பம்பாயில் பாட்ஷா பாயாக வலம் வந்த ரஜினிகாந்த் சென்னையில் மாணிக்கமாக சாதுவான ஆட்டோ டிரைவராக அடக்கி வாசித்து பாட்ஷா படத்தில் நடித்திருப்பார். அந்த நிலை தான் இப்போது அதிரடி பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும். சர்வதேச கிரிக்கெட் களத்தில் பாட்ஷா பாயாக வலம் வந்த மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் சீசனில் மாணிக்கமாகி உள்ளார்.
“ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரரான மேக்ஸ்வெல்லுக்கா இந்த நிலை?”, “நீங்கள் மேக்ஸ்வெல் தானா?, “உங்களுக்கு பேட்டிங் செய்யவே வராதா?” என அவரது பர்பாமென்ஸை பார்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள். என்றுமே அதிரடி காட்டும் மேக்ஸ்வெல் தடுமாறுவது ஏன்? மேக்ஸ்வெல்லுக்கும் ஐபிஎல்லுக்கும் இடையிலான பந்தம் கடந்த 2012 சீஸனில் ஆரம்பமானது.
முதலில் டெல்லி அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் 2013 சீஸனில் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார்.
தொடர்ந்து 2014 முதல் 2017 சீஸன் வரை பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். 2018 சீஸனில் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடினார். தற்போது பஞ்சாப் அணிக்காக நடப்பு சீஸனில் விளையாடி வருகிறார். தனது கிரிக்கெட் கெரியரை டி20 போட்டிகளில் இருந்து பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் மேக்ஸ்வெல்.
விக்டோரியா அணிக்காக 2010இல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய மேக்ஸ்வெல் கிரிக்கெட் கதகளி ஆட்டத்தை ஆடி இருப்பார். தொடர்ந்து டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தி அதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தவர், அக்மார்க் டி20 கிரிக்கெட்டராக மாறினார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஆல் ரவுண்ட் பர்பாமென்ஸ் கொடுப்பார். அதிவேக சதம், அரைசதம் என உள்ளூர் கிரிக்கெட்டில் துவங்கி உலக கிரிக்கெட் வரை பல சாதனைகளை படைத்துள்ளார். மாஸான மாடர்ன் டே கிரிக்கெட்டரான மேக்ஸ்வெல் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை கொடுத்து தனது ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றவர்.
ஐபிஎல் ஆட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த வீரர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவராக இருப்பது அதன் சேம்பிள் தான். முதல் இரண்டு ஐபிஎல் சீஸன்களில் ஆடும் லெவனில் அதிகம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த மேக்ஸ்வெல் 2014 சீஸனில் பஞ்சாப் அணிக்காக ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்.
இதே அமீரக மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டம் ஒன்றில் 43 பந்துகளில் 95 ரன்களை குவித்து மிரட்டியிருப்பார். அதன் மூலம் 206 ரன்களை 18.5 ஓவர்களில் சேஸ் செய்திருக்கும் பஞ்சாப். அந்த சீஸனில் ராஜஸ்தானுக்கு எதிராக 89 ரன்கள், ஹைதராபாத் அணிக்கு எதிராக 95 ரன்கள், மீண்டும் சென்னைக்கு எதிராக 90 ரன்கள் என பதினாறு ஆட்டங்கள் விளையாடி 552 ரன்களை மேக்ஸ்வெல் குவித்திருப்பார். நிஜமான பந்தய குதிரையாக பஞ்சாப்புக்காக விளையாடியிருப்பார்.
தொடர்ந்து 2015 மற்றும் 2016 சீஸனில் சொதப்பிய மேக்ஸ்வெல் 2017 சீஸனில் 310 ரன்களை குவித்திருப்பார். பின்னர் டெல்லி அணிக்காக விளையாடிவரை நடப்பு சீஸனில் பஞ்சாப்புக்காக விளையாட 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்கள். நடப்பு சீஸனில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் வெறும் 48 ரன்களை மட்டுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக பாஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் ஓப்பனிங்கில் பட்டையை கிளப்பி வருகின்றனர். ஆனால் சேஸ் செய்கின்ற போது மிடில் ஆர்டரில் கைகொடுக்க வேண்டிய மேக்ஸ்வெல் தடுமாறி வருகிறார். அந்த தடுமாற்றம் அவர் மீது விமர்சனங்களை எழுப்பி உள்ளன.
அவரது தடுமாற்றத்திற்கு கொரோனா பொது முடக்கம் காரணமா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என சொல்லலாம். அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் 90 பந்துகளில் 108 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார் மேக்ஸ்வெல். அதே தொடரின் முதல் ஆட்டத்தில் 59 பந்துகளில் 77 ரன்களை குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமீரக மைதானங்களில் மேக்ஸ்வெல் தடுமாறுகிறாரா என பார்த்தாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2014 ஐபிஎல் சீஸனின் முதற்பாதி ஆட்டங்கள் அமீரகத்தில் தான் நடந்தன. அதில் தான் அவர் சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் அதிரடி காட்டியிருப்பார்.
இப்படி அனைத்துமே பிளஸ்ஸாக கொண்டுள்ள மேக்ஸ்வெல் மனது வைத்தால் மட்டுமே இந்த சீஸனின் பிற்பாதி ஆட்டங்களிலாவது பஞ்சாப் அணிக்காக மேட்ச் வின்னராக ஜொலிக்க முடியும். அப்படி செய்தால் அது மேக்ஸ்வெல்லுக்கும், பஞ்சாப்புக்கும் நல்லதாக அமையலாம். மீண்டும் பழைய பாட்ஷாவாக மேக்ஸ்வெல் மாறுவாரா? அல்லது சாதுவாகவே அடிவாங்கிக் கொண்டிருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.