ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு ஓபிஎஸ்சை தன்பக்கம் இழுத்தார் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ். அப்போது பன்னீர்செல்வத்திற்கு அரசாங்கத்தில் துணை முதல்வர் பதவியும் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் பெயரளவில் மட்டுமே அந்த பதவிகளில் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு முடிவுகளிலும் இபிஎஸ் கையே ஓங்கி இருந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கமே நின்றனர். இதனால் ஒபிஎஸ் - இபிஎஸ் மத்தியில் சுமூக உடன்பாடு இல்லை என்ற சூழலே தற்போது வரை நிகழ்ந்து வருகிறது. இது அப்பட்டமாக அப்படியே வெளியில் தெரிந்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல செயல்படுவதாக அந்த கட்சியின் தலைவர்கள் முட்டுக்கொடுத்து வந்தனர்.
இதையடுத்து வந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்விலும் சரி, தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் தேர்விலும் சரி ஓபிஎஸ்தான் இபிஎஸ்க்கு விட்டுக்கொடுத்தார். தன்னால் அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அமைதியாக கடந்து செல்வதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவியது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் தனித்து செயல்பட்டுவருவதாகவும் அவரது கை ஓங்கியிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவு நாட்கள் கூட்டறிக்கை மட்டுமே விட்டு வந்த அதிமுக தலைமையில் தற்போது ஓபிஎஸ் தொடர்ச்சியாக தனித்து அறிக்கை விட தொடங்கியிருக்கிறார். அண்மையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அதில் எப்படியாவது ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. அதனால்தான் அவர் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறார் என கூறப்பட்டது.
சி.வி.சண்முகம் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்தபோது கூட முந்திக்கொண்டு உடனே ஓபிஎஸ் பாஜக கூட்டணி தொடர்வதாக அறிக்கை வெளியிட்டார். சிலமணி நேரங்களில் இபிஎஸ்சையும் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை ஓபிஎஸ் ஐயா என கோஷங்கள் எழுப்பினர். இதனால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. இனிவரும் காலங்களில் அதிமுகவில் ஒற்றை தலைமையை நோக்கி பயணிக்குமா? அது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “அதிமுக எந்த நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. நிறைய பேர் கட்சியில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கின்றனர். சசிகலாவுடன் யாரும் பேசக்கூடாது; பேசினால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவோம் என்ற தீர்மானத்தை அதிமுக அனைத்து மாவட்டங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் அதில் சில மாவட்டங்களில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை. சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்பது போன்ற பிம்பத்தை பழனிசாமி உருவாக்குகிறார். ஆனால் ஒபிஎஸ் தரப்பில் இருந்து எவ்வித கருத்தும் வெளியாகவில்லை. அதிமுக தோல்விக்கு காரணம் என்ன? ஒற்றை தலைமை குறித்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்பது போன்ற கேள்விகளே தொண்டர்கள் மத்தியில் உள்ளது” என்றார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகையில், “ஒற்றை தலைமை சர்ச்சை என்பது எம்.ஜி.ஆர் காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு பொதுச்செயலாளராக வேறு ஒருவர் நிற்கவைக்கப்படும்போது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றை தலைமை தேவை என்ற கருத்துதான் நிலவியது. 1980 க்கு பிறகு ஆட்சிக்கும் கட்சிக்கும் ஒற்றைத்தலைமையாக மாற்றப்பட்டது. தற்போது ஆட்சி இல்லை. கட்சி மட்டும்தான். ஒற்றைத்தலைமையாக இருந்தால்தான் கட்சி நன்றாக இருக்கும் என தொண்டர்கள் நினைப்பது இயல்புதான்.
ஆனால் அதிமுகவில் இனி ஒற்றைத்தலைமை என்பது சாத்தியமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஜெயலலிதா கூட பன்னீர்செல்வத்தை ஒருமுறை எதிர்க்கட்சி தலைவராக்கினார். இது இரட்டை தலைமைக்கு வழிவகுக்கும் என கருத்து எழுந்தது. இதனால் பன்னீர்செல்வத்தை பதவி விலகவைத்துவிட்டு பின்னர் ஜெயலலிதாவே எதிர்க்கட்சி தலைவரானார். இதுதான் வரலாறு” எனத் தெரிவித்தார்.