2005-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஆட்டிப்படைத்த இரண்டு நாடுகள் என்றால், அவை ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும்தான் என்று கூறலாம். இவ்விரு அணிகளுடன் எந்த நாடு மோதினாலும் அவர்களை துவம்சம் செய்யக் கூடிய வகையில் பலம் வாயந்தவர்களாக இருந்தனர். அந்த நேரத்தில்தான் இரு சமபலம் கொண்ட அணிகள் மோதக் கூடிய வாய்ப்பு உருவானது. 2005 - 2006-இல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உன்னிப்பாக கவனித்தது.
அப்போது, ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ரிக்கி பான்டிங்கும், தென்னாப்பிரிக்காவுக்கு க்ரீம் ஸ்மித்தும் கேப்டனாக இருந்தனர். ஒரு கிரிக்கெட் போட்டியில் ஏதாவது ஒரு சில தருணம் கெத்தாக இருக்கும். ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியில் நிகழ்ந்த அனைத்து தருணமும் கிரிக்கெத்துதான். அப்படியொரு போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் மார்ச் 12 ஆம் தேதி, 2006-இல் நடந்தது. போட்டி தொடங்கும் முன்பு இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியாகப் போகிறது என்பது கிரிக்கெட் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை.
ஃப்ளாஷ்பேக்
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் நான்கு போட்டிகள் முடிவில் 2-2 என்கிற வெற்றியின் கணக்கில் இரு அணிகளும் சம பலத்தில் இருந்தன. இறுதிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருந்தன. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற 5-ஆவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஆட்டம் துவங்கியதில் இருந்தே ரன் மழை பொழிந்தது ஆஸ்திரேலியா.
தொடக்க ஆட்டக்கராரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் கேட்டிச் இருவரும் தென்னாப்பிரிக்க புவலர்களின் பந்துகளை விளாசித் தள்ளினர். 15.2 ஒவர்களில் 97 ரன்கள். அப்போதுதான் தென்னாப்பிரிக்கா அணியால் தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால், அடுத்து வந்த ரிக்கி பான்டிங் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடினார். அபாரமாக ஆடிய பாண்டிங் 164 ரன்களைக் குவித்தார், அதில் 13 பவுண்டரி, 9 சிக்ஸ் என மாஸ் காட்டினார். 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 434. ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் 55, சைமன் கேட்டிச் 79, மைக்கல் ஹசி 81 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஒருநாள் போட்டிகளில் ஓர் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
இவ்வளவு பெரிய இலக்கை நிச்சயம் தென்னாப்பிரிக்காவால் சேஸ் செய்ய முடியாது என பலரும் நினைத்தார்கள். ஆஸ்திரேலியா உலக சாதனை செய்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. அதற்கு ஏற்றார்போல சேஸ் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா தன்னுடைய தொடக்க ஆட்டக்காரரை 1 ரன்னில் இழந்தது. அனைவரும் அவ்வளவுதான் என்று எண்ணிய நேரத்தில் கேப்டன் கிரீம் ஸ்மித் உடன் கிப்ஸ் இணைந்தார். அதிரடி சரவெடி ஆரம்பமானது. இருவரும் பந்துகளை நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டனர்.
ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதத்தை விட மிக வேகமாக ஸ்கோர் ஏறியது. 22.1 ஓவரில் ஸ்கோர் 190 ஆக இருக்கும்போது ஸ்மித் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். என்றாலும், ரன் விகிதம் குறைந்தபாடில்லை. 23 ஓவரிலேயே ஸ்கோர் 200 தொட்டது தென்னாப்பிரிக்கா. 32-ஆம் ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் சிறப்பாக விளையாடி வந்த கிப்ஸ் 175 ரன்கள் (21 பவுண்டரி, 7 சிக்ஸ்) எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 299 ஆக இருந்தது. கிப்ஸ் ஆட்டமிழந்ததும் தடுமாறிய தென்னாப்பிரிக்கா கொஞ்சம் அமைதி காத்து பொறுமையாக மேல் எழுந்தது.
42.2 ஓவரில் ஆறாம் விக்கெட் விழ ஸ்கோர் 355/6 என்றானது. அப்போதும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அடுத்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் அப்படி நினைக்கவில்லை. வான் தர் வாத் 20 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க, அடுத்து இறங்கிய டெலிமாகஸ் 6 பந்துகளில் 12 ரன்கள் குவித்தார். மீண்டும் ரன் மழை பொழியத் துவங்கியது. 46.4 ஓவரில் 400 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் மார்க் பவுச்சர் நின்று விளையாடினார். 47 ஓவர்கள் முடிந்த போது, 30 ரன்கள் தேவைப்பட்டன. 48 ஓவர்கள் முடிந்த போதோ 13 ரன்களே தேவைப்பட்டன. 49-ஆம் ஓவரில் டெலிமாகஸ் அவுட்டாக ஸ்கோர் 428/8 என்றானது. வெற்றி பெற இன்னும் 7 ரன்கள் தேவைப்பட்டன.
இறுதி ஓவரை பந்து வீச பிரெட் லீ வீசினார். முதல் பந்தில் பவுச்சர் ஒரு ரன் எடுத்தார். 5 பந்துகளில் 6 தேவை என்றானது. இரண்டாம் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹால். 4 பந்துகளில் 2 தேவை என்றானது ரசிகர்கள் மூச்சுக்காற்று சூடாகி ஜோகனஸ்பர்க் ஆடுகளம் பரபரப்பானது. ஆனால், அதற்கடுத்த பந்திலேயே ஹால் ஆட்டமிழந்தார். ரசிகர்களின் ரத்தக்கொதிப்பு அதிகமானது. இப்போது 3 பந்துகளில் 2 தேவை. எளிதாய் வெல்லலாம் என்றாலும், ஒரே விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது. பவுச்சரும் எதிர் முனையில் இருந்தார். ஆனால் சமாரத்தியமாக நான்காம் பந்தை வீணாக்காமல் ஒரு ரன் எடுத்து பவுச்சருக்கு வழி விட்டார் நிட்னி. இரு தரப்பும் ஒரே ஸ்கோர். கடைசி பந்தை எதிர்கொண்ட பவுச்சர் அபாரமாக விளாசி பவுண்டரி அடித்து தென்னாப்பிரிக்காவின் சாதனை நாயகனானார். இறுதியில் தென்னாப்பிரிக்கா 438 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.