'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா!

'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா!
'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா!
Published on

ஒவ்வொரு நாளும் நாம் புதுப்புது செய்திகளுடன் தான் தூக்கம் கலைகிறோம். விபத்துகள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல்கள், அரசியல் திருப்பங்கள், சினிமா கிசுகிசுக்கள் இன்னும் எத்தனையோ. எல்லாமும் நமக்கு ஒரு செய்தியாகவே அன்றைய நாளில் கடந்து போகின்றன. ஆனால் சில செய்திகள் நம்மை உலுக்கிவிடவும் செய்கிறது. நமக்கு அறிமுகம் இல்லாத யார் என்றே தெரியாத யாரோ ஒருவருக்காக நம் மனம் கசிகிறது என்பதுதான் மனிதநேயத்தின் துளிர். அப்படி எத்தனையோ செய்திகளின் ஒன்றாகத்தான் செப்டம்பர் 16 ஆம் தெதி ஒரு செய்தி வந்தது. அது நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் இரண்டு வயது மகள் ஹரிணி காணாமல் போனார் என்பது.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் (நாடோடி) இனத்தம்பதி தான் வெங்கடேசன் - காளியம்மாள். இவர்களது இரண்டு வயது செல்ல மகள்தான் ஹரிணி. ஹரிணி காணாமல் போன அன்று அணைக்கட்டு காவல் நிலையம் அருகே வெங்கடேசனும், காளியம்மாளும் இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில் பார்த்த போது அருகே படுத்து இருந்த ஹரிணியை காணவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்த தம்பதி பதறி போய் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தங்களது மகள் ஹரிணி கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் நகர போவதில்லை என்று அங்கேயே தங்கி விட்டனர்.

ஹரிணி காணாமல் போன செய்தியை தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் மூலை முடுக்கெல்லாம் பரப்பின. ஹரிணியின் செய்தியை அனைவராலும் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹரிணி காணாமல் போன செய்தி சமூக வலைதளங்களிலும் எதிரொலிக்கத்தொடங்கின. ஹரிணியின் போட்டோக்களுடன் கூடிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடத்தொடங்கினர். இதற்கிடையில் கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற சமூக அமைப்பு ஹரிணியைக் கண்டுப்பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவித்தனர். அதனை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, மாவட்ட வாரியாக நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வந்தனர். நாட்கள் ஓடியதே தவிர ஹரிணி விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. 

ஆனாலும் காவல்துறையினரும், தனியார் தொண்டு நிறுவனங்களும் முழு மூச்சுடனே ஹரிணியை தேடி வந்தனர். குழந்தை மாயமான நேரத்தில் அங்கிருந்து கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் பதிவான மர்ம நபர் ஒருவர் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டனர். இப்படி அடுத்தடுத்த தகவல்கள், போலீசாரின் தொடர் விசாரணை என ஹரிணி விவகாரம் மேலும் சுறுசுறுப்படைந்தது.

ஹரிணி காணாமல் போய் 90 நாட்களைக் கடந்த நிலையில் திருப்போரூர் பகுதியில் குழந்தை இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கே ஒருவரது வீட்டில் இருந்த ஹரிணியை மீட்டனர். குழந்தையை கடத்தியதாக பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். குழந்தை இல்லாத தனது நண்பருக்கு ஹரிணியை கடத்தி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார் பிரகாஷ்.

இந்நிலையில் மூன்று மாதமாக ஹரிணியை வளர்த்த சங்கீதா என்ற பெண்மணியும் பெருஞ்சோகத்தில் உள்ளார். ஹரிணி குறித்து பேசிய அவர், எனக்கு குழந்தை இல்லை. அப்போது தான் எங்களது நண்பர் பிரகாஷ் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். அப்படி கொஞ்ச நாள் கழித்து ஹரிணியை கொண்டுவந்து கொடுத்தாங்க. ஹரிணி என்னை அம்மா.. அம்மான்னு தான் கூப்பிடுவா. அவள் என் குழந்தையாகவே மாறிவிட்டாள்.  அவளுக்கு காது குத்தி கம்மல் போட்டோம், கொலுசு போட்டோம். எங்கள் வீட்டில் டிவி இல்லாததால் ஹரிணி குறித்து எதுவும் தெரியவில்லை. பின்புதான் ஹரிணி கடத்தல் குறித்து தெரிந்தது. ஆனாலும் என் மகளாகவே ஆகிவிட்ட ஹரிணியை கொடுக்க மனசில்லை. ஆனால் ஹரிணி விவகாரத்தில் அதற்கு பின் என் கணவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. பின்பு ஹரிணியை கொண்டுபோய் கொடுத்துவிடலாம் என்று யோசித்தோம். அப்போது தான் காவல்துறையினர் வந்து ஹரிணியை மீட்டு சென்றனர். ஹரிணி என்னிடம் இருந்து பிரியும் போதும் அம்மான்னு தான் அழுதுகொண்டே போனாள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் குழந்தையை கொன்ற தந்தை, கள்ளக்காதலுக்காக குழந்தையை கொலை செய்த தாய் என்றெல்லாம் செய்தி வரும் அதே வேளையில் குழந்தை இல்லை என்று ஹரிணியை வளர்த்து அது கடத்தப்பட்ட குழந்தை என்று கண்ணீர் ததும்ப நின்ற சங்கீதாவும், மூன்று மாதமாக பெற்ற மகளை காணவில்லை என்று தவித்து போன காளியம்மாவும் ஏதோ ஒரு உணர்வாகவே நம் முன்னே நிற்கிறார்கள். எல்லாம் கடந்து, 100 நாட்கள் கழித்து பெற்றவர்களிடம் ஹரிணி வந்து சேர்ந்துவிட்டாள் என்பது அனைவருக்குமே அத்தனை பெரிய மகிழ்ச்சி தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com