இலங்கையில் உணவுப் பஞ்ச அபாயம்: பொருளாதார அவசர நிலையும் பின்புலமும் - ஒரு பார்வை

இலங்கையில் உணவுப் பஞ்ச அபாயம்: பொருளாதார அவசர நிலையும் பின்புலமும் - ஒரு பார்வை
இலங்கையில் உணவுப் பஞ்ச அபாயம்: பொருளாதார அவசர நிலையும் பின்புலமும் - ஒரு பார்வை
Published on

நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதளபாதாளத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு: கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலாத் துறையை சார்ந்ததே. இந்தச் சூழலில் கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடக்கி கிடக்கிறது. எனவே, சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது; இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது.  

அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே இவற்றின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இலங்கை மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் அபாயமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

அரிசி, சர்க்கரை, பால், மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும்  சூழலும் உருவாகியுள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், நாட்டில் கொரோனா ஏற்படுத்திய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் மக்கள் மிகப்பெரிய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டுள்ளனர்.

உணவுப் பஞ்சத்தை தடுக்க அவசர நிலை பிரகடனம்: உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் இலங்கையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருளாதார அவசரநிலை பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலமாக  அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இந்த அவசர நிலை பிரகடனத்தை செயல்படுத்த ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராகவும் அரசு நியமித்துள்ளது. நாட்டில் வியாபாரிகள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உத்தரவாத விலையில் விற்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையை ராணுவம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் 20% சரிந்த இலங்கை ரூபாய் மதிப்பு: இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பானது 7.5% சரிந்துள்ளது. உள்ளூர் நாணயத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சியாக இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களை அதிகரித்ததுடன், வங்கிகளுக்கு வரவேண்டிய கடன்பாக்கிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஜூலை மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.8 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது; 2019 நவம்பரில் இது 7.5 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பொறுப்பேற்றது பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 20%-க்கும் அதிகமாக சரிந்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.6% என்ற அளவில் சரிந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அந்நிய செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு, உள்ளூர் சமையலில் பயன்படுத்தும் அத்தியாவசிய மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய்கள், மஞ்சள் மற்றும் பல்வேறு வாகனங்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்தது, அதன்பின்பும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. தற்போது இலங்கை இறக்குமதியாளர்கள் பலர் உணவு மற்றும் மருந்துகள் வாங்குவதற்கு பணம் செலுத்த டாலர்களைத் தர முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வாங்குவதற்காக நாடு தனது அந்நிய செலாவணியைப் பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைகள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை எரிசக்திதுறை அமைச்சர் உதய கம்மன்பில வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருவேளை நுகர்வோர் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவில்லை என்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள் எரிபொருள் ரேஷன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பு எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com