கூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டி ? - பிரசாந்த் கிஷோர் யோசனை சரியா?

கூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டி ? - பிரசாந்த் கிஷோர் யோசனை சரியா?
கூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டி ? - பிரசாந்த் கிஷோர் யோசனை சரியா?
Published on

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது திமுக. பத்து ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத திமுக, இம்முறை ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது திமுக.

அதன்படி 2021-ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கிஷோர் இணைந்தது முதல் திமுகவிற்கும் திமுக தொண்டர்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு அவர் எத்தகைய வியூகங்களை வகுத்து தரப்போகிறார் என்பதுதான்.

இந்நிலையில் வருகிற 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே பிராஷந்த் கிஷோர் வகுத்துள்ள முதல் வியூகம். திமுக தனித்துப் போட்டி என்பது கருணாநிதியே யோசிக்காத ஒன்று எனும்போது அவர் இல்லாத திமுக தனித்து போட்டியிடுமா? அந்தத் தைரியம் திமுகவிற்கு இருக்கிறதா? குறிப்பாக ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெற்ற வாக்கு வங்கி என்பது 31.6 சதவீதம். இந்த வாக்கு சதவீதம் அப்படியே இருக்கும் பட்சத்தில் திமுகவினால் தனித்து போட்டியிட இந்த வாக்கு சதவீதமே போதுமானதாக இருக்குமா? இதை வைத்து கூட்டணிகளை உதறிவிட்டு திமுக தனித்து களம் காண முடியுமா என்பது குறித்து சந்தேகம் எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறும் போது "திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு இடமில்லை என்றால் அவர்கள் தேர்தலில் போட்டிப்போடாமல்
இருக்க போவதில்லை. வேறு கட்சிக்கு போகத்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு காங்கிரசுக்கே இடம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் நாளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு சென்று விடுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வேண்டுமானால் உள்ளூர் பிரமுகர் பார்த்து மக்கள் வாக்களிக்கலாம். ஆனால் பொதுத்தேர்தல் என்று வரும் போது அதில் கட்சி செல்வாக்கு முக்கியம். எனவேதான் ஜெயலலிதாவைத் தவிர தனித்துப் போட்டி என்ற முடிவை யாரும் எடுத்ததில்லை. அது ஒருவேளை கருணாநிதி இப்போது இருந்திருந்தால் இதை முயற்சி செய்யலாம். ஆனால் அவரே எடுக்காத முயற்சி இது எனும் போது ஸ்டாலின் எடுப்பாரா எனத் தெரியவில்லை" என்றார்

மேலும் தொடர்ந்த ஷ்யாம் “ஆனால் தேர்தலில் பிரஷாந்த் கிஷோரின் வியூகத்தால் வென்றவர்கள் இருக்கும் போது. அவரது வியூகம் இங்கு எடுபடாதா என்ற
கேள்வியும் எழலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் இங்கு அதிகம். இங்கிருக்கும் டீ கடைகள் ஒவ்வொன்றிலும் 10 பிரஷாந்த் கிஷோர் இருக்கிறார்கள்.  உள்ளூர் அரசியல் முதல் டிரம்ப் வருகை குறித்து பேச கூடியவர்கள் இங்கிருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் வியூகங்கள் வைத்து மட்டுமே தேர்தலை சந்திக்க முடியாது. கூட்டணி போனால் வாக்குகள் சிதறும். சில வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி தோல்விகள் நிர்ணயமாகின்றன. அந்த வகையில் தேர்தலில் வாக்குகளை சிதறாமல் பார்த்துக்கொள்வதே வெற்றிக்கான வழி. அதுதான் யதார்த்தம்" என்றார் ஷ்யாம்.

"நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாசமான வெற்றியைப் பதிவு செய்தது திமுக எனும் போது சட்டமன்றத்திலும் அதே பிரகாசத்துடன் ஏன் தனித்து போட்டியிட முடியாது என்ற ஒரு பார்வையும் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின் போது அளித்த பேட்டியில் காங்கிரசுக்கு எவ்வளவு காலம் தான் பல்லக்கு தூக்குவது என்றார் கே என் நேரு. அந்தச் சிந்தனையே தான் பிராஷாந்த் கிஷோர் மனதிலும் உதித்திருக்குமோ என்னமோ...? இது ஒரு புறமிருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவினால் மோடி எதிர்ப்பை கையில் எடுக்க முடிந்தது" என்றார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

“மேலும் இப்போதைக்கு ஒவ்வொரு வாக்கு வங்கியும் அவசியம். அப்படியிருக்க திமுக தனித்து சென்றால் அது தற்கொலைக்கு சமமானது . சில சமயம் கூட்டணி சேர்ந்தே மைனாரிட்டி ஆட்சி தான் அமைத்திருக்கிறது திமுக. எனவே இந்தத் தேர்தலை எப்போதும் போல கூட்டணியுடன் அணுகுவது தான் அவர்களுக்கு நல்லது. மக்களும் நம்புவார்கள். திமுக தலைவராக ஸ்டாலினை திமுக ஏற்றிருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் ஒரு தேர்தலில் நின்று வெற்றி கண்டு ஆளுமையை நிரூபித்த பிறகு வேண்டுமானால் அவர் இந்த முடிவை எடுக்கலாம்.” என்று முடித்தார்.

கூட்டணி கட்சிகளை பொறுத்தவரையில் எப்போதுமே அனுசரித்து செல்பவர் கருணாநிதி. இதை ஒரு முறை கருணாநிதியே அவருடைய பேட்டியில் சொல்லியிருந்தது நம் நினைவில் இருக்கலாம். ஒரு முறை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட சீட்டெல்லாம் கிடைக்காது... வேண்டுமானால் டீ ,காபிதான் கிடைக்கும். ஆனால் இங்கு டீ, காபி கிடைக்கிறதோ இல்லையோ கேட்ட சீட் கிடைக்கும் என்று ஸ்டாலின் பேசியதாக குறிப்பிட்டார் கருணாநிதி. அந்த அளவு கூட்டணியுடன் அணுசரித்து செல்பவர் கருணாநிதி எனும் போது  அவரின் வழியில் வருபவர் அதிரடியாகக் கூட்டணியே வேண்டாம் என்ற கிஷோரின் ஆலோசனையை ஏற்று அக்னி பரீட்சைக்கு தயாராவரா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com