எப்படி இருக்கிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்? - ப்ளஸ், மைனஸ் அலசல்

எப்படி இருக்கிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்? - ப்ளஸ், மைனஸ் அலசல்
எப்படி இருக்கிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்? - ப்ளஸ், மைனஸ் அலசல்
Published on

திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தோழமைக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக 173 தொகுதிகளில் களம் காண்கிறது. வேட்பாளர் பட்டியலில் திமுக வியூகம் எத்தகையது என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 173 தொகுதிகளில் 14 இடங்களில் பாஜகவை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிடுகிறது. 120 இடங்களில் அதிமுகவை நேருக்கு நேராக எதிர்க்கிறது. மேலும், 12 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் என்பவர் போட்டியிடுகிறார். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களமிறங்குகிறார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர்.

திமுகவின் வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிக இடங்களில் திமுகவே களமிறங்குகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட வாரிசுகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், பெரும்பாலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் கூறுகையில், “வெற்றியை நோக்கியே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவும் பிரபலமானவர்களுக்கே சீட் கொடுத்துள்ளது. அரசியல் ரீதியிலான போட்டி என்பதால் திமுகவின் குரலே தேர்தலில் எதிரொலிக்கும் என நான் கருதுகிறேன்” என்றார்.

அரசியல் விமர்சகர் ஜெகதீஷ்வரன் கூறுகையில், “2011 மற்றும் 2016 தேர்தல்களில் கற்றுக்கொண்ட பாடங்களை திமுக செயல்படுத்தியுள்ளது. பக்கத்து தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவே தக்கவைத்துக்கொண்டுள்ளது. புதிய முகங்களை வேட்பாளர் பட்டியலில் பார்க்க முடிகிறது. உதயநிதியை தவிர வாரிசுகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. யார் வெற்றி பெறுவார்கள் என பார்த்து பார்த்து சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் களத்தில் இறங்கி வேலை செய்தார்களோ, அவர்களுக்குதான் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. போடி தொகுதியில் தங்க தமிழ்செல்வனுக்கு சிரமம் இருக்கும். பாஜகவோடு மோதும் 14 தொகுதிகளில் வெற்றி வசம் திமுகவிற்கே இருக்கிறது.

அதிமுகவோடு நேரடியாக மோதும் 120 தொகுதிகளில் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அமைச்சர்கள் கூட சில தோல்வியை தழுவுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “பெரும்பாலும் தற்போதைய எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓரளவுக்கு புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பழைய முகங்களை ஒதுக்குவார் என எதிப்பார்க்கபட்ட நிலையில் அவ்வாறு ஸ்டாலின் செய்யவில்லை. வலிமையான கூட்டணியை கட்டமைத்திருக்கிறார். ஆனால், வேட்பாளர்கள் தேர்வில் பெரிதாக பாராட்டும்படி இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com