையாளத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ஆலிங்கனம், குட்டவும் சிக்ஷையும், ஆத்யபாடம், ஆ நிமிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. 


1978 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீதேவி. இவர் நடித்த முதல் இந்தி திரைப்படம் சோல்வா சாவன். ஹிந்தியில் அவரது இரண்டாவது படமான ஹிம்மத்வாலா பெரும் வெற்றியை பெற்றது. இதன்பின்னர் சத்மா, சாந்தினி ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. புகழின் உச்சத்தில் இருந்த போது 1986-87களில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து வதந்திகள் பரவின. 

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும், பரிணாமத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்ரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியை திரையில் பிரதிபலித்தன. இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.


பாலிவுட் நடிகர் அனில்கபூரின் அண்ணனும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூரை, ஸ்ரீதேவி மணந்தார். திருமணத்திற்கு பின்னர் ஆறாண்டுகள்கழித்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு பின் இங்க்லீஷ், விங்க்லீஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் அவர் கால்பதித்தார். இந்த திரைப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாரிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மீண்டும் கோகிலா, ப்ரியா என பலதிரைப்படங்களில் வெற்றிக்கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. மீண்டும் கோகிலா திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது கிட்டியது. தேவராகம் திரைப்படத்திற்காக டொரண்டோ விருதினை ஸ்ரீதேவி பெற்றார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார் ஸ்ரீதேவி..


கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரவி உதய்வார் இயக்கத்தில் மாம் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்தார். அவரது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர் அறிமுகமான துணையான வெளியான அதே தினத்தில் 50 ஆண்டுகள் கழித்து மாம் வெளியானது.

இப்படி தலைமுறை கடந்து ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. எனினும் ரசிகர்களின் உணர்வுகளில் என்றும் ஈரக்காற்றாய் அவ்வவ்போது கடந்து செல்வார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com