தென் மாநிலங்களின் வருவாயை கொள்ளையடிக்கிறதா மத்திய அரசு?

தென் மாநிலங்களின் வருவாயை கொள்ளையடிக்கிறதா மத்திய அரசு?
தென் மாநிலங்களின் வருவாயை கொள்ளையடிக்கிறதா மத்திய அரசு?
Published on

நிதி பகிர்மானம், சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரங்களில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே வரியை எப்படி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து மத்திய நிதி ஆணையம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவு செய்கிறது. இதில், மக்கள் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக வரி வழங்கப்படுகிறது. மக்கள் தொகையைக் குறைக்க மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களது இந்த முறை நியாயமற்றதாக உள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டுகள் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது. தமிழகம் உட்பட அனைத்து தென் மாநிலங்களும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் இதனை தொடங்கி வைத்தன. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அந்த நெருப்பை பிடித்துக் கொண்டன. தமிழக அரசும் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. 

இது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தென் மாநிலங்களின் வருவாய் மூலம் பெறப்படும் வரியை வடமாநிலங்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க ஆலோசனை செய்யப்பட உள்ளது. நிதி பகிர்மானத்தில் தென் மாநிலங்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்தினால், திருப்பி எவ்வளவும் கிடைக்கிறது என்பதில் பாரபட்சம் காட்டப்படுவது என்பதுதான். தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவுக்கு ஒரு ரூபாய்க்கு வெறும் 50 பைசாவுக்கும் குறைவாகதான் கிடைக்கிறது. வடமாநிலங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் மேலே வழங்கப்படுகிறது.

நிதிபகிர்மான விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது சுங்க கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தச் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுங்கக்கட்டணத்தை மத்திய் அரசு உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது என தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று அவர் கூறுகின்றனர். சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com